Published : 08 Jun 2022 06:09 AM
Last Updated : 08 Jun 2022 06:09 AM
புதுடெல்லி: பங்குச் சந்தை அதிர்வுகளை தாங்குபவர்களாக சிறு முதலீட்டாளர்கள் செயல்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
நிறுவன விவகாரங்கள் துறை சார்பில் நடத்தப்பட்ட நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் `ஆசாதி கா அம்ருத் மகோத்சவ்' நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: பங்குச் சந்தையிலிருந்து அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் வெளியேறிவிட்டால் அதனால் ஏற்படும் ஸ்திரமற்ற சூழலை சிறு முதலீட்டாளர்கள்தான் பூர்த்தி செய்கின்றனர்.
இதன் மூலம் பங்குச் சந்தை அதிர்வுகளைத் தாங்குபவர்களாக சிறு முதலீட்டாளர்கள் உள்ளனர். பெருந்தொற்று காலத்தில் பங்குச் சந்தையில் சிறு முதலீட்டாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
பங்குச் சந்தையிலிருந்து அந்நிய போர்ட் போலியோ முதலீட்டாளர்கள் (எப்பிஐ) வெளியேறும்போது அதனால் மிகப்பெரும் பாதிப்பு ஏற்பாடமலிருப்பதற்கு சிறு முதலீட்டாளர்கள் பெருமளவில் முதலீடு செய்வதுதான். கடந்த மார்ச் மாதத்தில் சென்ட்ரல் டெபாசிட்டரி சர்வீசஸ் நிறுவனத்தில் டி-மேட் கணக்கு வைத்திருப்போரின் எண்ணிக்கை 6 கோடியைத் தொட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக பங்குச் சந்தையில் ஸ்திரமற்ற நிலை நிலவுகிறது. அந்நிய போர்ட் போலியோ முதலீட்டாளர்கள் தங்கள் வசமுள்ள பங்குகளை தொடர்ந்து விற்பனை செய்கின்றன. கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், பணவீக்கம், அரசியல் நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் வெளியேறுகின்றன.
அதேநேரம் பங்குச் சந்தையில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களை தவறான வழிகளுக்கு பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது. அதற்குரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை கட்டாயம் எடுத்தாக வேண்டும். டிஜிட்டல் பயன்பாட்டில் பயர்வால் முறை கட்டாயம் பயன்படுத்த வேண்டும். 2020-ம் ஆண்டிலிருந்தே டிஜிட்டல் நுட்பம் பின்பற்றப்படுகிறது என்றும் நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT