கிருஷ்ணகிரியில் தீவனத் தட்டுப்பாடு: கால்நடைகளை விற்பனை செய்யும் விவசாயிகள்

வாழ்வாதாரத்தை இழப்பதாக வேதனை
கிருஷ்ணகிரியில் தீவனத் தட்டுப்பாடு: கால்நடைகளை விற்பனை செய்யும் விவசாயிகள்
Updated on
1 min read

கிருஷ்ணகிரி: கால்நடை தீவனத் தட்டுப்பாடு காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தங்களின் வாழ்வாதாரமான கால்நடைகளை விவசாயிகள் விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேளாண் தொழில் பிரதானமாக உள்ளது. மேலும், சார்பு தொழிலாக கால்நடை வளர்ப்பிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஏர் உழுதல் உள்ளிட்ட வேளாண் பணிகளுக்கு காளை மாடுகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதேபோல், கலப்பின கறவை மாடுகள் வளர்ப்பு மூலம் பால் உற்பத்தி செய்து ஆவின் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விவசாயிகள் வழங்கி வருகின்றனர்.

கால்நடைகள் வளர்ப்பை அடிப்படையாக கொண்டு கால்நடைகளை வாங்கவும், விற்பனை செய்யவும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கெலமங்கலம், குந்தாரப்பள்ளி, போச்சம்பள்ளி, ஒரப்பம், ஊத்தங்கரை உள்ளிட்ட பகுதிகளில் வாரந்தோறும் கால்நடை சந்தைகள் நடைபெறுகின்றன. இச்சந்தைகளுக்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள், விவசாயிகள் வந்து செல்கின்றனர்.

நிகழாண்டில் போதிய மழையில்லாததால், கால்நடைகளுக்கு தேவையான பசும்தீவனம், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பலர் தங்களது கால்நடைகளை சந்தைகளில் விற்பனை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் போச்சம்பள்ளியில் நடைபெற்ற சந்தையில் 300-க்கும் மேற்பட்ட மாடுகளை விவசாயிகள் விற்பனை செய்தனர்.

இதுகுறித்து போச்சம்பள்ளி அருகே வடமலம்பட்டியைச் சேர்ந்த கால்நடை வியாபாரி தாமோதரன் மற்றும் சிலர் கூறியதாவது: பருவமழை பொய்த்ததால், கால்நடைகளுக்குப் பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், மேய்ச்சல் நிலங்களிலும் புல், செடிகள் மற்றும் கொடிகள் காய்ந்துள்ளதால், கால்நடைத் தீவனத்திற்கு அதிக விலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளது. தண்ணீர் தட்டுப்பாடும் நிலவி வருகிறது.

இதனால் கால்நடைகளை வளர்ப்பது அதிக செலவை ஏற்படுத்துவதால், பல விவசாயிகள் தங்கள் கால்நடைகளை விற்பனை செய்ய தொடங்கியுள்ளனர். போச்சம்பள்ளியில் நேற்று முன்தினம் நடைபெற்ற சந்தையில் எப்போதும் இல்லாத அளவில்  300-க்கும் மேற்பட்ட மாடுகளை விவசாயிகள் விற்பனை செய்தனர்.

ஆனால், எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை. விற்பனை செய்யப்பட்ட மாடுகளில் பெரும்பாலும் இறைச்சிக்காக வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். எதிர்வரும் நாட்களில் மழை கைகொடுத்தால் மட்டுமே கால்நடைகளை வளர்க்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கிருஷ்ணகிரியில் தீவனத் தட்டுப்பாடு: கால்நடைகளை விற்பனை செய்யும் விவசாயிகள்
“என்னைப் பற்றி பேரவையில் முதல்வர் பேசியது உண்மைக்கு மாறானவை” - திமுக முன்னாள் எம்எல்ஏ கருணாநிதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in