Published : 04 Apr 2016 09:35 AM
Last Updated : 04 Apr 2016 09:35 AM

ஜிஎஸ்டி மசோதா விரைவில் நிறைவேறும்: பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

சரக்கு மற்றும் சேவை வரி மசோதா விரைவில் நிறைவேற்றப்படும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார். சவுதி அரேபியா தொழில் வர்த்தக சபை கூட்டத்தில் இந்திய மற்றும் சவுதி அரேபிய முதலீட்டாளர்களிடம் இவ்வாறு கூறினார்

மேலும் அவர் கூறியதாவது:

ஜிஎஸ்டி குறித்து கவலைப்பட வேண்டாம். விரைவில் ஜிஎஸ்டி நிறைவேற்றப்படும். முன் தேதியிட்ட வரி என்பது கடந்த காலத்தில் நடந்ததாக இருக்கும். மத்திய அரசு நீண்ட காலத்துக்கு நிலையாக இருக்கும் வரி அமைப்பை உருவாக்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

முன் தேதியிட்ட விவகாரத்தில் போடப்பட்ட இரண்டு வழக்குகள் கடந்த ஆட்சியில் போடப்பட்டவை. அந்த வழக்குகள் நீதிமன்றத்தில் இருப்பதால் தற்போதைய அரசு எதுவும் செய்ய முடியாது. இனி இந்தியாவில் முன்தேதியிட்ட வரி என்பது இருக்காது.

இந்தியாவும் சவுதி அரேபியாவும் ஏற்றுமதி இறக்குமதியை தாண்டிய நட்பு குறித்து யோசிக்க வேண்டும். கூட்டு முதலீட்டு திட்டம், தொழில்நுட்பங்களை பகிர்ந்துகொள்ளுதல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து நாம் யோசிக்க வேண்டும்.

இந்தியாவும் சவுதி அரேபியாவும் நீண்ட காலமாக நண்பர்களாக இருந்து வருகிறோம். எதிர்வரும் காலத்துக்கு ஏற்ப துணிச்சலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எதிர்காலத்துக்காக இணைந்து பணியாற்ற வேண்டும்.

இந்தியாவில் ரயில்வே, பாதுகாப்பு மற்றும் மின்சாரம் உள்ளிட்ட துறைகளில் வாய்ப்பு இருக்கிறது. சவுதி தொழில் அதிபர்கள் இந்த துறைகளில் முதலீடு செய்யலாம். உலக வங்கியின் தொழில்புரிவதற்கு ஏற்ற நாடுகளின் பட்டியலில் 12 இடங்கள் முன்னேறி இருக்கிறோம். அடுத்த முறை இந்த பட்டியல் வெளியிடும்போது மேலும் பல இடங்கள் முன்னேறி இருப்போம் என்று மோடி கூறினார்.

ஸ்டாண்ட் அப் இந்தியா

ஸ்டாண்ட் அப் இந்தியா திட் டத்தை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். தாழ்த்தப் பட்டவர்கள்/பழங்குடியினர்கள் மற்றும் பெண்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் ஒரு கோடி ரூபாய் வரை கடன் கிடைக்கும்.

நொய்டாவில் நடக்கும் நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச ஆளுநர், மத்திய நிதியமைச்சர், நிதித்துறை இணை அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

டிசிஎஸ் பெண்கள் அலுவலகத்தில் மோடி

சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் அமைந் துள்ள பெண்கள் மட்டுமே பணிபுரியும் டிசிஎஸ் அலுவலகத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார்.

இந்த மையத்தில் மோடி 40 நிமிடங்கள் செலவழித்தார். அங்கு பணிபுரியும் பெண்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.

நீங்கள் அனைவரும் இந்தியாவுக்கு வரவேண்டும். அங்கு உங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று மோடி கூறினார். மேலும் அவர் கூறும்போது. நாம் போட்டி நிறைந்த உலகத்தில் இருக்கிறோம். நாம் வளர்ச்சி அடைய அனைத்து விதமான சக்தியையும் பயன்படுத்த வேண்டும். இயற்கை வளம் மட்டுமே சக்தி அல்ல, மனித வளமும் சக்திதான். இதில் பெண்களுடைய உற்பத்தி திறன் அதிகரிக்கும்போது வளர்ச்சியும் அதிகரிக்கும். பெண்களின் பங்கு இருக்கும் நாடுகளின் வளர்ச்சி வேகமாக இருக்கும்.

அரசின் செயல்பாடு மற்றும் வெளிப்படைத்தன்மையில் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. முடிந்தவரையில் என்னுடைய தொழில்நுட்ப அறிவை மேம்படுத்திக்கொள்ள முயற்சி எடுத்து வருகிறேன். நீங்கள் இந்தியாவைப் பற்றி, என்னைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நரேந்திர மோடி செயலியை பதவிறக்கம் செய்யுங்கள் என்று மோடி கூறினார்.

பிரதமர் இங்கு வந்ததும், எங்களுடைய பணியாளர்களுடன் உரையாடியதும் எங்களுக்கு கவுரவமாகும் என்று டிசிஎஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் என்.சந்திரசேகரன் தெரிவித்தார்.

டிசிஎஸ் நிறுவனம் இங்கு 2013-ம் ஆண்டு பிபிஓ மையத்தை அமைத்தது. 1,000-க்கு மேற்பட்ட பெண்கள் இங்கு பணிபுரிகின்றனர். இதில் 85% பேர் சவுதி அரேபியாவை சேர்ந்தவர்கள் ஆவர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x