Published : 03 Feb 2023 01:17 PM
Last Updated : 03 Feb 2023 01:17 PM

அமெரிக்காவின் டவ் ஜோன்ஸ் நிலைக்குறியீட்டில் இருந்து அதானி எண்டர்பிரைசஸ் நீக்கம்

கோப்புப்படம்

புதுடெல்லி: பங்கு முறைகேடு, பண மோசடி குற்றச்சாட்டிற்கு உள்ளாகி இருக்கும் அதானி குழுமங்களின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசர்ஸ், டவ் ஜோன்ஸ் நிலைக்குறியீட்டில் இருந்து பிப்,7ம் தேதி முதல் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க பங்குச்சந்தை குறியீட்டு நிறுவனமான டவ் ஜோன்ஸ் குறியீடு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்," கணக்கு மோசடி குற்றச்சாட்டிற்கு உள்ளாகி இருக்கும் அதானி எண்டர்பிரைசர்ஸ் டவ் ஜோன்ஸ் நிலைக்குறியீட்டில் இருந்து நீக்கப்படுகிறது. இந்த மாற்றம் பிப்.7-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இந்தியாவின் முன்னணி பங்குச்சந்தைகளான சென்செக்ஸ், நிஃப்டி இரண்டும் அதானி எண்டர்பிரைசர்ஸ், அதானி போர்ட், அம்புஜா சிமெண்ட்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்களை அவைகளின் குறுகிய கால கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கையின் (ASM) கீழ் வைத்துள்ளது.

இதற்கிடையில் மும்பை பங்குச்சந்தையில் அதானி எண்டர்பிரைசர்ஸ் பங்குகள் 15 சதவீதம் வீழ்ச்சி அடைந்து விற்பனையானது. இந்த வீழ்ச்சி வியாழக்கிழமை 26 சதவீதமாகவும், புதன்கிழமை 28 சதவீதமாகவும் இருந்தது.

கடந்த ஆறு வர்த்தக அமர்வுகளில் பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்ட அதானி குழுமத்தின் 10 நிறுவனங்கள் ரூ.8.76 கோடி இழப்பைச் சந்தித்துள்ளன.

இதற்கிடையில் அதானி எண்டர்பிரைசர்ஸ், முதலீட்டாளர்களின் நலன் கருதி,20 ஆயிரம் கோடி மதிப்பிலான எஃப்பிஓ பங்குகளை நிறுத்தி வைப்பதாக புதன்கிழமை அறிவித்தது.

ஹிண்டன்பர்க் அறிக்கை: சமீபத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டுஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்றில்,“அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு கடந்த 3 ஆண்டுகளாக அபரிமிதமாக உயர்ந்தது. இதில் முறைகேடு நடந்துள்ளது. மேலும், போலி நிறுவனங்களைத் தொடங்கிவரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு மளமளவென சரிந்தன.

இந்தக்குற்றச்சாட்டுகளை போலியானவை, இந்தியாவின் மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல் என தெரிவித்துள்ள அதானி நிறுவங்கள் சட்டபூர்வமான அனைத்து நடவடிக்கைகளுக்கும் உடன்பட தயார் எனக் தெரிவித்துள்ளது.

மஹூவா கேள்வி: இந்தநிலையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்பி மஹூவா மொய்த்ரா, அதானி குழுமத்தின் பங்குகளின் குறியீட்டை தேசிய பங்குச்சந்தை (என்எஸ்இ) இன்னும் ஏன் மறுமதிப்பீடு செய்யவில்லை என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பங்கு முறைகேடு மற்றும் கணக்கு மோசடி குற்றச்சாட்டு காரணமாக அமெரிக்காவின் டவ் ஜோன்ஸ் குறியீட்டு நிறுவனம் அதானி நிறுவனத்தை தனது நிலைகுறியீட்டு பட்டியலில் இருந்து நீக்கி உள்ளது. சர்வதேச அளவிலான பங்குசந்தையாக இருக்கும் தேசிய பங்குச்சந்தை (என்எஸ்இ) ஏன் இன்னும் அதானி நிறுவனங்களின் குறியீடுகளை மறுமதிப்பீடு செய்யவில்லை " என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x