Published : 24 Oct 2016 08:16 PM
Last Updated : 24 Oct 2016 08:16 PM

டாடா சன்ஸ் தலைவர் பதவியிலிருந்து சைரஸ் மிஸ்திரி அதிரடி நீக்கம்

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக அடுத்த நான்கு மாத காலத்துக்கு ரத்தன் டாடா தலைவராக இருப்பார் என டாடா சன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

திங்களன்று நடந்த டாடா சன்ஸ் நிர்வாகக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் வட்டாரத்தில் மிகப் பெரும் அதிர்வலையை இது ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த நான்கு மாத காலத்திற்குள் ரத்தன் டாடாவை உள்ளடக்கிய ஐந்து பேர் கொண்ட குழு புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும். இந்த குழுவை டாடா நிறுவனம் நியமித்துள்ளது. டிவிஎஸ் குழும தலைவரான வேணு ஸ்ரீநிவாசன், பாயின் கேபிடல் நிறுவனத்தின் அமித் சந்த்ரா, முன்னாள் தூதரக அதிகாரியான ரோனென் சென் மற்றும் லார்ட் குமார் பட்டாச்சார்யா அகிய ஐந்து பேரும் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க உள்ளனர். இதில் பட்டாச்சார்யாவை தவிர மற்ற நால்வரும் டாடா சன்ஸ் நிர்வாக குழுவில் உள்ளவர்களாவர்.

கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டு 2012-ம் ஆண்டு டாடா சன்ஸ் தலைவரவாக பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது. சைரஸ் மிஸ்திரி தலைவராக பொறுப்பேற்ற போது ஐரோப்பாவில் ஆலையை நஷ்டத்திலிருந்து மீட்பது அல்லது விற்பது, ஜப்பானின் டெகொமோ நிறுவனத்திற்கு டாடா குழுமத்திற்கும் நடந்த பிரச்சினை உள்ளிட்ட பல சவால்கள் மிஸ்திரி முன் இருந்தது குறிப்பிடத்தக்கது.

சைரஸ் மிஸ்திரி தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கான குறிப்பிட்ட காரணங்கள் எதுவும் வெளிவரவில்லை. சைரஸ் மிஸ்திரி அணுகுமுறை மற்றும் செயல்பாடுகள் ஆகியவை டாடா சன்ஸ் குழுமத்திற்கு அதிருப்தி ஏற்பட்ட காரணத்தினால் நீக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் ஐரோப்பாவில் ஸ்டீல் ஆலையை உட்பட பல தொழில்களில் மிஸ்திரி செயல்பாடுகளால் நஷ்டத்துடன் செயல்படுகிறது என்ற காரணமும் கூறப்படுகிறது. லாபம் ஈட்டும் நிறுவனங்களில் மட்டுமே மிஸ்திரியின் கவனம் இருப்பதாகவும் நஷ்டத்திலிக்கும் தொழில்களை மீட்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கு காரணமாக கூறப்படுகிறது.

யார் இந்த சைரஸ் மிஸ்திரி?

பார்சி இனத்தைச் சேர்ந்த பலோன்ஜி மிஸ்திரி, ஷர்போஜி பலோன்ஜி குழுமத்தின் தலைவர். 1930களில் பலோன்ஜி மிஸ்திரியின் அப்பா டாடா சன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியுள்ளார். தற்போது டாடா குழுமத்தில் பலோன்ஜி மிஸ்திரி 18.4 சதவீத பங்குகளை வைத்துள்ளார். டாடா குழுமத்தில் தனி ஒருவரிடம் மிக அதிக பங்குகள் இருப்பது இவரிடமே.

பலோன்ஜி மிஸ்திரியின் இளைய மகன்தான் சைரஸ் மிஸ்திரி.ஷர்போஜி பலோன்ஜி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பணியாற்றி வந்தார். டாடா குழுமத்தில் இவருடைய தந்தை ஓய்வு பெற்ற பிறகு 2006-ம் ஆண்டு நிர்வாக குழுவில் இணைந்தார்.

அதன் பிறகு டாடா குழுமத்தின் பல நிறுவனங்களுக்கு இயக்குநராக இருந்து வந்தார். டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா ஓய்வை அறிவித்த போது, ஐந்து பேர் கொண்ட நிர்வாகக் குழு 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் சைரஸ் மிஸ்திரியை தலைவராக தேர்ந்தெடுத்தது. சைரஸ் மிஸ்திரி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து “நல்ல தொலைநோக்குடைய தேர்வு” என்று ரத்தன் டாடா குறிப்பிட்டு இருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x