Published : 07 Mar 2023 02:34 PM
Last Updated : 07 Mar 2023 02:34 PM

நிதி நெருக்கடி எதிரொலி: மீண்டும் ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு மெட்டா நிறுவனம் திட்டம்

ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா மீண்டும் தனது ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பணிநீக்கம் இந்த வாரத்தில் நடக்கலாம் என்று கூறப்படுகிறது.

உலகின் மிப்பெரிய சமூக வலைதள நிறுவனமான மெட்டா, நிர்வாகத்தின் பொருளாதார சீர்திருத்தத்திற்காக, கடந்த 2022 நவம்பர் மாதத்தில் மேற்கொண்ட 13 சதவீத ஊழியர்களின் பணி நீக்கத்தினை விட அதிகமானவர்களை நீக்க இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக, மெட்டா நிறுவனம் தனது முந்தைய ஆள்குறைப்பு நடவடிக்கையின் போது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 11,000 பேரை பணியில் இருந்து நீக்கியது. இந்தநிறுவனம் தனது நிர்வாகத்தினை சீர்செய்யும் நடவடிக்கையாக, அவசியம் இல்லாமல் இருக்கும் குழுக்களை நீக்கும் நடவடிக்கையில் ஏற்கெனவே ஈடுபட்டு வந்ததாக ப்ளூம்பெர்க் நிறுவனம் பிப்ரவரியில் தெரிவித்திருந்தது. இந்த நடவடிக்கை இறுதி செய்யப்படும்போது ஆயிரக்கணக்கான ஊழியர்களின் வேலை இழப்புக்கு வழிவகுக்கும்.

இந்த பணிநீக்கம் பொருளாதார இழப்புகள் காரணமாக நிகழ்கிறது என்றும், இதற்கும் நிர்வாக சீர்திருத்தத்திற்கும் தொடர்பில்லை என்றும் விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். விளம்பர வருவாயில் சரிவைக் கண்டுள்ள மெட்டா நிறுவனம் "மெட்டாவேர்ஸ்" என்ற விர்ச்சுவல் ரியாலிட்டி தளத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. இந்தநிலையில், நிறுவனத்தின் இயக்குநர்கள், துணைத் தலைவர்களிடம் நிறுவனத்தில் இருந்து வெளியேறக் கூடியவர்களின் பட்டியலைத் தயார் செய்யும்படி கேட்கப்பட்டுள்ளது.

இந்த பணிநீக்க நடவடிக்கை அடுத்த வாரத்தில் இறுதி செய்யப்படலாம். அதற்கான திட்டங்கள் தயார் நிலையில் உள்ளன. மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் மார்க் ஸக்கர்பெர்க் விடுமுறையில் செல்வதற்கு முன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று விபரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் அவர்கள், கடந்த நவம்பர் மாதம் நடந்த ஆள்குறைப்பு நடவடிக்கை ஆச்சரியமாக இருந்தது. தற்போது பலர் அதை எதிர்பார்த்தே இருந்தனர். இந்த 2023-ம் ஆண்டை "செயல்திறன்களின் ஆண்டு" என்று மார்க் ஸக்கர்பெர்க் அறிவித்துள்ளார். இது கடந்த வாரம் நடந்த நிறுவனத்தின் மதிப்பாய்வு கூட்டத்தில் ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது என்றும் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x