

நோய் காரணமாக ஒரு நபரின் மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை செலவுகளை ஏற்றுக்கொள்ளும் காப்பீடு மருத்துவக் காப்பீடு என்று அழைக்கப்படுகிறது. மருந்துகள், மருத்துவ ஆலோசனை கட்டணங்கள் மற்றும் மருத்துவமனையில் சேர்ந்து பெறும் சிகிச்சைக்கான செலவுகள் அனைத்தும் மருத்துவக் காப்பீட்டின் கீழ் வருகின்றன.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உலகம் முழுவதையும் கரோனா உலுக்கி எடுத்தபோது மருத்துவ செலவு அதிகரித்து மக்கள் பெரும் துயருக்கு ஆளாகினர். இதனால் மருத்துவக் காப்பீட்டின் அவசியத்தை மக்கள் உணர்ந்து கொண்டனர். பின்னர் கரோனா சிகிச்சையும் மருத்துவக் காப்பீட்டில் சேர்க்கப்பட்டு அதன் மூலம் பலரும் பயன்ற பெற்றனர்.
2020-ம் ஆண்டுக்கு பிறகு மருத்துவக் காப்பீடு எடுப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. தனக்காக மட்டுமின்றி தனது குடும்பத்தினருக்காவும் மருத்துவ காப்பீடு செய்யும் போக்கு அதிகரித்துள்ளது.
2020-2021 நிதியாண்டில் மருத்துவ கப்பீட்டை பயன்படுத்தியவர்களில் 6 சதவீதத்தினர் கரோனா சிகிச்சைக்காகப் பயன்படுத்தியுள்ளனர். இதுவே 2021-2022 நிதியாண்டில் 12 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இந்தியாவில் கரோனா தாக்கம் இனிமேல் ஏற்பட்டால் அதன் பயன்பாடு இன்னும் அதிகரிக்கும் என கருதப்படுகிறது.
மருத்துவக் காப்பீட்டு திட்டங்கள்
மருத்துவக் காப்பீட்டை பொறுத்தவரை மத்திய, மாநில அரசுகளே மக்களுக்கு கூட்டு திட்டத்தின் மூலம் வழங்குகின்றன. தமிழக அரசின் முதலமைச்சர் காப்பீட்டு திட்டம், மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன் ஆரோக்யத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
50 கோடி ஏழை எளிய மக்களின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் இத்திட்டத்தின் கீழ் ஒரு ஆண்டுக்கு ஒரு குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் வரை ஆகும் மருத்துவ செலவுகளை அரசே வழங்குகிறது.
இதுபோலவே அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்களுக்கு கூட்டாக மருத்துவ காப்பீடு திட்டங்களும் உள்ளன. அதன்படி அந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது. இது கூட்டு காப்பீட்டு திட்டம் என்பதால் மிக குறைவான பிரிமீயம் மட்டுமே இருக்கும்.
இதனால் குறைவான பிரிமீயத்தில் அதிகமான காப்பீடு பெற முடிகிறது. ஆனால் இதுபோன்ற வசதி அனைவருக்கும் கிடைப்பதில்லை. அரசு ஊழியர்கள் அல்லது மருத்துவக் காப்பீடு வழங்கும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.
இதனை தவிர தனிமனிதர்கள், தங்களுக்கு தங்கள் குடும்பத்தினருக்கு மருத்துவ காப்பீடு பெற முடியும். இது அவர்களின் தேவையை பொறுத்து அமையும். ஒவ்வொரு தனி மனிதரும் தனக்கு தேவையான மருத்துவக் காப்பீட்டை பெற்றுக் கொள்ள முடியும். பல்வேறு காப்பீட்டு நிறுவனங்களில் தங்களுக்கு ஏற்புடைய, தேவையான, சரியான ஒன்றை தேர்வு செய்து பாலிசி எடுத்துக் கொள்ளலாம்.
மருத்துவ காப்பீடு எடுக்க உள்ள நபரின் வாழ்க்கை முறை, குடும்ப வருமானம், வாழ்நிலை, சம்பந்தப்பட்டவருக்கான நோய், பரம்பரை நோய் ஆகியவற்றை பொருத்து பாலி எடுக்க வேண்டும்.
இளமைக் காலத்திலேயே காப்பீடு
மருத்துவக் காப்பீடு பொதுவாக நீண்ட கால பாலிசியாகும். பாலிசியின் அனைத்து விதிமுறைகளையும் சலுகைகளையும் மறக்கக் கூடாது. ஒருவர் சம்பாதிக்க தொடங்கும் வயதிலேயே மருத்துவக் காப்பீடு பெற வேண்டும். முன்பே எடுக்கப்பட்ட பாலிசியில் பலன்கள் அதிகமாக இருக்கும். எனவே மருத்துவ பிரச்சினை ஏற்படும் முன்பு பாலிசி எடுத்து விட்டால் அதற்கான பயனை அடைய முடியும். மருத்துவ அவசரம் என்பது எப்போதும் ஏற்படலாம் என்பதால் அதற்கு முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
புதிய பாலிசிகள் பெரும்பாலும் அடிப்படை கவரேஜை வழங்குகின்றன. மருத்துவ பாலிசியை வாங்கிய 2-5 ஆண்டுகளுக்குப் பிறகுதான் முக்கியமான நோய்களுக்கான சிகிச்சைக்கு பெரும்பாலான நிறுவனங்கள் காப்பீடு வழங்குகின்றன.
மருத்துவத்துக்கான செலவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே மருத்துவத்துக்கு ஒருவர் செலவழிக்க வேண்டிய தொகையும் உயர்ந்து வருகிறது. நோயாளிகளுக்கு சிகிச்சை செலவுகளும் அதிகரித்து வருகின்றன.
கவனிக்க வேண்டிய அம்சங்கள்
எனவே ஒருவர் மருத்துவ காப்பீடு பாலிசி எடுக்கும்போது ஒருவர் வசிக்கும் நகரத்தில் மருத்துவச் செலவு தொகை, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு பாலிசி எடுக்க வேண்டும்.
காப்பீட்டுத் தேவைகளைப் பற்றி நன்கு அறிந்திருப்பது முக்கியம். மிகப்பெரிய தொகைக்கு இன்சூரன்ஸ் கவரேஜ் வைத்திருப்பது அனைத்திற்குமான தீர்வு அல்ல, வயது, செலவு, மருந்துகளின் விலை உயர்வு போன்றவை அடுத்த 10 ஆண்டுகளில் அதிகரிக்கும் அல்லது இரட்டிப்பாகும். எனவே அதற்கு ஏற்றவகையில் பாலிசி உள்ளதா என்பதும் மிக முக்கியம்.
சில நிறுவனங்களில் தொடக்கத்தில் குறைந்த தொகைக்கு பாலி எடுத்துக் கொண்டாலும் பின்னர் கூடுதல் கவரேஜ் பெறும் வாய்ப்புள்ளது. அடுத்தடுத்த ஆண்டுகளில் புதுப்பிக்கும்போது அந்த தொகையை அதிகரித்துக் கொள்ளலாம். அதற்கு ஏற்ப நாம் கட்ட வேண்டிய பிரிமீயமும் அதிகரிக்கும்.
எடுத்துக்காட்டாக ஒருவர் 30-வது வயதில் 3 லட்சம் ரூபாய் கவரேஜில் மருத்துவக் காப்பீடு பாலிசி எடுத்து இருந்தால் அவர் தனது வயது உயர, உயர தொகையை அதிகரிக்க வேண்டும். 40 வயதில் 5 லட்சமாக கவரேஜை அதிகரிக்கலாம். 50 வயதுக்கு பிறகு இன்னமும் கூடுதல் தொகைக்கு கவரேஜை அதிகரித்துக் கொள்ளலாம். ஆனால் ஏற்ப பிரீமியம் தொகையும் அதிகரிக்கும் என்பதை பாலிசி எடுப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
கூடுதல் செலவு, சிகிச்சை செலவு அதிகரிப்பது, நிறுவனங்கள் தரும் கூடுதல் போனஸ் போன்றவற்றை கருத்தில் கொண்டு பாலிசி எடுக்க வேண்டும். ஒருவருக்கு உள்ள நோய், அதற்கு பொருந்தக்கூடிய காத்திருப்பு காலம், வரம்புகள், ஏதேனும் விதி விலக்கு உள்ளதா என்பது போன்ற விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
மகப்பேறுக்கும் பாலிசி
இன்றைய சூழலில் மகப்பேறு மருத்துவ செலவுகள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. மகப்பேறு அறுவை சிகிச்சையும் மிக அதிக அளவில் நடக்கிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு சில காப்பீடு நிறுவனங்கள் மகபேறுக்கும் மருத்துவக் காப்பீடு அளிக்கிறன.
பெரும்பாலான நிறுவனங்கள் நிர்ணயித்திருக்கும் காத்திருப்புக் காலத்திற்கு பிறகு மகப்பேறு மருத்துவ பாதுகாப்பு வழங்குகின்றன. இந்த காலம் என்பது இரண்டு ஆண்டுகள், நான்கு ஆண்டுகள் மற்றும் ஆறு ஆண்டுகள் என நிறுவனங்களை பொறுத்து மாறுகின்றன. சில நிறுவனங்கள் அதிகமான தொகைக்கு மருத்துவக் காப்பீடு எடுப்பவர்களுக்கு மகப்பேறு மருத்துவ காப்பீட்டை தானாகவே தருகின்றன.
குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுதல், உடல்நலப் பரிசோதனை, வெளிநோயாளிகளுக்கான காப்பீடு, குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு சுழற்சி அடிப்படையில் வழங்கும் மருத்துவ பாதுகாப்பு, தீவிர நோய்க்களுக்கான பாதுகாப்பு போன்றவற்றிக்கும் கூட மருத்துவக் காப்பீடு வழங்கும் சூழல் உள்ளது.
மருத்துவக் காப்பீட்டு திட்டங்களில் க்ளைம் செட்டில்மென்ட் ரேஷியோ என்பது முக்கியமான ஒன்றாகும். ஒரு காப்பீட்டு வழங்கும் மொத்த உரிமைகோரல்களில் ஒரு வருடத்தில் தரும் தொகை சதவீதமாகும். அதிக விகிதம் தரும் காப்பீட்டு நிறுவனங்கள் நம்பமானவை என்பதால், அதனை தேர்வு செய்து அதில் இணையலாம்.
கேஸ் லெஸ் எனப்படும் பணமில்லா சேவைக்கான கவரேஜ் உள்ளதா, வீட்டிற்கு அருகில் உள்ள மருத்துவமனைகளில் இந்த வசதி கிடைக்குமா என்பது போன்ற விஷயங்களையும் பார்க்க வேண்டும். வெளிநாடுகளுக்கு பயணம் செய்பவர்கள், வெளிநாடுகளில் குறிப்பிட்ட காலம் தங்கியிருப்பவர்கள் இந்தியாவிற்குள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் செல்லத்தக்க மருத்துவக் காப்பீடுகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.
வருமான வரி விலக்கு
மருத்துவக் காப்பீட்டு திட்டங்களுக்கு வருமான வரி பிரிவு 80D இன் கீழ் விலக்கு அளிக்கப்படுகிறது. மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் செலுத்தப்படும் பிரீமியம், வயதின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட வரம்பு வரை வரிச் சலுகைகளை வழங்கப்படுகிறது. இது பிரிவு 80C வரம்பை விட அதிகமாக உள்ளது. மூத்த குடிமகனாக இருந்தால், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை வாங்குவதன் மூலம் ரூ. 1 லட்சம் வரை வருமான வரியைச் சேமிக்க வாய்ப்புள்ளது.
மருத்துவக் காப்பீடு பாலிசிக்களை பொறுத்தவரை நன்மைகளை மட்டுமல்ல, அதற்கான ப்ரீமியத்தை செலுத்த எவ்வளவு செலவாகும் என்பதையும் பார்க்க வேண்டும். இரண்டுக்கும் உள்ள வேறுபாடு, சராசரி போன்றவை மிகவும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
கரோனா காலத்துக்கு பிறகு பல்வேறு நோய்களையும் காப்பீட்டு திட்டத்தில் இணைத்து அதற்கு கவரேஜ் தர நிறுவனங்கள் தயாராக உள்ளன. ஆனால் அதற்கு ஏற்ப மருத்துவ காப்பீடு பிரீமியம் கட்டணத்தை 15 முதல் 20 சதவீதம் வரை உயர்த்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே மருத்துவக் காப்பீடு எடுப்பவர்கள் இதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.