Last Updated : 30 Jan, 2023 04:20 AM

 

Published : 30 Jan 2023 04:20 AM
Last Updated : 30 Jan 2023 04:20 AM

பனி தாக்கத்தால் மல்லிகை உற்பத்தி 70% பாதிப்பு: பராமரிப்பு செலவு அதிகரிப்பால் விவசாயிகள் வேதனை

கிருஷ்ணகிரி பகுதியில் நிலவும் பனிப்பொழிவால் மல்லிகைச் செடிகளில் பூச்சித் தாக்குதல் அதிகரித்துள்ளது. இதையடுத்து, நாட்டாண்மை கொட்டாய் பகுதியில் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பகுதியில் நிலவும் பனித் தாக்கத்தால் மல்லிகைப் பூக்கள் விளைச்சல் 70 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பராமரிப்பு செலவுகள் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி, காவேரிப் பட்டணம், அவதானப்பட்டி, நாட்டாண்மைக்கொட்டாய், மலையாண்டஅள்ளி, வேலம்பட்டி, போச்சம்பள்ளி, மத்தூர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மல்லிகை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.

பெங்களூரு சந்தைக்கு பயணம்: இங்கு சாகுபடி செய்யப்படும் மல்லிகைப்பூ சரக்கு வாகனங்களில் பெங்களூரு மலர் சந்தைக்கு விற்பனைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு ஏலம் முறையில் பூக்கள் விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது, மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகை மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், பூக்கள் விலை உயர்ந்தும், பூச்சி தாக்குதலுக்கு மருந்து தெளிப்பு உள்ளிட்ட பராமரிப்புச் செலவு அதிகரித்துள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சுழற்சி முறையில் மகசூல் - இது தொடர்பாக நாட்டாண்மைக் கொட்டாயைச் சேர்ந்த விவசாயி ராமலிங்கம் மற்றும் சிலர் கூறியதாவது: ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மல்லிகை மகசூல் அதிகரிக்கும். நவம்பர், டிசம்பர், ஜனவரியில் மகசூல் குறைவாக இருக்கும்.

தற்போது, கடும் பனி மூட்டம் காரணமாக மல்லிகை மகசூல் வழக்கத்தைவிட 70 சதவீதம் குறைந்துள்ளது. பொங்கல் பண்டிகையின்போது, கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு மேல் விற்பனையானது. கடந்த சில நாட்களாக கிலோ ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை விலை போகிறது. பனியால் பூ மொட்டுகள் மலர்வது இல்லை.

வெயிலின் தாக்கம் வந்த பிறகே பூக்கள் மலர்ந்து பறிக்க உகந்ததாக உள்ளது. இதேபோல, செடிகளில் பூச்சிகளின் தாக்குதல் அதிகரித் துள்ளதால், மருந்து தெளிப்பு, பராமரிப்புச் செலவுகள் அதிகமாக உள்ளது. இதனால், விலை உயர்ந்தும் பயனில்லை, என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x