Published : 01 Feb 2022 01:06 PM
Last Updated : 01 Feb 2022 01:06 PM

மத்திய பட்ஜெட் 2022: ரிசர்வ் வங்கியால் டிஜிட்டல் ரூபாய்  வெளியிடப்படும்

புது டெல்லி: ரிசர்வ் வங்கியால் டிஜிட்டல் ரூபாய் வெளியிடப்படும். மத்திய வங்கி டிஜிட்டல் நாணயத்தின் அறிமுகம் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும்
என்று மத்திய பட்ஜெட் 2022-23-ல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் 2022-23-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அதில் அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்:
> ரிசர்வ் வங்கியால் டிஜிட்டல் ரூபாய் வெளியிடப்படும். மத்திய வங்கி டிஜிட்டல் நாணயத்தின் அறிமுகம் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும். மலிவான நாணய மேலாண்மை அமைப்புக்கு வழிவகுக்கும்.

> பிளாக்செயின் மற்றும் பிற தொழில்நுட்பங்கள் 2022 முதல் வெளியிட ரிசர்வ் வங்கியால் பயன்படுத்தப்படும். கிரிப்ட்டோகரன்சிகளுக்கு மாற்றாக புதிய டிஜிட்டல் நாணயம் வெளியிடுவது தொடர்பாக நாடு முழுவதும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

> நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 5ஜி தொழில்நுட்பம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதற்கான ஏலம் நடப்பு ஆண்டில் நடத்தப்படும்.2023-ம் ஆண்டுக்குள் 5ஜி தொழில்நுட்பம் கிடைக்க ஏதுவாக அமையும்.

> 2022-23 ஆம் ஆண்டில் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 80 லட்சம் வீடுகளை கட்டி முடிக்க ரூ.48,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

> பெற்றோர் அல்லது பாதுகாவலர், ஊனமுற்ற குழந்தைகளிடமிருந்து காப்பீடு செய்வதற்கு வரிச்சலுகை வழங்கப்படும்.

> கூட்டுறவு சங்கங்களுக்கு ஏற்கெனவே குறைந்தபட்ச வரியே விதிக்கப்படுகின்றன. இனி கூட்டுறவு நிறுவனமும் 15% மட்டுமே செலுத்த வேண்டும்.

> கூட்டுறவு சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் 18.5 சதவீத வரியில் இருந்து 15 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

> 1 முதல் 10 கோடி வருமானம் உள்ள கூட்டுறவு நிறுவனங்களுக்கு கூடுதல் கட்டணம் 7% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

> ஜிஎஸ்டி வரி திட்டம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை இல்லாத அளவு வசூல் உயர்ந்துள்ளது.

> 2022 ஜனவரி மாதம் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1,40,986 கோடியாகும், இது ஜிஎஸ்டி தொடங்கப்பட்டதில் இருந்து அதிகபட்ச தொகையாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x