Published : 22 Feb 2023 06:20 AM
Last Updated : 22 Feb 2023 06:20 AM

யுபிஐ - பேநவ் இணைப்பு இந்தியா, சிங்கப்பூர் உறவில் புதிய மைல்கல் - பிரதமர் மோடி பாராட்டு

யுபிஐ – பேநவ் இணைப்பு நிகழ்வில் பங்கேற்ற பிரதமர் மோடி, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் உள்ளிட்டோர். படம்: பிடிஐ

புதுடெல்லி: இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையிலான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை எளிமைப்படுத்தும் வகையில் இந்தியாவின் யுபிஐ மற்றும் சிங்கப்பூரின் பேநவ் ஆகிய இரு பணப்பரிவர்த்தனை தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, இனி சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்கள் தங்கள் மொபைல் செயலி வழியாக, மொபைல் எண் அல்லது யுபிஐ ஐடி பயன்படுத்தி இந்தியாவில் உள்ள தங்கள் உறவினர்களுக்கு குறைந்த கட்டணத்தில் எளிமையான முறையில் பணம் அனுப்பமுடியும். அதுபோலவே இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு யுபிஐ செயலிகள் வழியாக எளிதில் பணம் அனுப்ப முடியும்.

யுபிஐ – பேநவ் இணைப்பு நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த இணைப்பின் வழியான முதல் பரிவர்த்தனையை இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் மற்றும் சிங்கப்பூர் நிதி ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ரவி மேனன் மேற்கொண்டனர். காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் கலந்துகொண்டனர்.

யுபிஐ பரிவர்த்தனை கட்டமைப்பு இந்தியாவில் 2016-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. தற்போது பெரிய வணிக வளாகங்கள் முதல் சிறிய பெட்டிக் கடை வரை யுபிஐ முதன்மையான பரிவர்த்தனை தளமாக மாறியுள்ளது.

இந்நிலையில் யுபிஐ –பேநவ் இணைப்பு இருநாடுகளுக் கிடையிலான பரிவர்த்தனை முறையில் முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், “யுபிஐ வழியிலான பணப்பரிவர்த்தனை மிகவும் பாதுகாப்பானது. சென்ற ஆண்டில் இந்தியாவில் யுபிஐ மூலம் 7,400 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மொத்தமாக ரூ.126 லட்சம் கோடி பரிவர்த்தனை செய்யப்படுள்ளது. மிக விரைவிலேயே இந்தியாவில் ரூபாய் பரிவர்த்தனையைவிட டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகமாகும் என்று நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

பல்வேறு நாடுகளுக்கு யுபிஐ பரிவர்த்தனையை எடுத்துச் செல்கிறோம். தற்போது முதல் நாடாக சிங்கப்பூருடன் யுபிஐ - பேநவ் இணைவு ஏற்பட்டுள்ளது. இது இரு நாடுகளுக்கிடையிலான உறவில் புதிய மைல்கல்” என்று தெரிவித்தார்.

பரிவர்த்தனை கட்டணம் குறையும்: சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் கூறுகையில், “2018-ம் ஆண்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூர் வந்தபோது, யுபிஐ -பேநவ் தளங்களை இணைக்க முடிவு செய்தோம். தற்போது அது நிறைவேறியுள்ளது. அந்த வகையில், உலக அளவில் இருநாடுகளின் நிகழ்நேர பரிவர்த்தனைத் தளங்கள் இணைக்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறை. இந்தப் புதிய வசதியால் சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பரிவர்த்தனை உயரும். மேலும், பரிவர்த்தனைக் கட்டணம் குறையும்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x