Published : 01 Mar 2016 09:02 AM
Last Updated : 01 Mar 2016 09:02 AM

ஏற்றுமதியை ஊக்குவிக்கவில்லை: ஃபிக்கி கருத்து

பட்ஜெட் அறிவிப்பில் ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என ஃபிக்கி கூறியுள்ளது. மத்திய பட்ஜெட் அறிவிப்பையொட்டி சென்னையில் இந்திய தொழில் வர்த்தக சபை சம்மேளனங்களின் கூட்டமைப்பு (ஃபிக்கி) கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் பேசிய ஃபிக்கி தமிழக தலைவர் ரபீக் அஹமது கடந்த பதினான்கு மாதங்களாக ஏற்றுமதி தொடர்ந்து சரிவை சந்தித்துள்ளது. இந்த சரிவை தடுத்து, ஏற்றுமதியை அதிகரிக்க எந்தத் திட்டங்களும் பட்ஜெட்டில் இல்லை என்றார். ரூபாய் மதிப்புக் குறைவை பயன்படுத்தி ஏற்றுமதியை ஊக்குவிக்க நடவடிக்கைகள் எடுக்கலாம். ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கிறபோதுதான் அரசு திட்டமிட்டபடி வேலை வாய்ப்புகளை அதிகரிக்கமுடியும் என்றார். அதே சமயத்தில் இறக்குமதி தொடர்பான வரிகள் மறுசீரமைக்கப்படும் என்கிற அறிவிப்பில், என்ன மாற்றங்கள் நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவரும் நிர்வாக இயக்குநருமான எம்.எஸ். சுந்தரராஜன் பேசியபோது ``கிராமப்புற பொருளாதார மற்றும் விவசாயத்துக்கு இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். இதன் மூலம் கிராமப்புற பொருளாதாரம் மேம்படும். அதே சமயத்தில் வங்கித்துறைக்கு ரூ.25,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் குறைவானது.

வங்கிகளின் மேம்பாட்டுக்கு ரூ.3.5 லட்சம் கோடி தேவையாக இருக்கிறது என்கிற நிலையில் இந்த ஒதுக்கீடு மிகவும் குறைவானது. எதிர்வரும் ஆண்டுகளில் மத்திய அரசு இதற்கு அதிக ஒதுக்கீடு செய்யும் என நம்பலாம் என்று குறிப்பிட்டார்.

சிறு குறு தொழில் நிறுவனங் களுக்கான வரி வரம்பை ரூ. 1 கோடியிலிருந்து ரூ. 2 கோடியாக உயர்த்தியது சிறு தொழில் நிறுவனங்களுக்கு சாதகமான விஷயம். அதே சமயத்தில் உற்பத்தி துறை மற்றும் பிற தொழில்துறைகளுக்கு தனியாக எதையும் அறிவிக்கவில்லை. பட்ஜெட்டின் பிற இணைப்புகளை பார்த்துதான் முடிவு செய்ய முடியும் என்றும் குறிப்பிட்டார். தொழில்துறையினர் பலரும் பட்ஜெட்டுக்கு 10 மதிப்பெண் ணுக்கு 7 முதல் 8 மதிப்பெண் வழங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x