எலான் மஸ்க்கின் ‘ஸ்டார்லிங்க்’ Vs முகேஷ் அம்பானியின் ‘ஜியோ’ - மோதலும் பின்புலமும்

எலான் மஸ்க்கின் ‘ஸ்டார்லிங்க்’ Vs முகேஷ் அம்பானியின் ‘ஜியோ’ - மோதலும் பின்புலமும்
Updated on: 
3 min read

“பிரதமர் அம்பானிக்கு என் பணிவான வணக்கங்கள்!” - எலான் மஸ்க் அடித்த ‘சர்க்காசம்’ பஞ்ச் இது.  “இந்தியாவின் உண்மையான முதலாளி அம்பானிதான்!” என்றும், “சில பெரும் பணக்கார முதலாளிகள் தங்களின் ஏகபோக உரிமையைத் தக்கவைக்க ஸ்டார்லிங்கை தடுக்கிறார்கள்” என்றும் எலான் மஸ்க் தனது எக்ஸ் தள பக்கத்தில் சமீபத்தில் முகேஷ் அம்பானியை கடுமையாக விமர்சித்திருந்தார்.

கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்ட இந்திய தொலைத்தொடர்பு சந்தையைக் கைப்பற்ற எலான் மஸ்க் துடிக்கிறார். ஆனால், அவருக்கான இடத்தை வழங்கினால் தன்னுடைய முற்றுரிமை பறிபோய்விடும் என ரிலையன்ஸ் நினைக்கிறது. வழக்கமாக இதுபோன்ற கார்ப்பரேட் போர்கள் திரைமறைவில்தான் நடக்கும். ஆனால், ஸ்டார்லிங்க் விவகாரத்தில் எலான் மஸ்க்கின் ஒரு வார்த்தை சர்வதேச வணிக உலகையே உலுக்கியுள்ளது.

இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு இரண்டு பெரும் தொழிலதிபர்கள் வெளிப்படையாக மோதிக்கொள்வது ஏன்? ஸ்டார்லிங்க் உண்மையிலேயே ஜியோவுக்குப் பெரிய ஆபத்தா? தொழில் போட்டியின் பின்னணியையும் உண்மை நிலவரத்தையும் சுருக்கமாகவும் தெளிவாகவும் பார்ப்போம்.

ரிலையன்ஸ், ஸ்டார்லிங்க் நிலைப்பாடு:

இந்த மோதலுக்கான முக்கியக் காரணமாக இருப்பது ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம். ரிலையன்ஸ் தரப்பைப் பொறுத்தவரை, ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலத்தின் மூலம்தான் நிறுவனங்கள் சந்தைக்குள் நுழைய வேண்டும் என்ற நிலைப்பாடு உள்ளது.

ஜியோ போன்ற உள்நாட்டு நிறுவனங்கள் 4ஜி மற்றும் 5ஜி ஸ்பெக்ட்ரமை பெற பல்லாயிரம் கோடி ரூபாய் கொடுத்து, அதற்கான ஏலத்தில் பங்கேற்றுள்ளன. எனவே, செயற்கைக்கோள் இன்டர்நெட் அலைக்கற்றையையும் ஏலம் வழியாகவே விற்க வேண்டும். அப்போதுதான் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இடையே சமமான போட்டி நிலவும் என்பது ரிலையன்ஸ் தரப்பு வாதமாகும்.

ஆனால், ஸ்டார்லிங்க் தரப்பு ‘செயற்கைக்கோள் அலைக்கற்றை என்பது பலராலும் பகிரப்படும் ஒரு விண்வெளி வளம். அதை ஏலம் விடக் கூடாது. சர்வதேச நடைமுறைப்படி அரசாங்கமே நிர்வாக ரீதியாக உரிமமாக ஒதுக்க வேண்டும்’ என்று வாதிடுகிறது.

எலான் மஸ்க் விமர்சனம் பின்னணி:

இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவையைத் தொடங்குவதற்கான அனுமதி தொடர்ந்து தாமதமாகி வருவதால், இதற்கு அம்பானியின் செல்வாக்கு காரணமாக இருக்கும் எனக் கருதி எலான் மஸ்க் வெளிப்படையாக விமர்சித்தார்.

எலான் மஸ்க் எக்ஸ் தனது தளத்தில் ரிலையன்ஸ் அதிபர் அம்பானி குறித்து, “பிரதமர் அம்பானி, இந்தியாவின் உண்மையான முதலாளி என்பதை உணராமல் இருந்ததற்கு மன்னியுங்கள். இந்தியாவின் முற்றுரிமையாக இருந்து கொண்டு, இந்திய மக்களைச் சுரண்டுகிறீர்கள்” என்று தெரிவித்தார்.

எலான் மஸ்க்கின் இந்தக் கிண்டல் கருத்து, நாட்டின் அமைப்பைக் குறைத்து மதிப்பிடுவது போலவும், மத்திய அரசு அம்பானியின் செல்வாக்கின் கீழ் இயங்குவதாகக் குற்றம் சாட்டுவது போலவும் அமைந்தது. இது, சமூக வலைதளங்களில் இந்திய மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

பின்னர் மற்றொரு பதிவில், “அம்பானியின் லாபம் குறையலாம், ஆனால் அவரது தொழில் நின்றுவிடாது. இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவையின் கட்டணம் அதிகமாக இருந்தால் யாரும் வாங்க மாட்டார்கள். எனவே, அனைவரும் வாங்கக்கூடிய வகையில் ஸ்பேஸ்எக்ஸ் விலையை நிர்ணயிக்கும்” என்று குறிப்பிட்டார்.

 அம்பானி எதிர்வினையும் மத்திய அரசு பதிலும்:

எலான் மஸ்கின் இந்த கருத்துக்கு பதிலளித்த ரிலையன்ஸ் தரப்பு, ‘நாங்கள் போட்டிக்கு அஞ்சவில்லை. ஆனால் விதிகள் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். உள்ளூர் தேவைகள் மற்றும் தேசிய பாதுகாப்புக் கட்டுப்பாடுகளுக்கு வெளிநாட்டு நிறுவனங்களும் உட்பட வேண்டும்’ என்று வலியுறுத்தியது.

மத்திய அரசு தரப்பில், ‘அனைத்து நிறுவனங்களுக்கும் தேசியப் பாதுகாப்புச் சோதனைகள் முடிந்த பின்பே வணிக ரீதியான அனுமதி வழங்கப்படும்’ எனத் தெளிவுபடுத்தப்பட்டது.

ஸ்டார்லிங்க் லைசென்ஸ் மற்றும் தேசிய பாதுகாப்பு:

எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு மத்திய அரசு சார்பில் குளோபல் மொபைல் பர்சனல் கம்யூனிகேஷன்ஸ் (GMPCS) உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும், வணிக ரீதியான அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை. இறுதிகட்டச் சோதனைகள் முழுமையடையாததால் ஸ்டார்லிங்க் நிறுவனத்தால் தற்போது வணிக ரீதியான சேவைகளைத் தொடங்க முடியாது. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் தரவுப் பாதுகாப்பு (Data Security) விதிகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்பதில் இந்திய அரசு உறுதியாக உள்ளது.

வெளிநாட்டுச் செயற்கைக்கோள் நிறுவனங்கள் நாட்டின் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு, பயனர் தரவுகளை இந்தியாவில் உள்ள சர்வர்களில் சேமிக்க வேண்டும் போன்ற கடுமையான பாதுகாப்பு நிபந்தனைகளை அரசு முன்வைத்துள்ளது.

மேலும், போர் போன்ற அசாதாரண சூழல்களில் அனைத்துத் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அவர்களின் இணையச் சேவையை முடக்க உத்தரவிட்டால், அதைத் தாங்கள் பின்பற்றுவதை அந்த நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்ற பாதுகாப்பு விதிகளும் இதில் அடங்கும்.

ஐபிஓ - கட்டண ஒப்பீடு:

ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம் பங்குச் சந்தையில் ஐபிஓ (IPO) வெளியீட்டுக்கான முன்தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்தவேளையில், மஸ்கின் விமர்சனங்கள் அதன் சூழலைச் சிக்கலாக்கியுள்ளன.

ரிலையன்ஸ் நிறுவனம் ஐபிஓ விற்பனைக்குத் தயாராகும் வேளையில், இந்தியாவின் சந்தை இறையாண்மையை ரிலையன்ஸ் குலைக்கிறது என்று உலகப் புகழ்பெற்ற கோடீஸ்வரர் ஒருவர் விமர்சிப்பது சூழலைச் சிக்கலாக்குகிறது. மேலும், அமெரிக்க அதிபருடன் எலான் மஸ்க்குக்கு இருக்கும் நெருங்கிய தொடர்பு, இந்த இணையவழி மோதலை மேலும் தீவிரப்படுத்தக்கூடும்.

கட்டணங்களைப் பொறுத்தவரை, ரிலையன்ஸ் ஜியோ மாத இணையதளம் மற்றும் ஓடிடி சேவைகளை 399 ரூபாய் முதல் 999 ரூபாய் வரை மலிவாக வழங்குகிறது. 1000 ரூபாய்க்கு மேல் கட்டணம் செலுத்தும் திட்டங்களில் இலவசமாக ரவுட்டரும் வழங்கப்படுகிறது. கண்ணாடி இழைக் கேபிள் வழியாகவும் (Fiber Cable) இணையதள இணைப்பு வழங்கப்படுகிறது.

ஆனால், ஸ்டார்லிங்கில் குறைந்தபட்ச மாதச் சந்தா 3,000 ரூபாய் முதல் 8,600 ரூபாய் வரையிலும், சாட்டிலைட் டிஷ் கிட்-டுக்காக 34,000 ரூபாய் வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

எனவே, செல்போன் டவர்களோ, இன்டர்நெட் கேபிள்களோ செல்ல முடியாத அடர்ந்த மலைப் பகுதிகள், காடுகள், தொலைதூரத் தீவுகள், கப்பல்கள் மற்றும் எல்லைப் பகுதிகளில் வசிக்கிறவர்களுக்கும், பெரிய தொழில் நிறுவனங்கள், ஆராய்ச்சி மையங்கள் மற்றும் தொலைதூரக் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமே ஸ்டார்லிங்க் ஒரு வரப்பிரசாதமாக இருக்க முடியும். சராசரி நுகர்வோருக்கு இது மிகவும் செலவு பிடிக்கும் விஷயமாகவே இருக்கும் என சமூக வலைத்தளங்களில்  பரவலான கருத்துகள் இருக்கின்றன.

எலான் மஸ்க்கின் ‘ஸ்டார்லிங்க்’ Vs முகேஷ் அம்பானியின் ‘ஜியோ’ - மோதலும் பின்புலமும்
பருப்பு வகைகளின் விலை அதிகரிப்பு ஏன்? - ‘ஷாக்’ நிலவரம் சொல்வது என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in