Published : 19 May 2016 08:26 AM
Last Updated : 19 May 2016 08:26 AM

துணை வங்கிகளை இணைக்க எஸ்பிஐ திட்டம்

பாரத ஸ்டேட் வங்கி தன்னுடைய துணை வங்கிகளை இணைப் பதற்காக நடவடிக்கைகளை தொடங்கி இருக்கிறது. இந்த இணைப்பு நடப்பு நிதி ஆண்டின் இறுதிக்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எஸ்பிஐ வங்கியின் இயக்குநர் குழு செவ்வாய்க்கிழமை கூடி இது குறித்து விவாதித்தது. மேலும் பாரதிய மகிளா வங்கியையும் ஒன்றாக இணைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக கொள்கை அளவிலான அனுமதிக் காக மத்திய அரசின் அனுமதியை இந்த வங்கி கோரி இருக்கிறது.

ஸ்டேட் பேங்க் ஆப் பிகானீர் அண்ட் ஜெய்பூர், ஸ்டேட் பேங்க் ஆப் ஹைதராபாத், ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் ஆகிய ஐந்து வங்கிகள் இணைக்கப்படலாம். இதில் ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டி யாலா மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் ஹைதராபாத் ஆகிய வங்கிகள் பட்டியலிடப்படாதவை ஆகும்.

கடந்த 2013-ம் ஆண்டு முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் பெண்களுக்காக ரூ.1,000 கோடி மூலதனத்தில் உருவாக்கப்பட்டது பாரதிய மகிளா வங்கி. இந்த வங்கியை இணைக்க முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.

முன்னதாக 2008-ம் ஆண்டு ஸ்டேட் பேங்க் ஆப் சௌராஷ்டிரா வும், 2010-ம் ஆண்டு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தூரும் எஸ்பிஐயுடன் இணைக்கப்பட்டன.

இதுகுறித்து வங்கியின் தலை வர் அருந்ததி பட்டாச்சார்யா கூறும் போது, எவ்வளவு விரைவாக இணைக்க முடியுமோ அவ்வளவு விரைவாக இணைக்க திட்டமிட் டிருக்கிறோம், நடப்பு நிதி ஆண்டின் முடிவில் நிச்சயம் வங்கிகளை இணைத்துவிடுவோம் என்று பட்டாச்சார்யா கூறினார்.

அனைத்து வங்கிகளையும் இணைக்கிறோம், ஆனால் அனைத் தையும் ஒரே நாளில் இணைக்க முடியாது. தவிர அனைத்து துணை வங்கிகளும் ஒரே தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால், தொழில்நுட்பரீதியில் துணை வங்கிகளை இணைப்பதில் பெரிய பிரச்சினை ஏதும் இருக்காது. வங்கிகளை இணைப்பதற்கு இது சரியான தருணம் என்றும் அவர் கூறினார்.

ஆனால் இந்த வங்கிகள் இணைப்பை ஊழியர்கள் சங்கம் ஏற்கவில்லை. இந்த இணைப்பை எதிர்த்து வரும் மே 20-ம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவெடுத்திருக்கின்றனர்.

இந்த துணை வங்கிகள் இணையும் பட்சத்தில் சர்வதேச அளவில் அதிக சொத்துகளை கொண்ட வங்கிகளின் பட்டியலில் 7 இடங்கள் முன்னேறி 45வது இடத்தை எஸ்பிஐ பிடிக்கும். இந்த வங்கிகள் இணையும்பட்சத்தில் மொத்த டெபாசிட் மற்றும் கடன் தொகையில் 4-ல் ஒரு பங்கு எஸ்பிஐ வசம் இருக்கும். வங்கியின் மொத்த வணிகம் 35 லட்சம் கோடி ரூபாயாக உயரும். இந்தியாவின் இரண்டாவது பெரிய வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் மொத்த வணிகத்தை விட 5 மடங்கு பெரிய வங்கியாக எஸ்பிஐ இருக்கும்.

துணை வங்கிகளுக்கு மட்டும் 6400 கிளைகளும், 38,000 பணியாளர்களும் இருக்கின்றனர். எஸ்பிஐக்கு மட்டும் 14000-க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. 36 வெளிநாடுகளில் உள்ள 191 கிளைகளும் இதில் அடக்கம். பணியாளர்களின் எண்ணிக்கை 2.2 லட்சம் ஆகும்.

வங்கிகள் இணைப்புக்கு பிறகு கிளைகளை நிர்வகிப்பது என்பது சவாலான விஷயம் என்று வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் சவுத்திரி தெரிவித்திருக்கிறார். உதாரணத்துக்கு ஆந்திராவில் எஸ்பிஐ வங்கிக்கு 1000 கிளை களும், ஸ்டேட் பேங்க் ஆப் ஹைதரா பாத்துக்கு 1200 கிளைகளும் உள்ளன. இந்த 2000க்கும் மேற்பட்ட கிளைகளை நிர்வகிக்க புதிய வட்டார அலுவலகத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பிரதீப் சவுத்திரி கூறினார்.

இந்த இணைப்பு அறிவிப்பு காரணமாக பட்டியலிடப்பட்ட துணை வங்கிகளின் பங்குகள் ஏற்றம் கண்டன.

“பெரிய வங்கிகள் தேவை”

இந்தியாவுக்கு பெரிய அளவிலான வங்கிகள் தேவை. வங்கிகள் இணைப்பு குறித்து பட்ஜெட் உரையிலேயே தெரிவித் திருந்தேன் என்று அருண் ஜேட்லி கூறினார். மேலும் அவர் கூறியதாவது.

வங்கிகள் இணைப்பு என்பது `இந்திர தனுஷ்’ திட்டத்தின் ஒரு பகுதி ஆகும். அதன் ஒரு பகுதியாக வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தத் திட்டம் மத்திய அரசுக்கு வரும் போது, மத்திய அரசு நிச்சயம் சாதகமான முறையில் பரிசீலனை செய்யும். அதிக எண்ணிக்கையில் பொதுத்துறை வங்கிகள் இருப்பதை விட பெரிய வங்கிகள் தேவை. பணியாளர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் பெரிய அளவு வங்கியை உருவாக்க முடியும். ஒரு வேளை வங்கிகளுக்கு மாற்று கருத்து இருந்தால் அதையும் மத்திய அரசு மதித்து முடிவெடுக்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x