Published : 15 Mar 2016 10:53 AM
Last Updated : 15 Mar 2016 10:53 AM

தொழில் கலாச்சாரம்: மண்டேலா, மகாத்மா வாழ்ந்த நாட்டில் மகத்தான வாய்ப்புகள்

1869 ஆம் வருடம். தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் ஆரஞ்சு ஆறு நதிக்கரை யோரமாக ஆடு, மாடுகள் மேய்க்கும் ஒரு சிறுவன் தன் மந்தையை மேய்ச்சலுக்குக் கூட்டிப் போய்க்கொண்டிருந்தான். அங்கே, சூரிய வெளிச்சத்தில் ஒரு கல் தகதகத்து ஒளி வீசியது. அதை விளையாட்டுப் பொருளாக நினைத்து வீட்டுக்குக் கொண்டுவந்தான். அவன் அப்பாவுக்கும் அது அதிசய பொருளாக இருந்தது. ஊர்ப் பெரியவரிடம் எடுத்துக்கொண்டு போனார். அந்த நேர்மையானவர் சொன்னார், ``இது சாதாரணக் கல் அல்ல, வைரம், அதிலும், 84 காரட் அதிசய வைரம். இதை நகரத்தில் நகைகள் செய்பவரிடம் கொடு. நல்ல விலை கிடைக்கும்.”

சிறுவனின் அப்பா நகரத்துக்குப் போய் வைரத்தை விற்றார். பதிலாக, 500 ஆடுகள், 10 காளைகள், ஒரு குதிரை ஆகியவை கிடைத்தன. சிறுவனின் குடும்பம் வாழ்நாள் முழுக்கச் சகல வசதிகளோடும் வாழ்ந்தார்கள். அந்த வைரத்தின் பெயர் தென் ஆப்பிரிக்க நட்சத்திரம் (Star of South Africa). இந்த வைரம் இப்போது, லண்டன் அருங்காட்சியகத்தில் இருக்கிறது.

சிறுவனின் தலைவிதியை மாற்றிய வைரம் பற்றிய கதை பரவியது. உலகின் பல பகுதிகளிலிருந்து வைரம் தேடி மக்கள் வந்து குவிந்தார்கள். அப்போது, தங்கச் சுரங்கங்களும் இருப்பது தெரிந்தது. இன்றும், வைர, தங்கச் சுரங்கத் தொழில்களில் தென் ஆப்பிரிக்கா ஒரு முன்னணி நாடாக இருக்கிறது. இந்தத் தொழில்களோடு இந்தியாவுக்கு நெருங்கிய தொடர்பு உண்டு.

தென் ஆப்பிரிக்க வைரங்கள் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டுப் பட்டை தீட்டப்படுகின்றன. நாம் அவர்களிடமிருந்து வாங்கும் பொருட்களில், தங்கத்தின் பங்கு சுமார் 33 சதவீதம்.

பூகோள அமைப்பு

தென்னாப்பிரிக்கக் குடியரசு, ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென்முனை யில், அட்லான்ட்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களின் கரையில் அமைந் துள்ளது. அண்டைய நாடுகள் கிழக்கில் சுவாசிலாந்து: வடக்கில், போட்ஸ்வானா, ஜிம்பாப்வே: வடகிழக்கில் மொசாம்பிக்: வடமேற்கில் நமீபியா: முற்றிலும் சுதந்திர நாடான லெசாத்தோ, தென் ஆப்பிரிக்காவின் நடுவில் இருக்கிறது.

நிலப்பரப்பு 12,19,090 சதுர கிலோ மீட்டர்கள். செங்குத்தான மலைகள், பரந்த பீடபூமி, குறுகிய கடலோரம் என மூன்றுவகை நிலப்பகுதிகள் இருக்கின்றன.

தென் ஆப்பிரிக்கா ஒரு “ஆசீர்வதிக் கப்பட்ட பூமி.” பல்லாயிரக்கணக்கான அரிய மரம், செடி, பூ, காய், மிருக வகைகள் தேசத்துக்கு இயற்கை தந்திருக்கும் அற்புதச் சொத்து. இவை தவிர, வைரம், தங்கம், வெள்ளி, இரும்பு, பிளாட்டினம், மாங்கனீஸ், குரோமியம், யுரேனியம், பெரிலியம், டைட்டானியம், இல்மனைட், ஸிர்க்கோனியம் என்னும் வகை வகையான உலோகத் தாதுக் களும் ஏராளம்.

தலைநகரம் பிரிட்டோரியா.

சுருக்க வரலாறு

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாகவே மனிதர்கள் வாழ்ந்தார்கள். 2,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே, நாகரிக வளர்ச்சி கொண்ட சமுதாயமாக இருந்தது. கி.மு. 800 களிலேயே, அரேபிய நாடுகளோடு வர்த்தகம் இருந்தது. அவர்கள் தென் ஆப்பிரிக்காவுக்குப் புலம் பெயர்ந்து வரத் தொடங்கினார்கள். பல நூற்றாண்டுகளுக்குப் பின், ஐரோப்பியரைத் தென் ஆப்பிரிக்கா ஈர்த்தது. கி.பி. 1848 இல் போர்த்துக் கீசியர், 1620 - இல் பிரிட்டிஷார், 1652 இல் டச்சுக்காரர்கள் வந்தார் கள். சுரங்கங்களிலும், தோட்டங்களிலும் வேலை பார்க்க அடிமைகளை அழைத்து வந்தார்கள். இவர்களில் பெரும்பாலா னோர் கருப்பு இனத்தவர்களும், இந்தியர்களும். ஐரோப்பியர்கள் இவர் களை மிருகங்களைவிடக் கேவலமாக நடத்தினார்கள். நிறவெறி கோரமுகத் தோடு தாண்டவமாட ஆரம்பித்தது.

1815 முதல், மெதுவாக பிரிட்டிஷார் ஆதிக்கம் அதிகரித்தது. ``போயர்கள்” என்று அழைக்கப்பட்ட டச்சுக்காரர்கள் நாட்டின் வடபகுதிக்குப் புலம் பெயர்ந் தார்கள். இவர்களுக்கும், உள்ளூர்ப் பழங்குடியினருக்குமிடையே போர் நடந்தது. போயர்கள் ஜெயித்தார்கள். அடுத்து, பிரிட்டிஷாருக்கும், போயர் களுக்குமிடையே போர். இங்கிலாந்து வென்றது. 1869 இல், வைரம் கண்டு பிடிக்கப்பட்டபின், நாட்டை விட்டுக் கொடுக்க இங்கிலாந்து விரும்பவில்லை. 1910 இல், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்தின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட தேசமானது. 1960 இல் தென் ஆப்பிரிக்கா விடுதலை பெற்றது. குடியரசு நாடானது. ஆனால். மைனாரிட்டி வெள்ளையர்கள் கருப்பர்கள் மெஜாரிட்டியாக இருந்த நாட்டை ஆண்டார்கள். மண்ணின் மைந்தர்களான கருப்பு இனத்தவருக்கு வோட்டுரிமை தராமல், இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தினார்கள்.

நெல்சன் மண்டேலா கருப்பு இனத்தவரின் உரிமைப் போராட்டம் தொடங்கினார். கைது செய்யப்பட்டார். 27 நீண்ட வருடங்கள் சிறைவாசம். போராட்டங்கள் தொடர்ந்தன. பல உலக நாடுகள் (இந்தியா உட்பட) தென் ஆப்பிரிக்காவுடன் உறவுகளை முறித்துக்கொண்டன. 1990 இல் மண்டேலா விடுதலை செய்யப்பட்டார். 1994 இல், முதன் முதலாகக் கருப்பு இனத்தவர் வெள்ளையருக்குச் சமமாக வாக்களித்தார்கள். மண்டேலா ஆட்சிக்கு வந்தார். ஜனநாயகமும், நிறவெறியற்ற சமத்துவ சமுதாயமும் தொடர்கின்றன.

மக்கள் தொகை

சுமார் 5 கோடி 37 லட்சம். கருப்பு இனத்தவர் 80 சதவீதம். வெள்ளையர்கள் 8.50 சதவீதம். இந்தியர்கள் 2.50 சதவீதம். எஞ்சியவர்கள் பிறர். சுமார் இரண்டரை லட்சம் தமிழர்கள் வசிப்பதாகக் கணித்துள்ளார்கள் மத அடிப்படையில் கிறிஸ்தவர்கள் 87 சதவீதம். முஸ்லிம்கள் 1.50 சதவீதம். இந்துக்கள் 1 சதவீதம். எஞ்சியவர்கள் பல மதத்தினர்.

ஆங்கிலம் மற்றும் 10 ஆப்பிரிக்க மொழிகள் ஆட்சி மொழிகள். நேட்டால் என்னும் பகுதியின் பள்ளிகளில் தமிழ் விருப்ப மொழியாகக் கற்பிக்கப்படுகிறது. கல்வியறிவு 94 சதவீதம். ஆண்கள் 95 சதவீதம், பெண்கள் 93 சதவீதம்.

ஆட்சிமுறை

கூட்டாட்சி நடக்கிறது. 9 மாநிலங்கள். ஒவ்வொன்றுக்கும், அசெம்பிளியும், அசெம்பிளி தேர்ந்தெடுக்கும் பிரதமரும் உண்டு. பாராளுமன்றத்தில் இரண்டு சபைகள். செனட் என்னும் மேலவை அங்கத்தினர்கள் மாநிலங்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். நேஷனல் அசெம்பிளி என்னும் கீழவை உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். நாட்டுத் தலைவர் ஜனாதிபதி பாராளுமன்றத்தால் தேர்வு செய்யப்படுகிறார். அனைவரின் ஆட்சிக் காலமும் 5 வருடங்கள்.

பொருளாதாரம்

பொருளாதாரத்தில் சேவைத்துறை யின் பங்கு 68 சதவீகிதம். சுற்றுலா, நிதி, வங்கிச் சேவைகள் ஆகியவை இந்தப் பங்களிப்பைத் தருகின்றன. தொழில் துறையின் பங்கு 30 சதவீதம். சுரங்கத் தொழில், இரும்பு உருக்கு தயாரிப்பு, கப்பல்கள் பழுது பார்த்தல், இயந்திரங்கள், கார்கள், உரங்கள், உணவுவகைகள் உற்பத்தி ஆகியவை முக்கியமானவை.

நாணயம்

ராண்ட் (Rand). 4 ரூபாய் 23 காசுகளுக்குச் சமம்.

இந்தியாவோடு வியாபாரம்

நிறவெறி இருந்தவரை நாம் தென் ஆப்பிரிக்காவோடு வர்த்தக உறவுகளைத் துண்டித்திருந்தோம். 1994 இல், அங்கே ஜனநாயகமும், சமத்துவமும் மலர்ந்தபின் தான், நம் வியாபாரம் தொடங்கியது. நம் ஏற்றுமதி ரூ.32,348 கோடிகள். இவற்றுள் முக்கியமானவை பெட்ரோலியப் பொருட் கள், மருந்துகள், கார்கள், அணு உலைகள், இயந்திரங்கள், ரசாயனங்கள், பிளாஸ்டிக்ஸ். நம் இறக்குமதி ரூ.39,741 கோடிகள். கரி, தங்கம், வைரங்கள், இரும்பு, உருக்கு, அலுமினியம், உலோகத் தாதுக்கள், மரக்கூழ், கம்பளி போன்றவை இந்தப் பட்டியலில் இடம் பிடிக்கின்றன.

டாடா குழுமம் (தாஜ் ஹோட்டல்கள், டி.சி.எஸ்), மஹிந்திரா (கார்கள்), ரன்பாக்ஸி, சிப்லா (மருந்துகள்) ஆகிய இந்திய நிறுவனங்கள் தென் ஆப்பிரிக்காவில் தொழிற்சாலைகள் நடத்தி வருகிறார்கள். இதேபோல், சாப் மில்லர் (பீர் தயாரிப்பு), அல்டெக் (செட்டாப் பாக்ஸ்), ஆட்காக் இன்கிராம் (மருந்துகள்) போன்ற பல தென் ஆப்பிரிக்கத் தொழில் நிறுவனங்களும் இந்தியாவில் தங்கள் பொருட்களைத் தயாரிக்கிறார்கள்

விசிட்

மே முதல் ஜூலை வரை குளிர்காலம். ஆனால், தாங்கும் குளிர்தான். பிற மாதங்களில் வெயில். அதிக மழையும் கிடையாது.

பிசினஸ் டிப்ஸ்

நேரம் தவறாமை மிக முக்கியம். முன்னரே நேரம் குறித்தால் மட்டுமே, முக்கியமானவர்களைச் சந்திக்க முடியும். விசிட்டிங் கார்டுகள் அவசியம். ஆனால், பரிமாறிக்கொள்ளும் பாரம்பரியம் கிடையாது. நீங்கள் கார்டு கொடுத்தால், அவர்கள் பதிலுக்குத் தராமலேயே இருக்கலாம்.

சந்திக்கும் பிசினஸ்மேன்களின் பின்புலத்துக்கு ஏற்ப, அவர்கள் தொழில் கலாச்சாரம் வேறுபடும். வெள்ளையர்கள் அவசரம் காட்டமாட்டார்கள். நிதானமாக முடிவெடுப்பார்கள். நாம் அவசரம் காட்டினால், பேச்சு வார்த்தைக்கே முற்றுப்புள்ளி வைத்துவிடுவார்கள். இந்திய, சீன பிசினஸ்மேன்கள் சாமர்த்தி யசாலிகள். திறமையாகப் பேரம் பேசு வார்கள். ஆப்பிரிக்க பிசினஸ்மேன்கள் அனுபவம் இல்லாதவர்கள். ஆனால், எல்லோரும் நேர்மையானவர்கள்.

உள்ளூர் அரசியல், முன்பு நிலவிய நிறவெறிப் பிரச்சினைகள் பற்றிப் பேச அவர்கள் விரும்புவதில்லை. ஆகவே, இந்தச் சமாச்சாரங்களைத் தவிர்க்கவும். விளையாட்டுப் பிரியர்கள், சாப்பாட்டு ரசிகர்கள். ஆகவே, ரக்பி, கிரிக்கெட், கோல்ஃப், உணவு ஆகியவைபற்றிப் பேசலாம்.

உடைகள்

ஜோகன்னஸ்பர்க் நகரில் மட்டும் பான்ட், ஷர்ட், டையும், சில அலுவலகங் களில் கோட்டும் தேவை. பிற நகரங்களில் பான்ட், முழு கை சட்டை போதும்.

பரிசுகள் தருதல்

முதல் சந்திப்பில் பரிசுகள் தருவதை அவர்கள் விரும்புவதில்லை. ஓரளவு தொடர்பு ஏற்பட்டபின் தரலாம். பரிசு தரும்போது, மூன்று முறை மறுப்பது அவர்கள் வழக்கம். ஆகவே, நான்கு முறை வற்புறுத்துங்கள். வாங்கிக்கொள்வார்கள்.

slvmoorthy@gmail.com



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x