ராமர் கோயில் காணிக்கை திருட்டு: மவுனம் கலைத்த ஆர்எஸ்எஸ் கூறுவது என்ன?

‘கடும் கொந்தளிப்பில் பக்தர்கள்’
ராமர் கோயில் காணிக்கை திருட்டு: மவுனம் கலைத்த ஆர்எஸ்எஸ் கூறுவது என்ன?
Updated on
2 min read

“ராமர் கோயில் காணிக்கை திருட்டு கடும் கண்டனத்துக்குரியது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அதேவேளையில், இந்த கடினமான காலத்தில் இந்துக்கள் பொறுமை காக்க வேண்டும்” என்று ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபலே கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் மவுனம் கலைத்துள்ளது கவனிக்கத்தக்கது.

இது தொடர்பாக ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபலே வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஸ்ரீ ராம் ஜென்மபூமியில் நிறுவப்பட்ட ராமர் கோயில் ஒட்டுமொத்த இந்து சமூகத்தின் பக்தி, இறை நம்பிக்கையின் மையமாகத் திகழ்கிறது. அதுமட்டுமல்ல பல்லாண்டு காலமாக ராம பக்தர்கள் முன்னெடுத்த போராட்டங்கள், அவர்களின் தியாயகத்தின் சின்னமாக இருக்கிறது.

இந்தச் சூழலில் அயோத்தி பால ராமர் கோயில் காணிக்கை உண்டியல்களில் இருந்து பக்தர்களின் காணிக்கை திருடப்பட்டது துரதிருஷ்டவசமானது. இந்தச் சம்பவம் ராம பக்தர்களை வெகுவாக காயமடையச் செய்துள்ளது. அவர்கள் கடும் கோபத்தில் கொந்தளிக்கின்றனர்.

இந்த காணிக்கை திருட்டு விவகாரத்தில், ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த் ஷேத்ர அறக்கட்டளையின் வேண்டுகோளுக்கு இணங்கி, உத்தரப் பிரதேச அரசு ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்துள்ளது. சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

<div class="paragraphs"><p>ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபலே</p></div>

ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபலே

இந்தச் சம்பவத்தை அறக்கட்டளையானது அரிதினும் அரிதான நிகழ்வாகக் கருதி உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு கோயில் நிர்வாகம் மற்றும் செயல்பாடுகளில் உள்ள அத்தனை குறைகளையும் நிவர்த்தி செய்ய வேண்டும் என இந்து சமூகமும், ஆர்எஸ்எஸ் இயக்கமும் எதிர்பார்க்கிறது.

அயோத்தி கோயில் மீதான பல கோடி ராம பக்தர்களின் நம்பிக்கை உடைந்துவிடாமல் கட்டுக்கோப்பாக பாதுகாக்க வேண்டியது இந்தத் தருணத்தில் மிக மிக அவசியம். இதன் நிமித்தமாக கோயில் நிர்வாகமும், அரசு அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழுவும் இணைந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அயோத்தி ராமர் கோயிலில் சரியான நிதி மேலாண்மை, குறைகள் இல்லாத வெளிப்படையான செயல்பாடுகளின் மூலம், புனிதமான ஒரு சூழலை உருவாக்கி ஸ்ரீ ராம ஜென்மபூமி அறக்கட்டளை, இந்து சமூகத்தினர் அதன் மீது கொண்டுள்ள நம்பிக்கையை இன்னும் வலிமையாக்கும் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

அதேவேளையில், இந்து சமூகத்தினர் பொறுமையை கடைபிடிக்கவும், இதுபோன்ற கடின காலத்தில் கட்டுப்பாடுடன் இருக்கவும், இந்து எதிர்ப்பாளர்கள், தேச விரோத சக்திகளின் சதிகளை முறியடிக்கவும் வேண்டுகிறோம். அவர்கள் இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தின் மூலம் இந்து தர்மத்தின் மீது கலங்கம் விளைவிக்க முயற்சிக்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

ராமர் கோயில் காணிக்கை திருட்டு: மவுனம் கலைத்த ஆர்எஸ்எஸ் கூறுவது என்ன?
ராமர் கோயில் காணிக்கை திருட்டும், ‘அரசியல்’ அதிர்வுகளும் - நடப்பது என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in