பருப்பு வகைகளின் விலை அதிகரிப்பு ஏன்? - ‘ஷாக்’ நிலவரம் சொல்வது என்ன?

பருப்பு வகைகளின் விலை அதிகரிப்பு ஏன்? - ‘ஷாக்’ நிலவரம் சொல்வது என்ன?

படம்: மெட்டா ஏஐ

Updated on: 
3 min read

கடைகளில் பருப்பு வாங்கச் செல்லும் சாமானிய மக்கள் கேட்கும் ஒரே கேள்வி - ‘போன வாரம் வந்தபோது இந்த விலை இல்லையே, அதற்குள் எப்படி இவ்வளவு ஏறிடுச்சு?’ என்பதுதான்.

பண்டிகைக் காலம் என்றாலே மகிழ்ச்சியும், பலகார மணமும்தான் நினைவுக்கு வரும். ஆனால், இந்த ஆண்டு தீபாவளி நெருங்கும் வேளையில், நடுத்தரக் குடும்பங்களின் மனதில் ஒருவித அச்சமும் கவலையும்தான் மிஞ்சுகிறது.

அரிசிக்கு அடுத்து இந்தியக் குடும்பங்களின் அத்தியாவசியத் தேவையாக இருக்கும் துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாசிப் பருப்பு ஆகியவற்றின் விலைகள் இப்போது சாமானிய மக்களின் கைக்கெட்டாத உயரத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன.

‘பருப்பு இல்லாமல் சமையலே இல்லை’ என்ற சூழலில், கடந்த ஒரு மாதத்திலேயே கிலோவுக்கு 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விலை கூடியிருப்பது எளிய மக்களின் மனதிலும் பெரும் கவலையை உருவாக்கியுள்ளது. உணவின் சுவையை மட்டுமல்ல, சமையலறை நிம்மதியையும் இந்த விலை உயர்வு பாதித்துள்ளது.

11% விலை உயர்வு

பண்டிகைக் காலம் நெருங்குவதையொட்டி பருப்பு வகைகளின் விலை திடீரென நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. மொத்த விற்பனையிலேயே கூட பருப்பு வகைகளின் விலை சராசரியாக 11 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்திய பருப்பு வகைகள் மற்றும் தானியங்கள் கூட்டமைப்பு (IPGA) தெரிவித்துள்ளது.

இதில் கொண்டைக்கடலை விலை ஒரு மாதத்தில் 11 சதவீதம், பாசிப் பருப்பு 10.6 சதவீதம், துவரம் பருப்பு 6.5 சதவீதம், கடலைப் பருப்பு 6 சதவீதம் வரை அதிகரித்துள்ளன. அதிலும் குறிப்பாக, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கிலோவுக்கு ரூ.3 முதல் ரூ.5 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

அக்டோபர் பிறந்தவுடன் தசரா, தீபாவளி எனத் தொடர் பண்டிகைகள் வருவதால் மளிகைப் பொருட்களுக்குக் கடும் தேவை ஏற்படும். அதனால் இப்போதே பருப்பு வகைகளின் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

போதுமான விளைச்சல் இல்லாதது, மழை பொய்த்தது, எல் நினோ தாக்கம் ஆகியவற்றால் சந்தைக்குச் சீரான வரத்து இல்லாததே முக்கியக் காரணம் என வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

என்ன காரணம்?

இந்தியாவில் எல் நினோ தாக்கத்தின் காரணமாக பல மாநிலங்களில் பருவமழை இயல்பை விடக் குறைவாகப் பெய்தது. காலம் தவறிய மழை, காலநிலை மாற்றம், வறட்சி ஆகியவற்றால் பருப்பு விளைச்சல் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.

பருப்பு விளைச்சல் அதிகமாக இருக்கும் மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு போதிய மழைப்பொழிவு இல்லை. குறிப்பாக, துவரம் பருப்பு மற்றும் பாசிப் பருப்பு சாகுபடி பரப்பளவும் குறைந்துவிட்டதால், விளைச்சல் எதிர்பார்த்த அளவை விடக் குறைந்ததே விலை உயர்வுக்கு முக்கியக் காரணம்.

விலை உயர்வு எவ்வளவு?

இந்திய பருப்பு வகைகள் மற்றும் தானியங்கள் கூட்டமைப்பின் (IPGA) தகவல்படி, ஒரு மாத நிலவரம்:

 > கொண்டைக்கடலை: 11% உயர்வு (கடந்த ஒரு வாரத்தில் 5.5%)

 > பாசிப் பருப்பு: 10.6% உயர்வு (கடந்த ஒரு வாரத்தில் 4.3%)

 > துவரம் பருப்பு: 6.2% உயர்வு (கடந்த ஒரு வாரத்தில் 2.4%)

 > பட்டாணிப் பருப்பு: 6% உயர்வு (கடந்த ஒரு வாரத்தில் 3%)

ஆண்டு ஒப்பீட்டில், கொண்டைக்கடலை 27%, பட்டாணிப் பருப்பு 47%, உளுந்தம் பருப்பு 27% வரை உயர்ந்துள்ளன. மத்திய அரசின் தகவல்படி, சராசரியாகக் கடலைப் பருப்பு கிலோ ரூ.88.72, துவரம் பருப்பு கிலோ ரூ.125.72, பாசிப் பருப்பு கிலோ ரூ.112.14 ஆக விற்பனையாகிறது.

கொண்டைக்கடலை விலை உயர்வு ஏன்?

இந்திய அளவில் மக்களால் அதிகம் நுகரப்படும் பருப்பு, கொண்டைக்கடலை வகைதான்.  ராபி பருவத்தில் கொண்டைக்கடலை பயிரிடும்போது மண்ணில் ஈரப்பதம் அதிகம் இருக்க வேண்டும். ஆனால், தற்போது வறட்சி நிலவுவதால் கொண்டைக்கடலை பயிரிடுவது கடினமாகியுள்ளது. எல் நினோ காலநிலையால் கொண்டைக்கடலை பயிரிடப்படும் பரப்பளவும் குறைந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், இந்தியா ஆண்டுதோறும் ஆஸ்திரேலியாவில் இருந்து அதிகளவில் கொண்டைக்கடலை இறக்குமதி செய்கிறது. இந்தியாவின் மொத்த கொண்டைக்கடலை இறக்குமதியில் 95% ஆஸ்திரேலியாவில் இருந்தே நடைபெறுகிறது. ஆனால், ஆஸ்திரேலியாவிலேயே கடந்த ஆண்டு விளைச்சல் 50 சதவீதம் குறைந்துவிட்டது. 2025-26-ஆம் நிதியாண்டின் ஜனவரி முதல் ஜூலை வரை 6.42 லட்சம் டன் கொண்டைக்கடலையை மட்டுமே இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 45 சதவீதம் குறைவாகும்.

பருப்பு வகைகளின் விளைச்சல், கையிருப்பு நிலை என்ன?

மத்திய அரசின் தகவல்படி, 2025-26-ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த பருப்பு உற்பத்தி 274.09 லட்சம் டன்களாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டின் 257 லட்சம் டன் உற்பத்தியை விட 6.7 சதவீதம் அதிகமாகும். இதில் கொண்டைக்கடலை உற்பத்தி 12.6 சதவீதம் அதிகரித்து 125.14 லட்சம் டன்களாகவும், பாசிப்பயறு (மூங்) உற்பத்தி சுமார் 6 சதவீதம் அதிகரித்து 44.92 லட்சம் டன்களாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது அரசிடம் சுமார் 4.5 மில்லியன் டன்கள் பருப்பு கையிருப்பு உள்ளது. இந்த இருப்பில் 1.95 மில்லியன் டன் கொண்டைக்கடலை, 1 மில்லியன் டன் துவரம் பருப்பு, 0.88 மில்லியன் டன் பாசிப் பருப்பு மற்றும் 0.56 மில்லியன் டன் மைசூர் பருப்பு ஆகியவை அடங்கும்.

இனிமேலும் விலை அதிகரிக்குமா?

தீபாவளிப் பண்டிகை முடியும் வரை சில்லறை விற்பனையில் பருப்பு வகைகளின் விலை கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.15 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மொத்த விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

அதேவேளையில், டிசம்பர் - ஜனவரி மாதங்களில் உள்நாட்டிலிருந்து காரிஃப் பருவப் பயிர்கள் சந்தைக்கு வரத் தொடங்கும்போது படிப்படியாகப் பருப்பு வகைகளின் விலை குறையும்.

மத்திய அரசு இறக்குமதியை தீவிரப்படுத்துவது, வியாபாரிகளின் பதுக்கலைத் தடுக்க ‘இருப்பு வரம்பு’ விதிப்பது மற்றும் ‘பாரத் தால்’ (Bharat Dal) திட்டத்தின் கீழ் மானிய விலையில் கடலைப் பருப்பு விற்பனையை அதிகரிப்பது போன்ற தீவிர நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே இந்த விலை உயர்வைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

பருப்பு வகைகளின் விலை அதிகரிப்பு ஏன்? - ‘ஷாக்’ நிலவரம் சொல்வது என்ன?
மனித குலத்துக்கே ‘ஏஐ’ அச்சுறுத்தலா? - விவாதம் வலுப்பதன் பின்புலம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in