

புதுடெல்லி: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி சேவைகளை நவீனமாக்கும் நோக்கில் மத்திய அரசு புதிய இபிஎஃப் திட்டத்தை அமல்படுத்தியுள்ள வேளையில், நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் ஓய்வூதிய சேமிப்புப் பணம் கோடிக்கணக்கில் முடங்கிக் கிடப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளிவந்துள்ளது.
தேசிய அளவில் உரிமை கோரப்படாமல், செயலற்றுக் கிடக்கும் சுமார் 30.91 லட்சம் இபிஎஃப் கணக்குகளில் ரூ.9,330 கோடிக்கும் அதிகமான நிதி முடங்கிக் கிடப்பதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் அளித்துள்ள ஆர்டிஐ பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கடந்த ஜூன் 29 முதல், 1952-ஆம் ஆண்டின் பழைய இபிஎஃப் திட்டத்துக்கு மாற்றாக, காகிதப் பணிகளைக் குறைத்து டிஜிட்டல் அணுகுமுறையை மேம்படுத்தும் 'இபிஎஃப் திட்டம் 2026'-ஐ நடைமுறைக்குக் கொண்டு வந்தது. இந்த புதிய திட்டம் சுமார் 8 கோடி இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பழைய கணக்குகளில் உள்ள பணத்தை மீட்பது பெரும் சவாலாக உள்ளது.
பொதுவாக ஒரு தொழிலாளி வேலை மாறும்போது அல்லது ஓய்வு பெறும்போது, பழைய கணக்கில் உள்ள பணத்தை மற்றொரு கணக்கிற்கு மாற்றாமலோ அல்லது எடுக்காமலோ விடும்போது, நீண்ட நாட்களாகப் புதிய பங்களிப்பு இல்லாததால் அந்த கணக்கு செயலற்றதாக மாறிவிடுகிறது. குறிப்பாக, யுஏஎன் எண் முறை அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு தொடங்கப்பட்ட கணக்குகளைப் பல ஊழியர்கள் மறந்ததே இதற்குக் காரணமாகும்.
கடந்த 2025 மார்ச் 31 நிலவரப்படி, 31.83 லட்சம் கணக்குகளில் ரூ.10,181 கோடி முடங்கியிருந்த நிலையில், இந்த ஆண்டு மார்ச் 31-க்குள் ஓராண்டில் சுமார் 92,000 கணக்குகள் குறைக்கப்பட்டு, ரூ.851 கோடி நிதி உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனினும், இன்னும் ரூ.9,330 கோடி உரிமை கோரப்படாமல் உள்ளது.
இந்த முடங்கிக் கிடக்கும் ரூ. 9,330 கோடி என்பது மத்திய அரசின் உடான் பிராந்திய விமான சேவை திட்டத்துக்காக 2016 முதல் இதுவரை செலவிடப்பட்ட மொத்த தொகையான ரூ.10,169 கோடிக்கு நிகரானது. மேலும் நடப்பு 2026-27 மத்திய பட்ஜெட்டில் ஆயுஷ்மான் பாரத்மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகைக்கு இணையானது.தற்போதைய பணவீக்கத்தின்படி, இந்தியாவில் அதிநவீன வசதிகளுடன் கூடிய 3 புதிய ஐஐடி நிறுவனங்களைத் தொடங்கிவிட்டு, மீதம் ரூ.500 கோடியை சேமிக்கும் அளவுக்கு பெரிய தொகையாகும்.
கடந்த ஐந்து ஆண்டுகால செயலற்ற கணக்குகளின் விவரங்களை ஆர்டிஐ-யில் கோரியபோது, இதற்கெனத் தனியாக செயலற்ற கணக்குகள் பிரிவு 2025-26-ல் தான் தொடங்கப்பட்டது எனக் கூறி, கடந்த இரண்டு ஆண்டுகால தரவுகளை மட்டுமே இபிஎஃப்ஓ வழங்கியுள்ளது. மேலும், பாதுகாப்பு மற்றும் தனியுரிமைச் சட்டப் பிரிவுகளைக் காரணம் காட்டி, பயோமெட்ரிக் அடையாள அட்டைகளுடன் இணைக்கப்பட்ட கணக்குகளின் எண்ணிக்கை, அவற்றின் நிதி விவரங்கள் மற்றும் ஆட்டோ-செட்டில்மென்ட் நிலவரம் போன்ற முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள இபிஎஃப்ஓ மறுத்துவிட்டது.