கடனுக்காக சொத்துகளை வங்கிகள் கையகப்படுத்துதலில் ஆர்பிஐ புதிய விதிகள்!

கடனுக்காக சொத்துகளை வங்கிகள் கையகப்படுத்துதலில் ஆர்பிஐ புதிய விதிகள்!
Updated on
2 min read

நாடு முழுவதும் உள்ள வங்கிகள், சிறு நிதி வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், ‘கையகப்படுத்தப்பட்ட சொத்துகள் மீது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்’ என்பது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதிகளை அறிவித்துள்ளது.

இதன்படி, வங்கியில் கடன் பெற்று அதை திருப்பிச் செலுத்தாத நபர்களிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட அசையா சொத்துகளை (SNFA), ஏலத்தில் விற்று கடனை தீர்க்க முற்படும்போது, கடனை திருப்பிச் செலுத்தாத நபருக்கோ (defaulter) அல்லது அவர்களைச் சார்ந்தவர்களுக்கோ அந்தச் சொத்துகளை விற்க தடைவிதித்துள்ளது ஆர்பிஐ.

இந்த புதிய விதி வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

‘நெருக்கடிக்குள்ளான சொத்துகளுக்குத் தீர்வு காணுதல் 2026’ என்ற தலைப்பில் வங்கிகள், சிறு நிதி வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு, ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

அதில் எஸ்என்எப்ஏ (SNFA) என்பது, கடன்பெற்றவர் கடனை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ திருப்பிச் செலுத்தாமல் இருந்தால் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அசையா சொத்துகளாகும்.

புதிய விதிகள் சொல்வது என்ன?

கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் இருப்பவரின் லோன் கணக்கு என்பிஏ (NPA) ஆக மாறும்பட்சத்தில் அவரிடம் அசையா சொத்து ஏதும் இருந்தால், அதனை கடன் வழங்கிய வங்கிகள் கையகப்படுத்தலாம்.

கடன் வாங்கியவர் கடனை முழுமையாகச் செலுத்தாமல் இருந்தாலோ அல்லது பகுதியாக மட்டும் செலுத்தி நிறுத்தியிருந்தாலோ, அப்போதும் அவரின் சொத்துகளை வங்கிகள் கையகப்படுத்தலாம்.

கடனை திருப்பிச் செலுத்தாதவரிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட அசையா சொத்துகளை அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை வங்கிகள் தங்கள் வசம் வைத்திருக்கலாம். ஆனால், அதற்குள் அந்தச் சொத்துகளை பொது ஏலத்துக்குள் கொண்டு வந்து விற்று கடன் கணக்கை வங்கிகள் முடிக்க வேண்டும்.

வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயமான விலையை உறுதிசெய்யும் வகையில், 'SARFAESI' சட்டத்தின் கீழ் ஏல நடைமுறைகளை நடத்தி சொத்துக்களை விற்பனை செய்ய வேண்டும்.

SARFAESI 2002 சட்டம் என்பது, இந்தியாவில் உள்ள வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், ‘கடனைத் திருப்பிச் செலுத்தாத நபர்களிடம் இருந்து நீதிமன்ற தலையீடு இன்றி கையகப்படுத்தப்பட்ட வீடு அல்லது வணிக சொத்துகளை ஏலத்தில் விடும் நடைமுறையாகும்.

இது ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் நிலுவை தொகை கொண்டிருக்கும் கடன் மற்றும் பிணையம் பெறப்பட்ட என்பிஏ கடன்களுக்கு மட்டுமே பொருந்தும். இதில் வேளாண் சொத்துகளான விவசாய நிலம், தோட்டம் ஆகியவை அடங்காது.

கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாதவரிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட சொத்துகளை, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது வங்கிகள், மறுமதிப்பீடு செய்ய வேண்டும்.

2 ஆண்டுகளுக்கு ஒருமுறை சொத்துகளை மதிப்பீடு செய்யும்போது, சொத்தின் மதிப்பு அதிகரித்தால் அதை வங்கிகள் நிராகரிக்கலாம். அதேசமயம், சொத்து மதிப்பு குறையும் பட்சத்தில், அதை வங்கிகள் தங்களின் கடன் கணக்கில் லாபம் அல்லது நஷ்டத்தில் சேர்க்க வேண்டும்.

அது மட்டுமல்லாமல், கையகப்படுத்திய சொத்துகளின் நிகர மதிப்பு அல்லது சந்தை மதிப்பு, இதில் எது குறைவாக இருக்கிறதோ அதைத்தான் வங்கிகள் கணக்கில் கொள்ள வேண்டும்.

அந்த சொத்துகளின் மதிப்பை வங்கிகள் அங்கீகரிக்கும் முன், சுயாதீனமாக வெளியிலிருந்து இரு மதிப்பீட்டாளர்களிடம் இருந்து மதிப்பீடு அறிக்கையைப் பெற்று ஆய்வு செய்ய வேண்டும்.

கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களிடம் இருந்து கையகப்படுத்திய சொத்துகளை பரிமாற்றம் செய்வது வங்கிகளின் வர்த்தகத்தில் இல்லை. அதேசமயம், கடன் பெற்றவர்களிடம் இருந்து கடனை வசூலிக்க வங்கிகளுக்கு இதைத் தவிர வேறு வழியும் இல்லை.

ரிசர்வ் வங்கியின் நோக்கம் என்பது வங்கிகள், வங்கி சாரா நிதிநிறுவனங்கள் சார்பில் கையகப்படுத்தப்பட்ட சொத்துகளை மதிப்பிடுதல், அதை வைத்திருத்தல் அல்லது பொது ஏலத்தில் விற்பனை செய்தல் ஆகியவற்றில் அதிக நிலைத்தன்மையையும், வெளிப்படைத்தன்மையையும் கொண்டு வரவேண்டும் என்பதாகும். அதற்காகத்தான் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

அதேசமயம், கடனைத் திருப்பிச் செலுத்தாத நபரிடமோ அல்லது அவர்களைச் சார்ந்தவர்களிடமோ, கையகப்படுத்தப்பட்ட அதே சொத்துகளை விற்பனை செய்யவும் வங்கிகளுக்கும், வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடனுக்காக சொத்துகளை வங்கிகள் கையகப்படுத்துதலில் ஆர்பிஐ புதிய விதிகள்!
உக்ரைன் போர் விளைவு: பொருளாதார நெருக்கடியில் ரஷ்ய மக்கள் தவிப்பு!
கடனுக்காக சொத்துகளை வங்கிகள் கையகப்படுத்துதலில் ஆர்பிஐ புதிய விதிகள்!
ஐஆர்சிடிசி புதிய வலைதளம் எப்படி? - எளிய அம்சங்களும், 13 குறிப்புகளும் | IRCTC’s new website

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in