Published : 04 May 2022 12:01 PM
Last Updated : 04 May 2022 12:01 PM

எல்ஐசி பொதுப் பங்கு வெளியீடு தொடக்கம்: இந்தியாவின் பிரமாண்ட ஐபிஓ; கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்ன?

புதுடெல்லி: இந்தியாவின் பிரமாண்ட ஐபிஓவாக கருதப்படும் எல்ஐசி நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு இன்று தொடங்கியது.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எல்ஐசி பங்குகளில் ஒரு பகுதியை விற்பதன் மூலம் சுமார் ரூ. 21,000 கோடி திரட்ட அரசு முடிவு செய்தது. மொத்தம் 31.6 கோடி பங்குகள் விற்கப்படுகிறது.

இதில் 50% நிறுவன முதலீட்டாளர்களுக்கும், 35% சில்லறை முதலீட்டாளர்களுக்கும் 10% எல்ஐசி பாலிசிதாரர்களுக்கும் ஒதுக்கப்படுகிறது. எல்ஐசி அதன் பாலிசிதாரர்களுக்கு ரூ.60 தள்ளுபடியும், அதன் ஊழியர்கள் மற்றும் சில்லறை முதலீட்டாளர்களுக்கு ரூ.40 தள்ளுபடியும் வழங்குகிறது.

ஒவ்வொரு பங்கும் ரூ.10 முகமதிப்பு கொண்டிருக்கும். மொத்தம் 31.62 கோடி பங்குகள் விற்பனை செய்யப்படும். இதில் ஊழியர்களுக்கு 5 சதவீதமும், தனிநபர் காப்பீடுதாரர்களுக்கு 10 சதவீதமும் ஒதுக்கீடு செய்யப்படும்.

செபியிடம் சமர்ப்பித்த அறிக்கையின்படி மே 12-ம் தேதிக்குள் எல்ஐசி பங்கு விற்பனையை தொடங்க வேண்டும். இதனால் பொதுபங்கு வெளியீடு மே 4-ம் தேதி தொடங்கி மே.9 தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட எல்ஐசியின் ஆரம்ப பொது பங்கு வெளியீடு மே 4-ம் தேதியான இன்று தொடங்கியது.

ரூ.902-949 விலையில் பங்கு வெளியிடப்பட்டுள்ளது. இது நாட்டிலேயே மிகப்பெரிய ஐபிஓவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஓ விண்ணப்பிக்கும் முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

ஐபிஓ தேதி: எல்ஐசி ஐபிஓ பொது மக்கள் மே 4 முதல் மே 9 வரை விண்ணப்பிக்கலாம்.

விலை வரம்பு: எல்ஐசி ஐபிஓ விலைக் குழு ஒரு ஈக்விட்டி பங்கிற்கு ரூ.902 முதல் ரூ.949 வரை நிர்ணயித்துள்ளது. இருப்பினும், பொது வெளியீட்டிற்கு விண்ணப்பிக்கும் பாலிசிதாரர்கள் மற்றும் எல்ஐசி ஊழியர்கள் முறையே ரூ.60 மற்றும் ரூ.45 தள்ளுபடி பெறுவர்.

எல்ஐசி ஐபிஓ ஜிஎம்பி: எல்ஐசி ஐபிஓ கிரே மார்க்கெட் பிரீமியம் (ஜிஎம்பி) தற்போது ரூ.85 ஆக உள்ளது, இது முந்தைய நாளை விட ரூ.16 அதிகமாக உள்ளது.

ஐபிஓ மொத்த தொகை: பொது வெளியீட்டில் இருந்து ரூ.21,008.48 கோடி திரட்ட இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுவே நாட்டின் மிகப்பெரிய ஐபிஓவாகும்.

ஐபிஓ லாட் மற்றும் வரம்பு: ஒரு ஐபிஓ லாட்டில் 15 எல்ஐசி பங்குகள் இருக்கும். ஒரு விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் ஒன்று மற்றும் அதிகபட்சம் 14 லாட்டுகள் வாங்கலாம். இதன் மூலம் மொத்தமாக 210 பங்குகளுக்கு விண்ணப்பிக்கலாம். எனவே, ஐபிஓக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சத் தொகை ரூ.14,235 (அதாவது ரூ.949 x 15). சில்லறை முதலீட்டாளர்கள், பாலிசிதாரர்கள் மற்றும் எல்ஐசி ஊழியர்களுக்கான அதிகபட்ச தொகை ரூ.2 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஐபிஓ ஒதுக்கீடு தேதி: பங்கு ஒதுக்கீடு மே 12 அன்று அறிவிக்கப்படும்.

எல்ஐசி ஐபிஓ பட்டியல்: எல்ஐசி பங்குகள் மே 17 அன்று பிஎஸ்இ மற்றும் என்எஸ்இயில் பட்டியலிடப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x