Published : 02 Feb 2023 06:23 AM
Last Updated : 02 Feb 2023 06:23 AM

மத்திய பட்ஜெட் 2023-24 | பிரதமரின் வீடு கட்டும் திட்டத்துக்கு ரூ.79,000 கோடி ஒதுக்கீடு

மத்திய பட்ஜெட்டில் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்துக்கு ரூ.79 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 66% அதிகம். வரும் 2023-24 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்துக்காக (பிஎம்ஏஒய்) ரூ.79 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும். இது கடந்த ஆண்டில் ஒதுக்கப்பட்ட ரூ.48 ஆயிரம் கோடியுடன் ஒப்பிடும்போது 66% அதிகம்.

மேலும் ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்தைப் போல நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம் மத்திய அரசால் உருவாக்கப்படும். இதை தேசிய வீட்டு வசதி வங்கி நிர்வகிக்கும். இதற்காக ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கும். நாட்டில் அனைத்து நகரங்களிலும் பாதாள சாக்கடை மற்றும் கழிவறை தொட்டிகள் அனைத்தும் மனிதர்களுக்கு பதில் இயந்திரங்களால் சுத்தம் செய்யும் வகையில் மாற்றி அமைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பாதுகாப்புத் துறைக்கு ரூ.5.94 லட்சம் கோடி: பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.5.94 லட்சம் கோடியாக அதிகரிக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2023-24 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: வரும் நிதியாண்டுக்கு பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.5.94 லட்சம் கோடியாக அதிகரிக்கப்படும்.

இதில், போர் விமானங்கள், போர்க்கப்பல்கள், ராணுவ தளவாடங்கள் உட்பட புதிதாக ஆயுதங்கள் வாங்குவதற்காக ரூ.1.62 லட்சம் கோடி செலவிடப்படும். நடப்பு 2022-23 நிதியாண்டில் பாதுகாப்புத் துறைக்கு ஒட்டுமொத்தமாக ரூ.5.25 லட்சம் கோடியும் ஆயுத கொள்முதலுக்காக ரூ.1.52 லட்சம் கோடியும் ஒதுக்கப்பட்டது.

வரும் நிதியாண்டுக்கு துறை சார்ந்த ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ராணுவ தளவாடங்களின் பராமரிப்பு உள்ளிட்டவற்றுக்கு ரூ.2.7 லட்சம் கோடி ஒதுக்கப்படும். நடப்பு நிதியாண்டில் இதற்கான ஒதுக்கீடு ரூ.2.39 லட்சம் கோடியாக இருந்தது. வரும் நிதியாண்டுக்கு ஓய்வூதியத்துக்காக ரூ.1.38 லட்சம் கோடி ஒதுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பெண்களுக்கு 7.5 சதவீத வட்டியில் புதிய சேமிப்பு திட்டம்: பெண்களுக்கான புதிய சிறுசேமிப்பு திட்டத்தை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதுகுறித்து அவர் தனது உரையில், “புதிய சிறுசேமிப்புத் திட்டமான 'மஹிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ்' மார்ச் 2025 வரையிலான இரண்டு ஆண்டு காலத்திற்கு கிடைக்கும். இதில் பெண்கள் மற்றும் சிறுமிகள் பெயரில் 2 ஆண்டு காலத்திற்கு ரூ.2 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். டெபாசிட் தொகைக்கு 7.5 சதவீத நிலையான வட்டி வழங்கப்படும். டெபாசிட் தொகையில் ஒரு பகுதியை முன்கூட்டியே பெற விரும்பினால் பெற்றுக்கொள்ளலாம்” என்றார்.

பிஎம்- கிஸான் திட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.2.2 லட்சம் கோடி வழங்கல்: பிஎம்-கிஸான் திட்டத்தின் கீழ் மத்திய அரசு விவசாயிகளுக்கு ரூ.2.2 லட்சம் கோடி ரொக்கத்தை பரிமாற்றம் செய்துள்ளதாக பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். டிஜிட்டல் பேமண்ட் முறைகள் கணிசமான அளவில் அதிகரித்துள்ளது.

வேளாண் துறைக்கு வழங்கப்பட்ட கடன் 2020-21-ம் நிதியாண்டில் ரூ.15.8 லட்சம் கோடியாக இருந்த நிலையில், 2022-ல் ரூ.18.6 லட்சம் கோடியாக அதிகரித்தது. பிஎம்-கிஸான், பிஎம்-பசல் பீமா யோஜனா, வேளாண் துறை கட்டமைப்பு நிதியம் உருவாக்கம் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு முன்மாதிரித் திட்டங்கள் வேளாண் துறை வளர்ச்சிக்கு பெரிதும் உதவியுள்ளன என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x