மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்கள்: இந்திய விவசாயத்தில் நிகழுமா மாற்றம்?

மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்கள்: இந்திய விவசாயத்தில் நிகழுமா மாற்றம்?
Updated on
2 min read

பருவமழை பொய்த்தாலும், பூச்சிகளின் தாக்குதல் தீவிரமடைந்தாலும் நம் நாட்டு விவசாயிகள் இனி கலங்க வேண்டியதில்லை. இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் (ICAR) விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள புதிய ‘மரபணு திருத்தப்பட்ட நெல்’ (Gene-Edited Rice) ரகங்கள் விரைவில் வயல்களில் அறிமுகமாக உள்ளன.

 இந்திய நெல் வேளாண்மையின் எதிர்காலத்தையே மாற்றியமைக்கக்கூடிய ஒரு பிரம்மாண்ட தொழில்நுட்பப் புரட்சி, இப்போது நம் வயல் வரப்புகளில் வந்து நிற்கிறது.

மரபணு திருத்தம் என்றால் என்ன?

மரபணு திருத்தம் என்பது ஒரு நவீன தாவர இனப்பெருக்க நுட்பமாகும். அதிக மகசூல், பூச்சிகள் தாக்குதல் மற்றும் நோய் எதிர்ப்புத் திறன், வறட்சி அல்லது உப்பு நீரைத் தாங்கும் திறன் மற்றும் மேம்பட்ட ஊட்டச்சத்துத் தரம் போன்ற பண்புகளை உள்ளடக்கி, ஒரு தாவரத்தின் இயல்பான மரபணுக்களில் துல்லியமான மாற்றங்களைச் செய்வதுதான் மரபணு திருத்தமாகும்.

அதாவது, ஒரு தாவரத்தில் அடையாளம் காணப்பட்ட அதன் சொந்த மரபணுக்களில் உள்ள குறிப்பிட்ட டி.என்.ஏ-க்களை நீக்குதல் அல்லது மாற்றுதல் போன்ற துல்லியமான பணிகளை மேற்கொள்வது. இந்தத் தொழில்நுட்பம் ஏற்கெனவே களத்தில் உள்ள பிரபல ரகங்களின் சாதகமான பண்புகளைத் தக்கவைத்துக் கொண்டு பயிர் மேம்பாட்டுக்கு அனுமதிக்கிறது. இதன் மூலம் நிலையான விவசாயமும் உணவுப் பாதுகாப்பும் சாத்தியமாகும்.

இந்தியாவில் புதிய நெல் ரகங்கள்:

இந்தியா தற்போது மரபணு திருத்தம் செய்யப்பட்ட இரண்டு முக்கிய நெல் ரகங்களை அறிமுகம் செய்கிறது. அவை:

புஷா நெல் டிஎஸ்டி1 (Pusa Rice DST1):

இந்த ரகத்தை இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (IARI) ஆகியவை இணைந்து 'எம்டியு 1010' என்ற நெல் ரகத்திலிருந்து மேம்படுத்தியுள்ளன. தென் மாநிலங்களில் ராபி பருவகாலத்தில் இது நல்ல விளைச்சலைத் தந்துள்ளது. வறட்சி மற்றும் உப்பு நீரைத் தாங்கி வளர வேண்டும் என்ற நோக்கில் இது கொண்டுவரப்படுகிறது. பல்வேறு உப்புத்தன்மை கொண்ட மண்ணில் இது 9.66 சதவீதம் முதல் 30.4 சதவீதம் வரை கூடுதல் மகசூல் தரும் எனக் கள சோதனைகளில் தெரியவந்துள்ளது.

டிஆர்ஆர் தான் 100 (கமலா) (DRR Dhan 100):

இந்த ரகத்தை ஹைதராபாத்தில் உள்ள ICAR நிறுவனம், ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் ‘சம்பா மசூரி’ (BPT 5204) நெல்லிலிருந்து உருவாக்கியுள்ளது.

ஒவ்வொரு கதிரிலும் நெல் மணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், சைட்டோகைனின் (Cytokinin) மரபணு மாற்றப்பட்டுள்ளது. வழக்கமான ரகத்தை விட 20 நாட்கள் முன்கூட்டியே (130 நாட்களில்) இந்த ரகம் அறுவடைக்கு வந்துவிடும். இதன் வலுவான தண்டுகளால் மழைக்காலத்தில் பயிர் சாய்ந்து விழும் வாய்ப்பும் குறைவு.

 இந்தப் புதிய நெல் ரகங்கள் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, கேரளா, சத்தீஸ்கர், ஒடிசா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் பயிரிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மரபணு மாற்றம் (GM) - மரபணு திருத்தம் (GE) வேறுபாடு:

 மரபணு மாற்றம் மற்றும் மரபணு திருத்தம் ஆகிய இரண்டுமே ஒரு தாவரத்தின் டி.என்.ஏ-வில் திருத்தம் செய்வதை அடிப்படையாகக் கொண்டவைதான்.

மரபணு மாற்றப்பட்ட பயிர்களில் (GM Crops) மற்றொரு உயிரினத்தின் மரபணு தாவரத்தினுள் செலுத்தப்படுகிறது. உதாரணமாக, பி.டி. பருத்தியில் (Bt Cotton) பாக்டீரியாவிலிருந்து பெறப்பட்ட மரபணுக்கள் சேர்க்கப்பட்டன.

மரபணுத் திருத்தத்தில் (Gene Editing): தாவரத்தில் ஏற்கனவே உள்ள ஒரு மரபணுவில் குறிப்பிட்ட அளவுக்கு மாற்றம் செய்யப்படுகிறது. புதிதாக வேறு எந்த உயிரினத்தின் மரபணுவும் சேர்க்கப்படுவதில்லை. இது எஸ்டிஎன்-1, எஸ்டிஎன்-2, எஸ்டிஎன்-3 எனப் பல்வேறு நிலைகளில் மேற்கொள்ளப்படுகிறது.

மரபணு திருத்தம் குறித்த அச்சங்களும் சந்தேகங்களும்:

 புதிய நெல் ரகங்கள் குறித்து வேளாண் அறிவியல் வல்லுநர்கள் மத்தியில் சில முக்கிய கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன.

 1. அந்நிய மரபணு இல்லை என்பது மட்டுமே அது பாதுகாப்பானது என்பதற்கு முழு உத்தரவாதம் இருக்கிறதா?

 2. விளைச்சல் அதிகரித்ததற்கான தெளிவான அறிவியல் காரணம் ஏன் இன்னும் பொதுவெளியில் விரிவாக அறிவிக்கப்படவில்லை?

 3. ஒரு குறிப்பிட்ட இடத்தில் கிடைத்த அதிக விளைச்சல், பல்வேறுபட்ட தட்பவெப்பநிலை கொண்ட இடங்களில் அப்படியே கிடைக்குமா?

 4. அதிக விளைச்சலைப் பெறும்போது, பயிரின் பிற குணங்களிலோ அல்லது ஊட்டச்சத்திலோ ஏதேனும் இழப்புகள் ஏற்படுமா?

 5. மரபணு திருத்தத்தால் நெல்லில் நச்சுத்தன்மை, ஒவ்வாமை உருவாகுமா?

மத்திய அரசின் விளக்கம்/ விவசாயிகளுக்கான நன்மைகள்:

இந்தப் புதிய நெல் ரகங்கள் 2023 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்பட்டுள்ளன. இதில் அந்நிய மரபணு எதுவும் இல்லை என்றும், இவை பாதுகாப்பானவை என்றும் அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

இதில் விவசாயிகளுக்கு இருக்கும் பெரிய சாதகமான அம்சம் என்னவென்றால், மரபணு மாற்றப் பயிர்களைப் போல ஒவ்வொரு பருவத்திற்கும் புதிய விதைகளை அதிக விலைக்கு வாங்கத் தேவையில்லை. பாரம்பரிய விதைகளைப் போலத் தேவைப்படும்போது விதைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

உலகளவில் மரபணு திருத்தம் செயல்பாட்டில் உள்ளதா?

 சுமார் 60 நாடுகள் 70-க்கும் மேற்பட்ட தாவரங்களில் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. சீனா, அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான், பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இதில் முன்னணியில் உள்ளன. அமெரிக்கா மற்றும் கனடா நாடுகள் மரபணு திருத்தம் செய்யப்பட்ட உருளைக்கிழங்கு, சோயாபீனையும், ஜப்பான் 'காபா' தக்காளியையும் பயிரிட அனுமதித்துள்ளன.

சுருக்கமாகக் கூறுவெதன்றால், இந்த மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்கள் நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, காலநிலை மாற்றத்திற்கு இடையே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் ஒரு முக்கிய மைல் கல்லாக அமையும்.

மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்கள்: இந்திய விவசாயத்தில் நிகழுமா மாற்றம்?
ஈரான் போர் தாக்கம்: வளைகுடா நாடுகளின் பொருளாதார பாதிப்பு எத்தகையது?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in