

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, 2025-26 நிதியாண்டில் பிஹார், ஜார்க்கண்ட் ஆகிய 2 மாநிலங்களிலும் சேர்த்து, தனிநபர் பிரிவில் அதிக வரி செலுத்தியவராக இருக்கிறார்.
பிஹார் - ஜார்க்கண்ட் வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் டாக்டர் டி.சுதாகர ராவ், ராஞ்சியில் செய்தியாளர்களிடம் நேற்று முன்தினம் கூறும்போது, “கடந்த 2025-26 நிதியாண்டில் பிஹார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் இருந்து வசூலிக்கப்பட்ட மொத்த வரி சுமார் ரூ.20,000 கோடி ஆகும். இதில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து மட்டும் ரூ.12,000 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
இரு மாநிலங்களிலும் சேர்த்து தனி நபர் பிரிவில் அதிக வரி செலுத்தியவர்கள் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி முதலிடம் பிடித்துள்ளார்’’ என்றார். எனினும், தோனி செலுத்திய வரித் தொகையை வெளியிட அவர் மறுத்துவிட்டார். வருமான வரித் துறையின் கூற்றுப்படி, இரு மாநிலங்களின் மொத்த வரி வசூலில் ஜார்க்கண்ட் மட்டும் கிட்டத்தட்ட 60 சதவீதப் பங்களிப்பை வழங்கியுள்ளது. ஒட்டுமொத்த வருவாயில் சுமார் 70% டிடிஎஸ் மூலம் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிறுவனங்கள் பிரிவில், சென்ட்ரல் கோல்ஃபீல்ட்ஸ் (சிசிஎல்), பாரத் கோக்கிங் கோல் (பிசிசிஎல்), மத்திய சுரங்க திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு நிறுவனம் (சிபிஎம்பிடிஐ) ஆகியவை அதிக வரி செலுத்தியுள்ளன. கடந்த நிதியாண்டில் ஜார்க்கண்டில் பெய்த கனமழையால் சுரங்கத் தொழில்கள் பாதிக்கப்பட்டதாகவும், இது வரி வசூல் புள்ளிவிவரங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அந்தப் பிராந்தியத்தில் பான் கார்டு வைத்திருப்பவர்களுக்கும், வரி செலுத்துபவர்களுக்கும் இடையே பெரும் இடைவெளி இருப்பதையும் வருமான வரித்துறை வெளிப்படுத்தியுள்ளது.