Published : 25 Apr 2022 05:19 AM
Last Updated : 25 Apr 2022 05:19 AM
புதுடெல்லி: யுபிஐ உட்பட டிஜிட்டல் முறையில் தினமும் ரூ.20 ஆயிரம் கோடிபணப் பரிவர்த்தனை நடைபெறுவ தாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் (மன் கி பாத்) வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இதன்படி 88-வது மனதின் குரல் நேற்று ஒலிபரப்பானது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பதாவது: "கடந்த 14-ம் தேதி அம்பேத்கரின் பிறந்த நாளில் முன்னாள் பிரதமர்களின் அருங்காட்சியகம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகம், இளைஞர்களைக் கவரும் மையமாக மாறி வருகிறது. வரும் மே 18-ம் தேதி சர்வதேச அருங்காட்சியக தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த கோடைவிடுமுறை நாட்களில் நண்பர்களோடு சேர்ந்து ஏதாவது ஒருஅருங்காட்சியகத்தை பார்வையிட்டு உங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
டெல்லி போன்ற பெருநகரங்களில் மட்டும் அல்ல, நாட்டின் குக்கிராமங்களிலும்கூட டிஜிட்டல்பண பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது. நாட்டு மக்கள் அனைவரும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ள வேண்டுகிறேன். மக்களின் மிகச் சிறிய டிஜிட்டல் பரிவர்த்தனைகளால் பிரம்மாண்ட டிஜிட்டல் பொருளாதாரம் உருவாகும்.
இப்போதைய நிலையில் நாடு முழுவதும் ஒரே நாளில் ரூ.20,000 கோடி அளவில் டிஜிட் டல் பணப் பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. கடந்த மார்ச் மாதத்தில் யுபிஐ பரிவர்த்தனை ரூ.10 லட்சம் கோடியை எட்டியுள்ளது.
நாட்டில் கோடை காலம் தொடங்கியுள்ளது. வெப்பம் அதிகரிக்கும் இந்த காலத்தில் நீரை சேமிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வும் அதிகரிக்க வேண்டும். நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் நிலையில் நீர் சேமிப்புக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
குறிப்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 நீர்நிலைகளை உரு வாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய இயக்கம்.இந்த இயக்கத்தில் நாட்டு மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்.
மக்களின் மனதில் கடமையுணர்வு வந்து விட்டால், எவ்வளவு பெரிய தண்ணீர் பிரச்சினைக்கும் எளிதில் தீர்வு காண முடியும். நாட்டுமக்கள் அனைவரும் நீர் பராமரிப்பு,நீர் பாதுகாப்பு தொடர்பான உறுதிமொழியை ஏற்க வேண்டும். ஒவ்வொரு சொட்டு நீரையும் பாதுகாக்க வேண்டும். இதன்மூலம் அனைத்து உயிர்களையும் காப்பாற்ற முடியும்.
கணிதம் எளிதான பாடம்: சில நாட்களுக்கு முன்பாக, மாணவ, மாணவியருடன் கலந்துரையாடினேன். இந்த உரையாடலின் போது சில மாணவர்கள்,கணிதப்பாடம் பயமுறுத்துகிறதுஎன்று கூறினர். இந்தியர்களைபொறுத்தவரை கணிதம் மிக எளிதான பாடம். உலகளாவிய அளவில் கணிதம் தொடர்பான ஆய்வுகள், பெரிய பங்களிப்புகளை இந்தியர்கள் அளித்துள்ளனர்.
விழிப்போடு இருப்போம்: பூஜ்ஜியத்தின் மகத்துவம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். பூஜ்ஜியம் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால், இத்தனை விஞ்ஞான முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்காது. கணினி முதல் அனைத்து கண்டுபிடிப்புகளும் பூஜ்ஜியத்தை அடிப்படையாக கொண்டவை.
அடுத்தடுத்து பல்வேறு பண்டிகைகள் வருகின்றன. இந்த பண்டிகைகளை உற்சாகமாக கொண்டாட உள்ளோம். அதேநேரம் கரோனா வைரஸ் தொடர்பாகவும் விழிப்போடு இருக்க வேண்டும். வைரஸ் தடுப்பு நடைமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்" இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
-பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT