Published : 09 Jul 2022 05:31 AM
Last Updated : 09 Jul 2022 05:31 AM
புதுடெல்லி: பங்குச் சந்தையில் ஸ்திரமற்ற நிலை நிலவியபோதிலும் பரஸ்பர நிதித் திட்டங்களில் கடந்த ஜூன் மாதத்தில் ரூ.15,498 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.
பங்குச் சந்தையில் தொடர் சரிவு காரணமாக அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் (எப்பிஐ) தொடர்ந்து வெளியேறி வருகின்றன. இதனால் பங்குச் சந்தையில் ஸ்திரமற்ற நிலை காணப்படுகிறது.
இருப்பினும் பாதுகாப்பான முதலீடாக பரஸ்பர நிதி திட்டங்கள் கருதப்படுகின்றன. இந்நிலையில் தொடர்ந்து 16-வது மாதமாக கடந்த ஜூன் மாதத்தில் அதிகபட்ச முதலீடு செய்யப்பட்டுள்ளதாக அகில இந்திய பரஸ்பர நிதி சங்கம் (ஆம்பி) வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரஸ்பர நிதி திட்டங்களில் மொத்தமாக மேற்கொள்ளப்பட்ட முதலீடு ரூ.18,529 கோடி. இதில் பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு ரூ.15,498 கோடியாகும்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பரஸ்பர நிதியில் மேற்கொள்ளப்படும் முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதற்கு முன்பு வரை ஜூலை 2020 முதல் பிப்ரவரி 2021 வரையான காலத்தில் ரூ.46,791 கோடி முதலீடுகள் வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பிளெக்ஸி கேப் பண்ட் எனப்படும் நெகிழ்வு தன்மை கொண்ட முதலீட்டுத் திட்டங்களில் அதிக முதலீடு அதாவது ரூ.2,512 கோடி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதற்கு அடுத்தபடியாக மல்டி கேப் பண்ட் எனப்படும் பன்முக முதலீடுகளில் ரூ.2,130 கோடி முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுதவிர ஜூன் மாதத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்கு சந்தையில் ரூ.50,203 கோடி மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர். இது கடந்த இரண்டு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அளவைவிட மிக அதிகமாகும்.
அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தியதன் விளைவாக இந்தியப் பங்குச் சந்தையிலிருந்து அந்நிய முத லீட்டு நிறுவனங்கள் (எப்பிஐ) அதிக அளவில் வெளியேறியுள்ளன. தொடர்ந்து 9 மாதங்களாக பங்குச்சந்தையிலிருந்து எப்பிஐ வெளியேறியுள்ளனர்
பங்குச் சந்தை தவிர்த்து தங்க பரிவர்த்தனை வர்த்தக நிதியங்களில் (இடிஎப்) அதிக பட்சமாக ரூ.135 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. கடன் பத்திர பங்குகளிலிருந்து ரூ.92,247 கோடிமதிப்பிலான தொகை வெளியேறியுள்ளது. மே மாதத்தில் ரூ. 32,772 கோடி வெளியேறியதுடன் ஒப்பிடுகையில் இது மிக அதிகமாகும்.
ஒட்டுமொத்தமாக பரஸ்பர நிதி திட்டங்களிலிருந்து வெளியேறிய தொகை ரூ.69,853 கோடி. மே மாதத்தில் வெளியேறிய தொகை ரூ.7,532 கோடியாக இருந்தது.
இதன் காரணமாக நிகர சொத்து மதிப்பு (ஏயுஎம்) மதிப்பு ரூ.36.98 லட்சம் கோடியாக உள்ளது. மே மாதத்தில் இது ரூ.37.37 லட்சம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT