Published : 04 May 2022 10:53 AM
Last Updated : 04 May 2022 10:53 AM

காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை அவசியமில்லாமல் மக்கள் வெளியே வர வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: கோடை வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள, காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை அவசியமில்லாமல் மக்கள் வெளியே வர வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார். கோடை வெப்பத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து மருத்துவ வசதிகளும் தயார் நிலையில் உள்ளன என்றார்.

சென்னை அபிராமபுரத்தில் 'கோடைகால கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்பு தடுப்பு' விழிப்புணர்வு கண்காட்சியை மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினர் மயிலை த.வேலு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழகத்தில் வேலூர், தருமபுரி மதுரை, கரூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகியுள்ளது. கத்திரி வெயில் தொடங்கியுள்ள நிலையில் வெப்பத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டுள்ளது. காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அவசியமில்லாமல் வெளியில் வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.

நீர்ச்சத்து குறையாத வண்ணம் இயற்கையான பானங்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.

கோடை வெப்பத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து மருத்துவ வசதிகளும் தயார் நிலையில் உள்ளன. கோடை விடுமுறையை முன் கூட்டியே அறிவிப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை முடிவெடுக்கும்" என்றார்.

மேலும் அவர் பேசுகையில், "பொதுத்தேர்வு எழுத வரும் மாணவர்களை கணக்கெடுத்து முகக்கவசம் வழங்குவது குறித்து பள்ளி கல்வித்துறையுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

சுற்றி நெருப்பு, நடுவில் தமிழகம் என்பது போன்று தமிழகத்தை சுற்றியுள்ள மாநிலங்களில் கரோனா தொற்று அதிகமாக உள்ளது. தமிழகத்தில் கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் வரும் 8 ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் 1 லட்சம் இடங்களில் நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 3 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்படும். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் மெகா தடுப்பூசி முகாமை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

XE வகை தொற்றால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. அதனால், பெரிய அளவில் அச்சப்பட வேண்டியதில்லை. அந்த வகை தொற்றால் ஏற்படும் மரணங்கள் குறைவாகத்தான் உள்ளது. தமிழகத்தில் தற்போது வரை XE வகை தொற்று கண்டறியப்பட வில்லை" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x