

‘இஸ்ரேல் ராணுவமும், அதிகாரிகளும் சேர்ந்து வேண்டுமென்றே, திட்டமிட்டு பாலஸ்தீன குழந்தைகளை குறிவைத்து கொலை செய்து, இன அழிப்பில் ஈடுபட்டுள்ளனர். மனிதநேயத்துக்கு எதிராக போர்க் குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர்’ என்று ஐ.நா.வின் சுயாதீன விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே தொடங்கிய போரிலிருந்து இதுவரை பாலஸ்தீன குழந்தைகளுக்கு எதிராக நடந்த வன்முறைகள், அத்துமீறல்கள், கொடூரங்கள் குறித்து ஐ.நா.வின் சுதந்திரமான சுயாதீன சர்வதேச விசாரணை ஆணையம் விசாரணை நடத்தியது.
ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசேலம் உள்ளிட்ட பாலஸ்தீனப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் செய்த அத்துமீறல்கள் மற்றும் குற்றங்களால், பாலஸ்தீன குழந்தைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து விசாரணை நடத்தி, ஐ.நா.வின் இந்த சுயாதீன விசாரணை அமைப்பு, கடந்த ஜூன் 23-ம் தேதி அறிக்கையை வெளியிடப்பட்டது. இந்த விசாரணைக் குழுவின் தலைவராக இருக்கும் ஸ்ரீனிவாசன் முரளிதரர் அறிக்கையை வெளியிட்டார்.
என்ன கூறுகிறது ஐநா விசாரணை அறிக்கை?
இஸ்ரேல் ராணுவம் காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில்களில் கொல்லப்பட்டவர்களில் 30% பேர் குழந்தைகள். 2025-ம் ஆண்டு அக்டோபரில் போர் நிறுத்தம் வந்தபின்பும்கூட பாலஸ்தீன குழந்தைகளை வேண்டுமென்றே இஸ்ரேல் ராணுவம் குறிவைத்து கொன்றுள்ளது. 3 ஆண்டுகள் நடந்த இந்தப் போரில் இதுவரை 73 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். 1.80 லட்சம் பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 30 சதவீதம் பேர் குழந்தைகள், காயமடைந்தவர்களில் 26 சதவீதம் பேர் குழந்தைகள்.
கடந்த 2025-ம் ஆண்டு இதேபோன்று ஐ.நா. சுயாதீன விசாரணை நடத்தி அறிக்கை வெளியிட்டபோது, இஸ்ரேல் ராணுவம் காசாவில் இன அழிப்பில் ஈடுபட்டது குறித்து பகிரங்கமாக குற்றம்சாட்டியது. 2026-ம் ஆண்டு ஜூன் 18-ம் தேதி ஐ.நா. சுய விசாரணை ஆணையமும் தனது விசாரணை அறிக்கையிலும், இஸ்ரேல் ராணுவம், அதிகாரிகள், சேர்ந்து பாலஸ்தீன குழந்தைகளுக்கு எதிராக இன அழிப்பில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இரு அறிக்கைகளில் கூறப்பட்ட சாரம்சத்தையும், குற்றச்சாட்டையும் இஸ்ரேல் ராணுவம், அதிகாரிகள் ஏற்காமல் மறுத்துவிட்டனர்.
அந்த அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்கள் பல இடம்பெற்றுள்ளன. அதன் விவரம்: இஸ்ரேல் ராணுவம் வேண்டுமென்றே குழந்தைகளை கொலை செய்து போர்க் குற்றம் செய்துள்ளனர். இது மனிதநேயத்துக்கு எதிரானது. அழித்தொழிக்கும் செயல்.
இஸ்ரேல் ராணுவம் நடத்திய இன அழிப்பு நடவடிக்கையில், பாலஸ்தீனத்தில் உள்ள குழந்தைகளில் 2% பேரைக் கொன்றுவிட்டனர். இஸ்ரேல் ராணுவத்தின் மனிதநேயமற்ற செயலால் காசா நகரில் குழந்தைகள் உணவு, குடிநீர், கல்வி, சத்துள்ள உணவு கிடைக்காமல் மூச்சுமுட்டுகிறார்கள். அது மட்டுமல்லாமல் இஸ்ரேல் ராணுவம் வேண்டுமென்றே, பாலஸ்தீனக் குழந்தைகளின் உடலில் காயத்தை ஏற்படுத்தி, அவர்களை சித்ரவதை செய்துள்ளனர் என்று அந்த அறிக்கையில் கண்டிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளின் உடலில் ஏற்பட்ட காயம், உடல் உறுப்பு சேதம் ஆகியவை யதேச்சையாக குண்டுக் காயத்தால் மட்டும் ஏற்படவில்லை. காசா நகரில் பாலஸ்தீன மக்கள் யாரும் இருக்கக் கூடாது என்று அழிக்கவே இந்தச் செயலில் இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டுள்ளது. காசா நகரில் இஸ்ரேல் ராணுவம் முன்னெப்போதும் இல்லாத உயிரிழப்புகளையும், காயங்களையும் குழந்தைகளுக்கு ஏற்படுத்தி, அவர்களுக்கு மனரீதியாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
இஸ்ரேலின் கொடூரத் திட்டம் என்ன?
இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டு தாக்குதலில் ஈடுபட்டனர். குறிப்பாக மருத்துவமனைகள், சுகாதார மையங்கள், பிரசவ மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தி குழந்தைகளுக்கு நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தவும், அவர்களுக்கு உடல் ரீதியான நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தவும் முயன்றனர். கிழக்கு ஜெருசேலம், மேற்கு கரை பகுதியிலும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் பாலஸ்தீன குழந்தைகளுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி போர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளது.
மேற்குக் கரையில் குழந்தைகளுக்கு எதிராகவும், நியாயமற்ற வகையிலும் அளவுக்கு அதிகமான மற்றும் தண்டனை அளிக்கும் வகையிலான படைகளை இஸ்ரேல் ராணுவம் பயன்படுத்தினர். இதன்மூலம், குழந்தைகளைக் கட்டுப்படுத்தவும், அச்சுறுத்தவும், மிரட்டவும் ஒரு கருவியாக ராணுவம் பயன்படுத்தப்பட்டது.
இஸ்ரேலின் மனித உரிமை அமைப்பான ‘பிடிசலீம்’ (B’Tselem) 2023 அக்டோபரில் இருந்து மேற்கு கரைப்பகுதியில் 236 பாலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது. காசா, மேற்கு கரைப் பகுதியில் குழந்தைகளை கூட்டமாகக் கைது செய்து, சட்டவிரோதமாக அடைத்து வைத்திருந்தது இஸ்ரேல் ராணுவம் எனத் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்திய போரில் இதுவரை அந்நாட்டில் கொல்லப்பட்டவர்களில் 30 சதவீதம் பேர் குழந்தைகள், அதாவது 21,289 பேர் குழந்தைகள். அந்நாட்டில் காயமடைந்தவர்களில் 26 சதவீதம் பேர் குழந்தைகள், அதாவது 44,500 குழந்தைகள் காயமடைந்தனர்.
இந்தப் போரில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மட்டும் 5,031 பேர் கொல்லப்பட்டனர். ஒரு வயதுக்குட்பட்ட பச்சிளங்குழந்தைகள் மட்டும் 1,029 பேர் ஈவிரக்கமின்றி இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டனர். புதிதாகப் பிறந்த பச்சிளங்குழந்தைகள் 420 பேரும் இஸ்ரேலின் ரத்தவெறிக்கு இலக்கானார்கள்.
இதுவரை 1000-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல் உறுப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன; 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் மாற்றுத் திறனாளிகள் ஆகியுள்ளனர்; 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் கேட்கும் திறனை இழந்துள்ளனர்.
ஆதரவற்றவர்களாக மாறிய குழந்தைகள்
பாலஸ்தீனத்தீனத்தின் மீது அமெரிக்க துணையுடன் இஸ்ரேலின் கட்டவிழ்த்து விடப்பட்ட தாக்குதலில் பாலஸ்தீனத்தின் குழந்தைகள் பலர் பெற்றோரை இழந்து ஆதரவற்றவர்களாக மாறிவிட்டனர். பல குழந்தைகள் தந்தையையும், தாயையும் இழந்து தவிக்கிறார்கள். ஆயிரக்கனக்கான குழந்தைகளுக்கு தந்தை, தாய் எங்கிருக்கிறார்கள், உயிரோடு இருக்கிறார்களா என்பது தெரியாமல் வாழ்ந்து வருகிறார்கள்.
இதுவரை 58,544 குழந்தைகள் பெற்றோரையோ அல்லது பெற்றோரில் தாய் அல்லது தந்தையையோ இழந்துள்ளனர். 17 ஆயிரம் முதல் 18 ஆயிரம் குழந்தைகள் வரை தங்கள் குடும்பத்தினரை இழந்து தவிக்கிறார்கள். குடும்பத்தை நடத்தும் பிரிவில் நான்கு பேரில் ஒருவர் 16 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளாக உள்ளனர்.
பள்ளிப் படிப்பு பயிலும் வயதுள்ள குழந்தைகளில் 6.37 லட்சம் பேர் முறையான கல்வி இல்லாமல் வாழ்கிறார்கள். 5 வயதுக்கு கீழ் உள்ள 3.35 லட்சம் குழந்தைகள் வளர்ச்சித் திட்டங்கள் இன்றி தவிக்கிறார்கள். பாலஸ்தீனத்தில் உள்ள பள்ளிகளில் 93 சதவீதம் இஸ்ரேல் ராணுவத்தால் அழிக்கப்பட்டுள்ளது.
2025 டிசம்பர் மாதம் வரை 3.20 லட்சம் குழந்தைகளுக்கு சரிவிகித, சத்துணவு இலலாமல் வாழ்ந்து வருகிறார்கள். சத்துணவு, ஊட்டச்சத்து இல்லாமல் 2025 டிசம்பர் வரை 151 குழந்தைகள் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
2022-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில், பாலஸ்தீனத்தில் குழந்தை பிறப்பு என்பது 44% குறைந்துவிட்டது. 2023 அக்டோபர் மாதத்தில் இருந்து பாலஸ்தீன பெண்களுக்கு கருக்கலைதல் என்பது 300% அதிகரித்துள்ளது. 12 குழந்தைகளுக்கு தற்போது மனரீதியான சிகிச்சை மற்றும் உளவியல் சிகிச்சையும் தேவைப்படுவதாக அந்த அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
பாலஸ்தீன அரசு என்ன சொல்கிறது?
ஐ.நா.வின் சுயாதீன விசாரணை அறிக்கையை பாலஸ்தீன அரசு வரவேற்றுள்ளது. ‘ஆக்கிரமிப்பாளர்களால் இழைக்கப்படும் அத்துமீறல்களைத் தடுப்பதிலும், பாலஸ்தீனிய குழந்தைகளுக்கு எதிரான இந்தக் குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களை குற்றவாளிக் கூண்டில் நிற்க வைப்பதிலும் சர்வதேச சமூகம் தோல்வியடைந்துவிட்டது என்பதை அறிக்கையின் முக்கியத்துவமாக இருக்கிறது’ என பாலஸ்தீன அரசு தெரிவித்துள்ளது.
‘இஸ்ரேல் ராணுவம் காசாவில் தனது போர் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும், சர்வதேச சட்டத்தின் கீழ் இஸ்ரேல் ராணுவம் குழந்தைகளுக்கான உரிமைகளையும் கடமைகளையும் கடைபிடிக்க வேண்டும், இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட இஸ்ரேலிய அதிகாரிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது செய்ய வேண்டும், இஸ்ரேலுக்கான ஆயுத விற்பனையை நிறுத்தி இஸ்ரேல் அதிகாரிகள், குடியேறிகளுக்கு எதிராக உறுப்பு நாடுகள் தடை விதிக்க வேண்டும்’ என்று விசாரணை ஆணையம் வலியுறத்தியுள்ளது.