Published : 22 May 2023 05:32 AM
Last Updated : 22 May 2023 05:32 AM

ரூ.2,000 நோட்டுகள் வாபஸ் எதிரொலி | கருப்புப் பணத்தை மாற்ற புதிய வழிகளில் முயற்சி - நடவடிக்கை எடுக்குமா அரசு?

கோப்புப்படம்

கருப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில் 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு, அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது. அதற்குப் பதிலாக புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளை அறிமுகம் செய்தது.

வரி செலுத்தாமல் சொத்து சேர்த்தவர்கள் மத்திய அரசின் இந்த அறிவிப்பால் திணறிப்போயினர். தங்கள் வசமுள்ள கட்டுக்கட்டான பணத்தை எப்படி மாற்றுவது என்று தெரியாமல் திணறினர். பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றித் தருவதற்கென்று புரோக்கர்கள் உருவானர்கள். பெரும் கமிஷன் வாங்கிக் கொண்டு, அவர்கள் கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றிக் கொடுத்தார்கள். பலர் தங்கள் வசமிருந்த கருப்புப் பணத்தை அவசர அவசரமாக தங்கத்தில் முதலீடு செய்தனர். வரி விதிப்புக்குப் பயந்து பல்வேறு வழிகளில் பணத்தை மாற்றும் முயற்சியில் இறங்கினர்.

தற்போது மீண்டும் அப்படி ஒரு சூழல் உருவாகி இருக்கிறது. மக்கள் தங்கள் வசமுள்ள ரூ.2000 நோட்டுகளை மாற்ற செப்டம்பர் 30-ம் தேதி வரை, அதாவது 4 மாதங்கள் ரிசர்வ் வங்கி அவகாசம் வழங்கியுள்ளது. வங்கி மூலம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள சில வரம்புகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, நபர் ஒருவர் வங்கிகள் மூலம் நாளொன்றுக்கு ரூ.20 ஆயிரம் வரையில் மட்டுமே ரூ.2000 நோட்டுகளை மாற்ற முடியும்.

இதனால், கணக்கில் காட்டாமல் பணம் பதுக்கி இருப்பவர்கள் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றனர். அவர்கள் தங்கள் வசமுள்ள ரூ.2000 நோட்டுகளை வங்கிகளுக்குச் சென்று மாற்றினால், வருமானக் கணக்கு காட்ட வேண்டும். அப்படிக் காட்டும்பட்சத்தில் அதற்கு வரி செலுத்த வேண்டியதாக இருக்கும். இதிலிருந்து தப்பிக்க, 2016-ல் கையாண்ட வழிமுறைகளை அவர்கள் மீண்டும் கையில் எடுக்கத் தொடங்கியுள்ளனர்.

ரூ.2000 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு கடந்த வெள்ளிக்கிழமை மாலை வெளியானது. அன்றைய தினமே, பெரு நகரங்களில் உள்ள நகைக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. பலர் ரூ.2000 நோட்டுகளை கட்டுக்கட்டாக அள்ளிக்கொண்டு நகை வாங்க வருவதாக கூறப்படுகிறது.

நகைக் கடைகள் இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்த ஆரம்பித்து இருக்கின்றன. அதாவது, 10 கிராம் தங்கத்தின் விலை ஜிஎஸ்டியோடு சேர்த்து ரூ.64,000 என்றால், சில கடைகள் ரூ.2000 நோட்டுகள் செலுத்தி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10 கிராம் தங்கத்தை ரூ.70 ஆயிரத்துக்கு விற்கின்றன.

கோயில் உட்பட மத அமைப்புகள் வழியே பணத்தை மாற்றும் முயற்சியில் பலர் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத அமைப்புகளுக்கு நன்கொடை வழங்குவது போல், தங்கள் வசமுள்ள ரூ.2000 நோட்டுகளை அவர்கள் மாற்றி வருவதாகவும் அரசியல்வாதிகள் தாங்கள் சார்ந்த துறை மூலம் கருப்புப் பணத்தை மாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.

கணக்கில் காட்டாமல் சொத்து சேர்த்தவர்கள் அடுத்த நான்கு மாதங்களுக்கு வெவ்வேறு வழிகளில் தங்கள் வசமுள்ள கருப்புப் பணத்தை மாற்றும் முயற்சியில் இறங்குவர். மத்திய அரசு இந்தப் போக்குகளை தீவிரமாகக் கண்காணித்து நடவடிக்கை எடுப்பது அவசியமாகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x