

ஜூலை மாதம் முதல் நிதித் துறையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த மாற்றங்கள் நமது அன்றாட பணிகளில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி முதல், பாஸ்போர்ட் கட்டணம், ஆதார் குறித்த முக்கிய மாற்றங்கள், கிரெடிட் கார்டுக்கான அப்டேட், வங்கிச் சேவையில் புதிய விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன. அது குறித்து சுருக்கமாகவும் தெளிவாகவும் பார்க்கலாம்.
ஐடிஆர் தாக்கல் கெடு தொடக்கம்:
2026-27-ம் நிதியாண்டுக்கான வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை மாதத்தில் இருந்து தொடங்குகிறது. ஒவ்வொரு ஐடிஆர் தாக்கலுக்கும் ஒவ்வொரு கடைசித் தேதி இருக்கிறது. அந்த வகையில் ஐடிஆர்-1, ஐடிஆர்-2 படிவத்தைத் தாக்கல் செய்பவர்களுக்கு ஜூலை 31-ம் தேதி கடைசியாகும்.
ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் ஐடிஆர்-1 படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும். முதலீட்டு ஆதாயம், வீட்டு வாடகை, ஓய்வூதியம், வெளிநாட்டு வருமானம், வேளாண் துறையில் வருமானம் ஈட்டுவோர் ஐடிஆர்-2 படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும். ஐடிஆர்-3 மற்றும் ஐடிஆர்-4 படிவத்தை தாக்கல் செய்ய கடைசித் தேதி ஆகஸ்ட் 31ம் தேதியாகும். இந்த படிவங்கள் பெரும்பாலும் வர்த்தகம் செய்பவர்கள், தொழில் செய்பவர்கள், பார்ட்னர்ஷிப் நிறுவனங்கள், அறக்கட்டளைகள் உள்ளிட்டவைக்குப் பொருந்தும்.
ஆதார் தளத்தில் இலவச அப்டேட்
ஆதார் கார்டில் ஒருவர் தனது மின்னஞ்சலை மாற்றுவதற்கும், சேர்ப்பதற்கு இனிமேல் கட்டணம் கிடையாது. இதை ஆதார் மொபைல் செயலி மூலமே எந்தவிதமான கட்டணம் இன்றி மாற்றவோ, சேர்க்கவோ செய்ய முடியும். இந்த வசதி கடந்த 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதற்கு முன் புதிதாக மின்னஞ்சல் முகவரியை சேர்க்க வேண்டுமென்றால், ரூ.75 கட்டணம் செலுத்த வேண்டும். இனிமேல் அந்தக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. இலவசமாக அப்டேட் செய்யும் வசதி 2026 டிசம்பர் 31-ம் தேதிவரை நடைமுறையில் இருக்கும்.
‘காஸ்ட்லி’ ஆன பாஸ்போர்ட் சேவை
வெளியுறவுத் துறை அமைச்சகம் பாஸ்போர்ட் சேவைக்கான கட்டணத்தை அதிகரித்துள்ளது. புதிதாக பாஸ்போர்ட் எடுப்பவர்கள், அதை புதுப்பிப்பவர்களுக்கான கட்டணம் ரூ.2500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தட்கல் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பித்து பெறுவோருக்கு கட்டணம் ரூ.5 ஆயிரமாக அதிகரித்துள்ளது. 60 பக்கங்கள் கொண்ட வழக்கமான பாஸ்போர்ட்டுக்கான கட்டணம் ரூ.3500 ஆகவும், இதில் தட்கல் மூலம் விண்ணப்பித்தால், அதற்கு ரூ.6000 கட்டணமாக உயர்த்தப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் சேவையில் வந்துள்ள இந்த கட்டண உயர்வு, இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கும் பொருந்தும்.
ரிசர்வ் வங்கியின் புதிய பாதுகாப்பு வசதி
வாடிக்கையாளர்களை ஏமாற்றி, பங்குகள், காப்பீடுகள், பரஸ்பர நிதிப் பத்திரங்களை வங்கிகள் விற்பனை செய்வதற்கு எதிராக வாடிக்கையாளர்களைப் பாதுகாக்கும் நோக்கில் புதிய விதியை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது. இது கடந்த 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த விதியின்படி, ஒரு வாடிக்கையாளர் விரும்பாத, பொருத்தமில்லாத நிதி முதலீடுகளான பங்குப் பத்திரங்கள், பரஸ்பர நிதிகள், காப்பீடுகளை வாங்க வங்கிகள் கட்டாயப்படுத்தி விற்பனை செய்திருந்தால், அதற்குரிய பணம் வாடிக்கையாளர்களுக்கு திருப்பி வழங்கப்படும்.
வாடிக்கையாளர்களுக்கு தெரியாத நிதி முதலீடுகளை விற்பனை செய்து, அவர்களுக்கு இழப்பை வங்கிகள் ஏற்படுத்தி இருந்தால், அதற்கு இழப்பீடும் வழங்கப்படும். இந்த விதியால் வாடிக்கையாளர் நலன் பாதுகாக்கப்படும், வங்கிகள் வாடிக்கையாளர்கள் விரும்பும் நிதி முதலீடுகளை மட்டுமே வெளிப்படைத் தன்மையுடன் விற்பனை செய்ய இயலும்.
எஸ்பிஐ, எச்டிஎஃப்சி வங்கியின் அறிவிப்பு
எஸ்பிஐ வங்கியின் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் போன்பே செயலி மூலம் பரிவர்த்தனை செய்தால் பரிசுப் புள்ளிகள் கூடுதலாகத் தரப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதேபோல ஹெச்டிஎஃப்சி வங்கி தனது கிரெடிட் கார்டு மூலம் விமான நிலைய லாஞ்ச்களில் பொருட்கள் வாங்குதல்,ஹோட்டல் பயன்பாடு ஆகியவற்றை பயன்படுத்த கட்டுப்பாடு விதித்துள்ளது. இதன்படி, ஒரு காலண்டர் காலாண்டில் 3 முறை மட்டும் உள்நாட்டு விமான லாஞ்ச்களை கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்த முடியும். அதிலும், முந்தைய காலாண்டில் ரூ.60 ஆயிரம் வரை குறைந்தபட்சம் செலவிட்டிருந்தால் மட்டுமே இந்த சலுகை பொருந்தும்.
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விற்பனையில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனமான நாயாரா எனர்ஜி, கடந்த 1-ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்துள்ளது. நயாரா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் ஜூலை 1-ம் தேதி முதல் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5, டீசல் லிட்டருக்கு ரூ.3 விலை குறைக்கப்படுகிறது.
இது நாடு முழுவதும் உள்ள 7,000 விற்பனை நிலையங்களிலும் அமலுக்கு வரும் எனத் தெரிவித்துள்ளது. மேற்காசியாவில் போர் பதற்றம் தணிந்துள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை குறைந்து, பேரல் 79 முதல் 80 டாலராகச் சரிந்தது. இதனால், இந்த விலைக் குறைப்பை நயாரா நிறுவனம் செய்துள்ளது. இந்த விலைக் குறைப்பு மாநிலத்துக்கு மாநிலம், வாட் வரியைப் பொருத்து மாறுபடும்.