

மாதத்தின் தொடக்கத்தில் நடுத்தரக் குடும்பத்தினர் போடும் பட்ஜெட் கணக்குகள் அனைத்தும் மாத இறுதிக்குள் தவிடுபொடியாகி விடுகின்றன. குழம்பு, சட்னி தொடங்கி பிரியாணி வரை அன்றாட சமையலுக்கு தேவைப்படும் வெங்காயத்தைக் கண்டாலே இப்போது கண்ணீர் வருகிறது. ஒரு கிலோ வெங்காயம் மொத்த சந்தையில் ரூ.25-லிருந்து ரூ.60 வரையில் உயர்ந்து, சராசரி நடுத்தரக் குடும்பத்தின் தூக்கத்தைக் கெடுத்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பரில் தொடங்கும் பண்டிகைக் காலம் வந்துவிட்டாலே அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏவுகணை போல் உயர்வது வழக்கமாகிவிட்டது. இதற்கு முன்பெல்லாம் இத்தகைய சூழலைச் சமாளிக்க, மத்திய அரசு முன் கூட்டியே வெங்காயத்தைச் சேமித்து வைத்து, பண்டிகைக் காலத்தில் சந்தையில் வெளியிட்டு விலையைக் கட்டுக்குள் வைக்கும். ஆனால், இந்த முறை பண்டிகைக் காலம் தொடங்குவதற்கு முன்பாகவே, இருப்பு வைத்த வெங்காயத்தைச் சந்தைக்குக் கொண்டுவர வேண்டிய கட்டாயத்துக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது.
சில்லறை விலை எவ்வளவு?
மத்திய நுகர்வோர் விவகாரத் துறை புள்ளிவிவரப்படி, தேசிய அளவில் வெங்காயத்தின் சராசரி சில்லறை விலை கிலோ ரூ.42-ஆக உள்ளது. இது கடந்த ஜூலை மாத விலையை விட 19 சதவீதம் அதிகம். கடந்த ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் 45 சதவீதம் அதிகமாகும்.
தலைநகர் டெல்லியில் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.65-க்கும், சென்னையில் ரூ.58-க்கும் விற்கப்படுகிறது. கடந்த ஆண்டு சென்னையில் இதன் விலை ரூ.33 ஆக மட்டுமே இருந்தது. மொத்த சந்தையில் வெங்காயம் குவிண்டால் ரூ.2,897 ஆக விலை உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 118 சதவீதம் விலை ஏற்றமாகும்.
விலை உயர முக்கியக் காரணங்கள் என்ன?
இந்தியாவில் வெங்காய விநியோகம் பருவ காலச் சுழற்சியில் நடக்கிறது. மார்ச்-ஏப்ரல் மாதங்களில் அறுவடை செய்யப்படும் 'ராபி' பருவ வெங்காயமே மத்திய அரசின் முக்கிய இருப்பாகும். ஆனால், இந்த ஆண்டு எல் நினோ தாக்கம், பருவம் தவறிய மழை மற்றும் ஆலங்கட்டி மழையால் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் விளைச்சல் பாதியாகக் குறைந்தது. இதனால் சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்ட வெங்காயத்தின் அளவும் வெகுவாகக் குறைந்துவிட்டது.
அடுத்ததாக அக்டோபரில் தொடங்கும் பிரதான 'கரீஃப்' அறுவடைக்கு முன் ஏற்படும் தட்டுப்பாட்டை நிரப்ப கர்நாடகா, தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து வரும் சிறிய அளவிலான கரீஃப் வெங்காய வரத்து உதவும். ஆனால், இந்த ஆண்டு மகாராஷ்டிராவில் பருவமழை தாமதமாகத் தொடங்கியதால், புதிய கரீஃப் வெங்காய வரத்தும் தாமதமாகிறது. குறிப்பாக, ஆந்திராவின் கர்நூல் மற்றும் மகாராஷ்டிராவின் நாசிக் ஆகிய முக்கிய வர்த்தக மையங்களிலிருந்து வரத்து குறைந்ததால், மொத்தச் சந்தையில் 10 கிலோ கொண்ட வெங்காயச் சாக்கு ரூ.500 வரை விற்கப்படுகிறது.
மத்திய அரசின் நடவடிக்கைகள்
வெங்காய விநியோகத்தை உயர்த்த குறைந்தபட்ச உறுதியளிப்பு விலையை அரசு 108 சதவீதம் வரை உயர்த்தி, கிலோ ரூ.26.45-க்கு கொள்முதல் செய்ய முன்வந்தது. இருப்பினும், நாசிக் சந்தையில் தினசரி விலை அதிவேகமாக உயர்ந்ததால், அரசு நிர்ணயித்த 2 லட்சம் டன் இலக்கில் 25 சதவீதம் குறைவாகவே கொள்முதல் செய்ய முடிந்தது.
இதனை ஈடுகட்டவும், சில்லறை விலையைக் கட்டுப்படுத்தவும் நாசிக்கில் இருந்து டெல்லி, சென்னை, கொச்சி, குவஹாட்டி போன்ற முக்கிய நகரங்களுக்கு 'கந்தா எக்ஸ்பிரஸ்' சிறப்பு ரயில்கள் மூலம் வெங்காயம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
சர்க்கரை விலையும் உயர்வு... ஏன்?
சமையலறையின் மற்றொரு அத்தியாவசியப் பொருளான சர்க்கரையின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் கிலோ ரூ.40 முதல் ரூ.45 வரை விற்கப்பட்ட சர்க்கரை, தற்போது சில்லறை விற்பனை கடைகளில் ரூ.65 முதல் ரூ.80 வரை விலை உயர்ந்துவிட்டது. சீரற்ற மழைப்பொழிவால் கரும்பு விளைச்சல் மற்றும் உற்பத்தி பாதிப்படைந்ததே இதற்கு முதன்மைக் காரணம்.
கடந்த 2025-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 50 லட்சம் டன் சர்க்கரை கையிருப்பில் இருந்த நிலையில், தற்போது அது 35 லட்சம் டன்னாகக் குறைந்துவிட்டது. வரும் நாட்களில் இருப்பு மேலும் 20 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது. எனவே, அடுத்து வர இருக்கும் விநாயகர் சதுர்த்தி, தீபாவளி பண்டிகை காலத்தில் இனிப்புகளின் விலை உயர்ந்து நுகர்வோருக்குச் சிக்கல் வராமல் இருக்க, 10 ஆண்டுகளுக்குப் பிறகு 10 லட்சம் டன் சர்க்கரையை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. மேலும், இனிப்புக் கடைகள் மற்றும் குளிர்பானத் தொழிற்சாலைகள் 15 நாட்களுக்கு மேல் சர்க்கரையை இருப்பு வைக்கக் கூடாது எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
நடுத்தரக் குடும்பங்கள் மீதான தாக்கம்:
ஒரு சராசரி நடுத்தரக் குடும்பத்தைப் பொறுத்தவரை, ஏதேனும் ஒரு பொருளின் விலை உயர்வது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால், பல அத்தியாவசியப் பொருட்கள் ஒரே நேரத்தில் விலையேறும்போது மாதாந்திர பட்ஜெட்டில் பெரிய பாதிப்பு ஏற்படுகிறது.
உதாரணமாக, நான்கு நபர்கள் கொண்ட ஒரு குடும்பத்திற்கு மாதம் 5 கிலோ வெங்காயமும் 5 கிலோ சர்க்கரையும் தேவைப்படுகிறது என வைத்துக்கொள்வோம். வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ரூ.25-லிருந்து ரூ.60-ஆக உயரும்போது, அதற்கான செலவு ரூ.125-ல் இருந்து ரூ.300-ஆக அதிகரிக்கும். அதேபோல, சர்க்கரை விலை ரூ.45-ல் இருந்து ரூ.75-ஆக உயரும்போது, கூடுதல் செலவாக ரூ.150 வரை அதிகரிக்கும்.
தனித்தனியாகப் பார்க்கும்போது இவை சிறிய தொகையாகத் தோன்றினாலும், காய்கறிகள், சமையல் எண்ணெய் மற்றும் இதர மளிகைப் பொருட்களின் விலையும் உடன் சேரும்போது, மாதச் செலவு ரூ.1,000 வரை அதிகரித்து, நடுத்தரக் குடும்பங்களை கடுமையான நிதி நெருக்கடிக்கு ஆளாக்குகிறது.
வரும் செப்டம்பர்-அக்டோபர் பண்டிகைக் காலத்தில் தேவை அதிகரிக்கும் என்பதால், புதிய கரீஃப் வரத்து வரும் வரை வெங்காயத்தின் சராசரி விலை உயர்ந்தே காணப்படும். சமையலறை என்பது ஒரு குடும்பத்தின் நிதிச்சுமை மற்றும் உடல் ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கும் இடம் என்பதால், அங்கு ஏற்படும் விலைவாசித் தீயை அணைக்க அரசு தொடர்ந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே சாமானியர்களின் எதிர்பார்ப்பாகும்.