Published : 31 Dec 2016 10:15 AM
Last Updated : 31 Dec 2016 10:15 AM

டிஜிட்டல் பரிவர்த்தனையை எளிதாக்க புதிய செயலி: பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார்

மொபைல் போன் மூலமாக பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள் ளும் வகையில் புதிய செயலியை மத்திய அரசு நேற்று அறிமுகப் படுத்தியுள்ளது. ஆதார் எண்ணை மையமாக வைத்து `பாரத் இண்டர் பேஸ் பார் மணி (BHIM)’ என்ற இந்த புதிய செயலி செயல்படும்.

டெல்லியில் நடைபெற்ற விழாவில் புதிய செயலியை அறிமுகம் செய்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: சில குறிப்பிட்ட மக் களே டாக்டர் பீமராவ் அம்பேத் கரை அறிவார்கள். அதிலும் நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர் என்ற முறையில் அவரைத் தெரியும். ஆனால் அவர் மிகப் பெரிய பொருளாதார அறிஞர். இந்திய ரூபாயை பற்றி ஆய்வு கட்டுரைகளை எழுதியுள்ளார். பிரிட் டிஷ் ஆட்சியின் போது அம்பேத்கர் இந்திய பொருளாதாரத்திற்கு ஒரு புதிய வடிவத்தை கொடுத்தார். அம்பேத்கர் ஆய்வை மையமாக வைத்தே இந்திய ரிசர்வ் வங்கி உருவாக்கப்பட்டது.

தற்போது அறிமுகப்படுத்தப் பட்டுள்ள பிஹெச்ஐஎம் செயலியை சிறு வர்த்தகர்கள், பழங்குடி மக்கள், விவசாயிகள் என அனைவரும் பயன்படுத்த முடியும். தலித் மக்கள் முன்னேற்றதிற்காக உழைத்த பீம ராவ் அம்பேத்கர் நினைவாகத்தான் இந்த செயலிக்கு பீம்(BHIM) என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஏழைகளை முன்னேற்றுவதற்காக உழைப்பதுதான் அம்பேத்கரின் தாரக மந்திரமாக இருந்தது. மிகப் பெரிய தொழில்நுட்பத்திலான இந்த புதிய செயலி ஏழைகளை முன்னேற்றும்.

100 கோடிக்கு மேலான மக்கள் ஆதார் எண்ணை பெற்றுள்ளனர். மீதமுள்ள மக்களுக்கும் ஆதார் எண் வழங்கும் பணி நடந்து வருகிறது. நேர்மறை சிந்தனையோடு அணுகினால் இந்தியாவுக்கு மிகப் பெரிய வாய்ப்புகள் உள்ளன.

இந்த வருட கிறிஸ்துமஸ் திருநாளுக்கு மத்திய அரசு டிஜிதன் திட்டம் மூலம் 100 நாட்களுக்கு தினசரி 15,000 அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்களுக்கு 1,000 ரூபாய் பரிசுத் தொகை வழங்கும் என அறிவித்தது. இந்த திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு பரிசுத்தொகை சென்றடையும் என்று மோடி தெரிவித்தார். இந்த விழாவில் டிஜிதன் திட்டத்தின் கீழ் வென்ற 7,229 பேருக்கு 1,000 ரூபாய் பரிசுத் தொகையை பிரதமர் மோடி வழங்கினார்.

பயன்படுத்துவது எப்படி?

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் பிஹெச்ஐஎம் செயலியை தரவிறக் கம் செய்து பயன்படுத்திக் கொள்ளமுடியும். விரைவில் ஆப்பிள் ஐஓஎஸ் இயங்குதளத்தில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்த பின் வங்கி கணக்கு விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். பிறகு யுபிஐ பின் நம்பரை புதிதாக பதிவு செய்து கொள்ள வேண்டும். பயன்படுத்துவோரின் மொபைல் எண் பரிவர்த்தனை முகவரியாக இருக்கும். ஒரு முறை பதிவு செய்துவிட்டால் அதன் பிறகு பரிவர்த்தனைகளை செய்ய முடியும்.

ஒரு முறை அதிகபட்சம் 10,000 ரூபாயும், ஒரு நாளில் அதிகபட்சம் 20,000 ரூபாயும் அனுப்ப முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x