Published : 31 May 2023 08:17 PM
Last Updated : 31 May 2023 08:17 PM

தமிழகத்தில் 2 ஆண்டுகளில் புதிய தொழில்முனைவோர் ஆன 2,344 பட்டியலின, பழங்குடியின இளைஞர்கள்: அரசு தகவல்

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் குறித்த திட்ட விளக்க கையேட்டினை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டார்

சென்னை: "தமிழக அரசு பொறுப்பேற்ற இரண்டு ஆண்டு காலத்தில், 4 வகையான சுயவேலைவாய்ப்புத் திட்டங்கள் மூலம் பட்டியல், பழங்குடியின இளைஞர்களுக்கு ரூ.58.34 கோடி மானியத்துடன் ரூ.177.72 கோடி வங்கி கடனுதவி வழங்கப்பட்டு, 2,344 படித்த இளைஞர்கள் புதிய தொழில் முனைவோர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர்" என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை, கிண்டி, சிட்கோ வளாகத்தில் இன்று (மே31) நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ரூ.100 கோடி மதிப்பில் புதியதாக அறிவிக்கப்பட்ட அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் குறித்த திட்ட விளக்க கையேட்டினை வெளியிட்டார். அதனை MSME அரசு செயலாளர் வி.அருண்ராய், பெற்றுக் கொண்டார். விழாவில் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியின சங்கத்தினர், தொழில் முனைவோர்களுக்கு அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் குறித்து விளக்கப்பட்டது.

இந்த விழாவில் அமைச்சர் பேசியது: "ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினருக்கு பாதுகாவலராக விளங்கும் முதல்வர், பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திட நடப்பு நிதி நிலை அறிக்கையில் ரூ.100 கோடி நிதி ஒதுக்கீட்டில், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் புதிய தொழில் முனைவோருக்கும், தொழில் துவங்கி நடத்தி வருபவர்களுக்கும், தொழிலை விரிவாக்கம் செய்பவர்களுக்கு 35 சதவீதம் முதலீட்டு மானியமும், 6 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும்.

மேலும், இத்திட்டத்தின் பயனாளிகளுக்கு கல்வித் தகுதி முழுவதும் விலக்கு அளிக்கப்பட்டதுடன், 55 வயது உள்ளவரும் புதிதாக தொழில் தொடங்க முன்வரலாம். இத்திட்டத்தின் கீழ், ஆர்வமுள்ள புதிய தொழில் முனைவோர் உற்பத்தி, வணிகம், சேவை சார்ந்த அனைத்துத் தொழில்களுக்கும் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும்.

மேலும், இவ்வரசு பொறுப்பேற்ற 2 ஆண்டு காலத்தில் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, MSME துறையின் மூலம் NEEDS, UYEGP, PMEGP, PMFME ஆகிய 4 வகையான சுய வேலைவாய்ப்பு திட்டங்கள் மூலம் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ரூ.58 கோடியே 34 லட்சம் மானியத்துடன் ரூ.177 கோடியே 72 லட்சம் வங்கி கடனுதவி வழங்கப்பட்டு 2,344 படித்த இளைஞர்கள் புதிய தொழில் முனைவோர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு பட்ஜெட்டில் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியின புத்தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அதில் 13 ஸ்டாட்-அப் நிறுவனங்களுக்கு ரூ.17 கோடியே 25 லட்சம் பங்கு முதலீடாக வழங்கப்பட்டுள்ளது. 8 ஸ்டாட்-அப் நிறுவனங்களுக்கு ரூ. 11 கோடி பங்கு மூலதனம் விரைவில் வழங்கப்படவுள்ளது.

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தினை மாவட்ட பொது மேலாளர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் இதர துறை அலுலவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு இத்திட்டத்தினை விரைந்து செயல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அரசால் நிறைவேற்றப்படும் பல்வேறு திட்டங்களை, பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள், தொழில் முனைவோர்கள் முழுமையாக பயன்படுத்தி தொழில் துறையில் தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக கொண்டு வர வேண்டும்" என்று அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் சிஜி தாமஸ், சிட்கோ மேலாண்மை இயக்குநர் எஸ். மதுமதி, தொழில் வணிக கூடுதல் ஆணையர் கிரேஸ் பச்சோவ், இன்ட்கோசர்வ் முதன்மை செயல் அலுவலர் மோனிகா ராணா, தொழில் வணிக கூடுதல் இயக்குநர் ஏகாம்பரம் மற்றும் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியின சங்கத்தினர், தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x