உக்ரைன் போர் விளைவு: பொருளாதார நெருக்கடியில் ரஷ்ய மக்கள் தவிப்பு!

சீனாவை ‘நம்பும்’ நிலையில் ரஷ்யா
உக்ரைன் போர் விளைவு: பொருளாதார நெருக்கடியில் ரஷ்ய மக்கள் தவிப்பு!
Updated on
3 min read

உக்ரைன் நாட்டுடன் கடந்த 2022-ம் ஆண்டு ரஷ்யா தொடங்கிய போர் 4 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த 4 ஆண்டுகளில் ரஷ்யாவும், ரஷ்ய மக்களும் இழந்ததுதான் அதிகம். ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் பிடிவாதப் போக்கால் 5-வது ஆண்டாகத் தொடரும் போரைப் பார்த்து ரஷ்ய மக்கள் மனம் நோகிறார்கள்.

ரஷ்யா - உக்ரைன் இடையிலான போருக்கான அடித்தளம் கடந்த 2014-ம் ஆண்டே தொடங்கிவிட்டது என்றாலும், முழுமையான போர் என்பது 2022 பிப்ரவரி 24-ல் தீவிரம் அடைய ஆரம்பித்தது. அன்றுதான் உக்ரைன் மீது ரஷ்யா முழுவீச்சில் தாக்குதல் நடத்தியது.

மேற்கத்திய நாடுகள், ஐரோப்பிய நாடுகள் பக்கம் அதிக நட்புறவோடு உக்ரைன் நெருங்குவதை ரஷ்ய அதிபர் புதின் விரும்பவில்லை. இது ரஷ்யாவின் ஆதிக்கத்துக்கு ஆபத்து என்று கருதினார். மேலும், உக்ரைன் அரசுக்கு எதிராகப் போராடி வந்த டோனட்ஸ்க், லுகான்ஸ்க் பிராந்தியத்தை சுதந்திரமாக செயல்படுவதற்கு ரஷ்ய அதிபர் புதின் அங்கீகரித்து ஆதரவளித்தார். இவைதான் போருக்கு முதன்மைக் காரணிகளாக அமைந்தன.

வாஷிங்டனில் உள்ள சென்டர் ஃபார் ஸ்டாடர்ஜிக் மற்றும் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் (சிஎஸ்ஐஎஸ்) வெளியிட்ட ஆய்வறிக்கையில் ‘உக்ரைன் உடனான 4 ஆண்டுகள் போரில் ரஷ்யா தரப்பில் கொல்லப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள், காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டும். உக்ரைன் தரப்பில் 60 ஆயிரம் முதல் 1 லட்சம் ராணுவ வீரர்கள் வரை கொல்லப்பட்டிருக்கலாம். இரு நாடுகள் தரப்பிலும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டும். இதில் ரஷ்யா தரப்பில் மட்டுமே 14 லட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கலாம்’ எனத் தெரிவித்துள்ளது.

ஐ.நா.வின் மனித உரிமைக்கான இயக்குநர் கடந்த ஜூன் மாதம் வெளியிட்ட அறிக்கையில், ‘உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போரால் 2022-ம் ஆண்டில் இருந்து உக்ரைன் தரப்பில் 16 ஆயிரம் அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். 46,500 பேர் காயமடைந்தனர்’ எனத் தெரிவித்துள்ளது.

2022-ம் ஆண்டு ரஷ்யா தொடுத்த போரில் இருந்து, இதுவரை 80 லட்சம் உக்ரைன் மக்கள், அந்நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர். உக்ரைன் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் அங்கு இல்லை. 16 லட்சம் மக்கள் வலுக்கட்டாயமாக உக்ரைனில் இருந்து வெளியேற்றப்பட்டனர்; இதில் 2.60 லட்சம் குழந்தைகளும் அடங்குவர்.

ரஷ்யாவுக்கு இழப்புகள் எத்தகையது?

உக்ரைனுடன் நடத்திய போரால் இதுவரை ரஷ்யா தரப்பில் 3.20 லட்சம் வீரர்கள் உயிரிழந்தனர். 8,000 ராணுவ வாகனங்கள், 2,700 டாங்கிகளை ரஷ்யா இழந்துள்ளது. ரஷ்யா நடத்திய இந்தப் போரால் தனது ராணுவத்தை நவீனப்படுத்த அடுத்த 20 ஆண்டுகள் வரை தேவைப்படும் என்று அமெரிக்கா, ஐரோப்பிய உளவுத் துறை நம்புகிறது.

ஐரோப்பிய நாடுகளின் உளவுத் துறை அளித்த அறிக்கை குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலில், ‘உக்ரைனுக்கு எதிரான போருக்காக ரஷ்யாவில் ஆளும் அதிபர் புதின் தலைமையிலான அரசு தொடர்ந்து பணத்தை வாரி இறைத்து வருகிறது. வங்கிகளுக்கும் வழக்கமான கடன்கள், நிறுவனங்களுக்கான கடன்களை வழங்க வேண்டிய நிர்பந்தமும் இருக்கிறது.

அதிலும் போரினால் மக்களின் வாழ்வாதாரம், வாழ்க்கைத் தரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டதால், வங்கிகளில் கடன் வாங்கிய லட்சக்கணக்கான மக்கள் திருப்பிச் செலுத்துவதில் சிக்கலை எதிர்கொள்கிறார்கள். ரஷ்யா தொடுத்த போரால் மேற்கத்திய நாடுகள், ரஷ்ய வங்கிகள் மீது விதித்த பொருளாதாரத் தடை அந்நாட்டில் பொருளாதார சிக்கலை அதிகப்படுத்தி வருகிறது.

வங்கிகளில் கடன் பெற்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் திருப்பிச் செலுத்துமா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 5 லட்சம் ரஷ்ய மக்கள் தங்களால் கடனை திருப்பிச் செலுத்த முடியாது என்று கூறி திவால் நோட்டீஸ் அளித்துவிட்டனர். ஆண்டுக்கு ஆண்டு மூன்றில் ஒரு பங்கு பிரிவினர் திவால் நோட்டீஸ் அளிப்பது அதிகரித்து வருகிறது. ஏறக்குறைய 1.30 கோடி ரஷ்ய மக்கள் குறைந்தபட்சம் 3 கடன்களை வங்கியில் வாங்கி திருப்பிச் செலுத்த முடியாமல் தவிக்கிறார்கள்’ எனத் தெரிவித்துள்ளது.

இது தவிர பொருளாதாரத்தில் தேக்கநிலை என்ற கட்டத்தை ரஷ்யா சந்தித்து வருகிறது. பொருளாதார வளர்ச்சி என்பது தேங்கி, படிப்படியாகக் குறைந்து வருகிறது. அதோடு கடுமையான பணவீக்கம், விலைவாசி உயர்வு, எரிபொருள் தட்டுப்பாட்டையும் ரஷ்யா எதிர்கொண்டுள்ளது.

கடன் அதிகரிப்பு, வளர்ச்சிக் குறைவு

‘கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் மட்டும் 7 லட்சம் கோடி ரூபிள்களாக உள்ளன. இது ரஷ்யாவின் ஜிடிபியில் 3 சதவீதம். வங்கிகளின் லாபமான 2.65 லட்சம் கோடியைவிட 2 மடங்காகும். கார்ப்பரேட் கடன்களில் பெரும்பகுதி ராணுவ நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட கடன்கள்தான். ஆதலால் இந்த கடன்களை நிச்சயமாக ரஷ்ய அரசுதான் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று தெரிகிறது. இதில் தனிநபர்களின் வாராக்கடன் மட்டும் 170 கோடி ரூபில்கள் (2,200 கோடி டாலர்).

2026-ம் ஆண்டு ரஷ்யாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது. முக்கியமான துறைகள் சிக்கலில் இருக்கின்றன. கடந்த ஆண்டு ரஷ்யப் பொருளாதாரம் 1 சதவீதமாகக் குறைந்த நிலையில், இந்த ஆண்டு 0.4 சதவீதமாகவே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது’ என பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ரஷ்யாவில் வாழும் மக்களில் 60 சதவீதம் பேர் தங்களின் பொருளாதாரமும், தேசத்தின் பொருளாதாரமும் மிக மோசமடைந்துவிட்டதாக கருதுகிறார்கள். கடந்த 20 ஆண்டுகளில் இதுபோல் நடப்பது முதல் முறை என்று மக்கள் வேதனைப்படுகிறார்கள். 56 சதவீத ரஷ்ய மக்கள் தங்களின் வாழ்க்கைத் தரம் மோசமாகிவிட்டதாகவும், 58 சதவீத மக்கள் வேலை கிடைப்பதும், வேலைக்கு தகுதியான ஆட்கள் கிடைப்பதும் கடும் சிரமமாக இருக்கிறது, வேலையின்மை மோசமான நிலையை எட்டியிருப்பதாக தெரிவித்தனர்.

சீனாவை நம்பும் ரஷ்யா

மற்றொரு பொருளாதார ஆய்வறிக்கை ஒன்றில், ‘போர் தொடங்குவதற்கு முன் ரஷ்யாவின் சொத்துகள், தங்கம் உள்ளிட்ட அந்நியச் செலாவணி ஜிடிபியில் 6.5சதவீதம் இருந்த நிலையில், 2026 ஏப்ரலில் இது 1.8 சதவீதமாகக் குறைந்துவிட்டது. மேலும், ரஷ்யாவின் பொருளாதார வளர்ச்சி தேங்கி குறைந்துவிட்டது. அந்நியச் செலாவணி காலியாகும் நிலைக்கு வந்துவிட்டது. ரஷ்யா தற்போது முழுமையாக சீனாவை நம்பித்தான் இருக்கிறது.

சீனாவை நம்பித்தான் தொழில்நுட்பம், வர்த்தகம், நிதி ஆகியவற்றை ரஷ்யா எதிர்பார்த்துள்ளது. இதனால், தனது கை ஓங்கி இருப்பதால், இரு நாட்டு உறவுகளை தீர்மானிப்பதில் சீனா தன்னிச்சையாக செயல்படுகிறது.

மேற்கத்திய நாடுகளில் இருந்து ரஷ்யாவுக்கு உதவிகள் கிடைப்பதில்லை. பொருளாதாரத் தடையும் இருப்பதால், சீனாவை நம்பித்தான் ரஷ்யா செயல்படுகிறது, உக்ரைனுக்கு எதிரான போரில்கூட சீனாவின் கைகள்தான் மறைமுகமாக ரஷ்யாவின் பக்கம் இருக்கிறது.

ரஷ்யா அரசின் பட்ஜெட்டில், நிர்ணயிக்கப்பட்ட ஆண்டு நிதிப் பற்றாக்குறை, நிதியாண்டின் 3 மாதங்களிலேயே எட்டிவிட்டது. எண்ணெய் மற்றும் எரிவாயு வருமானமும் 45 சதவீதம் அளவு குறைந்துவிட்டது’ என்று அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது

உக்ரைன் போர் விளைவு: பொருளாதார நெருக்கடியில் ரஷ்ய மக்கள் தவிப்பு!
“எந்த விலை கொடுத்தாவது ஜூலை 20 வரை உயிரோடு இருப்பேன்” - சோனம் வாங்சுக்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in