Published : 29 Jun 2022 04:21 AM
Last Updated : 29 Jun 2022 04:21 AM

ஆன்லைன் விளையாட்டுக்கு 28% ஜிஎஸ்டி - கவுன்சில் கூட்டத்தில் ஆலோசனை

சண்டீகர்: சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் 47-வது கூட்டம் சண்டீகரில் நேற்று தொடங்கியது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் பல முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளன.

ஜிஎஸ்டி அறிமுகத்தால் மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கும் வருவாய் இழப்பீடு காலத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என்பது பெரும்பாலான மாநிலங்களின் கோரிக்கையாக உள்ளது.

14 சதவீத உத்தரவாதமான வருவாய் உயர்வு பங்கீடு அளிக்கும் முறை இம்மாதம் 30-ம் தேதியுடன் காலாவதியாகிறது. இதை 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று சத்தீஸ்கர் மாநில நிதியமைச்சர் டி.எஸ். சிங் தேவ் கோரிக்கை விடுத்துள்ளார். அதேசமயம், "ஜிஎஸ்டி வரம்பை அதிகரிக்க வேண்டும் என்பது கோரிக்கையல்ல. வரி விதிப்புகளை முறைப்படுத்த வேண்டும், குறைவான வரி விதிப்பால் வருவாய் அதிகரிக்கும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

இழப்பீடு வழங்கும் காலத்தை மேலும் ஐந்து ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் நிதியமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். குறிப்பாக, மேற்கு வங்கம் மற்றும் சத்தீஸ்கர் மாநில நிதியமைச்சர்கள், நிர்மலா சீதாராமனிடம் வலியுறுத்துவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வாரம் ஜிஎஸ்டி இழப்பீடு செஸ் விதிக்கும் முறை 2026-ம் ஆண்டு மார்ச் வரை நீட்டித்து மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. இதன் மூலம் கடந்த 2 ஆண்டுகளாக இழப்பீட்டுக்காக கடன் திரட்டிய மாநிலங்கள் இந்த வருவாய் மூலம் ஓரளவு ஈடுகட்ட முடியும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

ஆன்லைன் விளையாட்டு மற்றும் கேளிக்கை விடுதிகளில் நடத்தப்படும் சூதாட்டம், குதிரைப் பந்தயம் உள்ளிட்டவற்றுக்கு 28 சதவீத வரி விதிக்கலாம் என்று பல மாநிலங்கள் பரிந்துரைத்துள்ளன. இதுதவிர, போட்டியில் பங்கேற்போர் செலுத்தும் தொகைக்கும் வரி விதிக்கவும் குழுவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

வரியைப் பரவலாக்குவது குறித்து பரிந்துரை அளிக்க கர்நாடக மாநில நிதியமைச்சர் தலைமையிலான குழு நியமிக்கப்பட்டது. அக்குழு தனது இடைக்கால அறிக்கையை இக்கூட்டத்தில் தாக்கல் செய்துள்ளது.

தற்போது 8 நிலைகளில் வரி விதிப்பு உள்ளது. அதாவது 0, 1,2,5,12, 18, 28 மற்றும் 28 சதவீதம் பிளஸ் செஸ் விதிக்கப்படுகிறது. இதை 3 அல்லது 4 நிலைகளாகக் குறைக்கலாம் என சில மாநிலங்கள் ஆலோசனை அளித்துள்ளன.

வரி ஏய்ப்பைத் தடுக்கவும், வரி வசூலில் நிலவும் சில குறைகளைப் போக்கவும் சிறப்பான ஆலோசனைகளை சில மாநிலங்கள் அளித்துள்ளன. அவையும் இக்கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டது. இறுதி நாளன்று முக்கிய முடிவுகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x