Published : 05 May 2022 05:23 AM
Last Updated : 05 May 2022 05:23 AM
சென்னை: அட்சய திருதியை தினத்தன்று தமிழகம் முழுவதும் 20 டன் தங்க நகைகள் விற்பனையானதாக தகவல் வெளியாகி உள்ளது.
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை பொதுமக்களிடம் உள்ளது. இதன் காரணமாக, அட்சய திருதியை நாளான நேற்று முன்தினம், நகைக் கடைகளில் அதிகாலை முதலே விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியது.
வாடிக்கையாளர்களை கவர்வதற்காக கிராம் ஒன்றுக்கு ரூ.60 முதல் ரூ.100 வரை தள்ளுபடி மற்றும் செய்கூலி, சேதாரம் தள்ளுபடி வழங்கப்பட்டன. மேலும், நேற்று முன்தினம் காலையில் ஒரு பவுன் ரூ.38,528-க்கும், ஒரு கிராம் ரூ.4,816-க்கும் விற்கப்பட்ட தங்கம், மாலையில் ஒரு பவுன் 38,368, கிராம் ரூ.4,796 என விலை குறைந்தது. இதனால், நகைகள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். அன்றைய தினம் நகைக் கடைகளில் நள்ளிரவு வரை விற்பனை நடந்தது.
இதுகுறித்து, நகைக் கடை உரிமை யாளர்கள் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் நகைக் கடைகள் உள்ளன. இவற்றில் வழக்கமாக நாள்தோறும் சராசரியாக 10 டன் அளவுக்கு தங்க நகைகள் விற்பனை ஆகும். கரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அட்சய திருதியை நாளில் கடைகளில் நேரடி விற்பனை நடக்கவில்லை. ஆன்லைன் மூலம் குறைந்த அளவு மட்டுமே நகைகள் விற்பனை செய்யப்பட்டன.
இந்த ஆண்டு கரோனா தொற்று இல்லாததால் பொதுமக்கள் பெருமளவில் கடைகளுக்கு வந்து நகைகள் வாங்கினர். அட்சய திருதியை தினத்தன்று தமிழகம் முழுவதும் 16 முதல் 18 டன் அளவுக்கு தங்க நகைகள் விற்பனை ஆகும் என எதிர்பார்த்தோம். ஆனால், 20 டன் அளவுக்கு நகைகள் விற்பனையாகி உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தங்கம் பவுனுக்கு ரூ.96 உயர்வு
இதனிடையே, தங்கம் விலை நேற்று அதிகரித்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.12 அதிகரித்து ரூ.4,808-க்கும், பவுனுக்கு ரூ.96 அதிகரித்து ரூ.38,464-க்கும் விற்பனையானது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கம் ஒரு பவுன் ரூ.41,656-க்கு விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி ரூ.67.30-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.67,300-க்கும் விற்பனையானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT