Published : 28 Jan 2023 06:10 AM
Last Updated : 28 Jan 2023 06:10 AM

கோவை விமான நிலையத்துக்கு வரும் முதியவர்கள், கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகளுக்கு தனி கவனம் செலுத்த புதிய திட்டம்

கோவை: கோவையில் விமான பயணம் மேற்கொள்ளும் முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனிகவனம் செலுத்தும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

கோவை விமான நிலையத்தில் தினமும் அதிகபட்சமாக 28 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை, புனே, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கும் ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்படுகிறது.

விமான நிலையத்துக்கு வரும் முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் மீது தனி கவனம் செலுத்தும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதுகுறித்து கோவை சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது: கோவையில் தினமும் 10,000-க்கும் மேற்பட்டோர் விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். விமான பயணிகளை கவனிக்கும் முறை தொடர்பாக மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகளுடன் விமான பயணம் மேற்கொள்ளும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனிகவனம் செலுத்துமாறு தெரிவித்துள்ளது. கோவை விமான நிலையத்தில் தற்போது இந்த திட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இதன்படி விமான நிலைய ஊழியர்கள், மேற்குறிப்பிட்ட பிரிவை சேர்ந்த பயணிகளை வரவேற்று, அவர்களின் தேவையை கேட்டறிந்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருவர்.

குறிப்பாக அவர்களின் உடைமைகளை எடுத்துச் செல்லுதல், முதியவர்களை கைத்தாங்கலாக அன்புடன் அழைத்து செல்லுதல், குழந்தைகளுடன் வரும் பெண்கள் சிரமமின்றி விமான நிலைய வளாகத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவிகள் செய்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் இத்திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும்.

அமல்படுத்தப்பட்ட ஒரு சில நாட்களிலேயே பயணிகள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. எதிர்வரும் நாட்களில் இத்திட்டத்தை மேலும் மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x