Published : 12 Jun 2022 06:31 AM
Last Updated : 12 Jun 2022 06:31 AM
புதுடெல்லி: கடந்த 8 ஆண்டுகளாக அரசு எடுத்து வரும் சீர்திருத்த நடவடிக்கைகளால் நாட்டில் தொழில் தொடங்குவது மேலும் எளிதாகியுள்ளது என்று பிரதமர் மோடி ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி மேலும் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்ட வழக்கொழிந்து போன சட்டங்கள் நீக்கப்பட்டன. இதனால் தொழில் தொடங்குவது எளிதானது. சீர்திருத்தம், செயல்படுவது மற்றும் மாற்றம் என்பதை இலக்காகக் கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் மூலம் நாட்டில் தொழில்முனைவோர் அதிகம் உருவாகி வருகின்றனர் இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
நமோ செயலி மற்றும் தனது இணையதளம் உள்ளிட்டவற்றில் ஏற்கெனவே வெளியாகியிருந்த கட்டுரைகளை ட்விட்டர் மூலம் அவர் பகிர்ந்துள்ளார். இந்தியா விரைவான வளர்ச்சியை எட்டிவரும் நாடாக உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு வரைபடமும் (கிராபிக்) இதில் இடம்பெற்றுள்ளது.
2022-ம் நிதி ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 8.7 சதவீத வளர்ச்சியை எட்டியது. அதேபோல கடந்த நிதி ஆண்டில் ஏற்றுமதி அதிகபட்சமாக 41,781 கோடி டாலரை எட்டியது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 43.18 சதவீத வளர்ச்சி என்று மத்திய தொழில் வர்த்தக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
சீர்திருத்த நடவடிக்கையால் அன்னிய நேரடி முதலீடு கடந்த நிதி ஆண்டில் 8,300 கோடி டாலரைத் தொட்டது. அதேபோல முன்னெப்போதும் இல்லாத அளவாக ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.68 லட்சம் கோடியைத் தொட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT