Published : 20 Mar 2016 12:00 PM
Last Updated : 20 Mar 2016 12:00 PM

விஜய் மல்லையா மீதான விசாரணை: ரிசர்வ் வங்கி, ‘செபி’ உதவியை நாடியது அமலாக்கத்துறை

தொழிலதிபர் விஜய் மல்லையா மீதான விசாரணையை தொடர்ந்து வரும் அமலாக்கத்துறை தற்போது ரிசர்வ் வங்கி மற்றும் பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான `செபி’-யின் உதவியை நாடியுள்ளது. மல்லையா குழும நிறுவனங்களின் பங்குகள் உரிமையை அடுத்த நபர்களுக்கு மாற்ற முடியாதபடி உறுதிப்படுத்த வேண்டும் என்று `செபி’ மற்றும் ரிசர்வ் வங்கி உதவியை அமலாக்கத்துறை கேட்டுகொண்டுள்ளது.

ஐடிபிஐ வங்கியிடம் 900 கோடி ரூபாய் கடன் வாங்கி திருப்பி செலுத்தாத விஜய் மல்லையாவுக்கு எதிரான பண்மோசடி விசாரணையில் சிபிஐ மற்றும் `செபி’ ஆகியவற்றோடு ஒருங்கிணைந்து செயல்படுகிறோம் என்று அமலாக்கத்துறை இயக்குநரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்ததாவது: மல்லையா குழும நிறுவன பங்குகள் உரிமையை அடுத்த நபர்களுக்கு மாற்ற முடியாததை உறுதிப்படுத்த வேண்டும் என்று நாங்கள் ரிசர்வ் வங்கி மற்றும் `செபி’-யிடம் கேட்டுக் கொண்டுள்ளோம் என்று தெரிவித்தார். ஏப்ரல் 2-ம் தேதி ஆஜராகும்படி விஜய் மல்லையாவுக்கு அமலாக்கத்துறை இயக்குநரகம் புதிய சம்மன் அனுப்பியுள்ளது. இதை பொறுத்தவரை இன்னும் மல்லையாவிடமிருந்து சாதகமான பதில்கள் கிடைக்கவில்லை. மல்லையா நேரில் ஆஜராகாததற்கு குறிப்பிட்ட காரணங்கள் எதுவும் சொல்லவில்லை.

விஜய் மல்லையா, தொழில் சம்பந்தப்பட்ட திட்டங்கள் இருக்கிறது அதனால்தான் வெளிநாட்டிற்குச் சென்றுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார் அதுமட்டுமல்லாது ஆணையங்களுக்கு முழு ஒத்துழைப்பை அளிப்பதாகவும் கூறியுள்ளார். ஐடிபிஐ வங்கி கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு கடன் வழங்கியது குறித்து பல்வேறு விதமாக விசாரித்து வருகிறோம். இந்த ஒட்டுமொத்த பரிமாற்றத்தில் ஒவ்வொருவரின் பங்கு என்ன என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம். இந்த வழக்கை பொறுத்தவரை அதிகமான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றன. அதனால் நாங்கள் முன்னோக்கி செல்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x