Published : 01 Feb 2022 01:44 PM
Last Updated : 01 Feb 2022 01:44 PM

வருமான வரி, உச்சவரம்பில் மாற்றம் இல்லை: மத்திய பட்ஜெட்டில் ஏமாற்றம்

மத்திய பட்ஜெட்டில் தனிநபர்களுக்கான வருமான வரி மற்றும் அதற்கான உச்ச வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இது அல்லாமல் தனிநபர் வருமான வரி தொடர்பான சில அறிவிப்புகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.

மத்திய பட்ஜெட்டை பொறுத்தவரையில் தனிநபர்களுக்கான வருமான வரியில் செய்யக்கூடிய மாற்றங்கள் எப்போதும் பெரிதும் எதிர்பார்ப்பாக இருக்கும். அந்தவகையில் இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டிலும் இதே எதிர்ப்பார்ப்பு இருந்தது.

கடந்த முறை ‘ஓல்டு ரெஜிம், நியூ ரெஜிம்’ என 2 திட்டங்களாக மாற்றப்பட்டது. இருந்தாலும் 5 லட்சத்துக்கு குறைவாகவும் வரி விதிக்கும் நடைமுறை உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 2.5 லட்சம் ரூபாய் வருமானத்துக்கு மேல் வரி விதிக்கப்படுகிறது.

இது பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ளது. பணவீக்கத்துக்கு ஏற்ப 10 லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. குறைந்தபட்சம் 3 லட்சம் ரூபாய் வரையிலாவது உயர்த்தப்படலாம் என்ற கருத்து பரவலாக இருந்தது.

அதுபோலவே 80சி என்ற விரி விலக்கு உச்ச வரம்பு 1.5 லட்சமாகவே நீண்டகாலமாக உள்ளது. மத்திய அரசு தனக்கான பல திட்டங்களில் பணவீக்கத்தின் அடிப்படையில் உச்ச வரம்புகளை மாற்றியுள்ளது. பிஎப், இஎஸ்ஐ என பலவற்றிலும் உச்ச வரம்புகள் மாற்றப்பட்டுள்ளன. ஆனால் 80சி திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படவில்லை. இதை இந்த ஆண்டு செய்தே ஆக வேண்டும் என்ற பலத்த எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் இந்த அறிவிப்புகள் எதுவுமே இடம் பெறவில்லை.

தனிநபர்களுக்கான வருமான வரி மற்றும் அதற்கான உச்ச வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இது அல்லாமல் தனிநபர் வருமான வரி தொடர்பான சில அறிவிப்புகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.

மாற்றுத்திறனாளிகள் அறிவிப்பு இடம் பெற்றுள்ளது. பெற்றோர் அல்லது பாதுகாவலர், ஊனமுற்ற குழந்தைகளிடமிருந்து காப்பீடு செய்வதற்கு வரிச்சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி தாக்கலின்போது பிழையைச் சரிசெய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது. தொடர்புடைய மதிப்பீட்டு ஆண்டிலிருந்து 2 ஆண்டுகளுக்குள் வரி செலுத்துவோர் புதுப்பிக்கப்பட்ட வருமானத்தைத் தாக்கல் செய்யலாம்.

அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தின்கீழ் செலுத்தப்படும் பங்களிப்பு விலக்கு 10 சதவீதத்லிருந்து 14 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x