Last Updated : 23 Feb, 2016 10:40 AM

 

Published : 23 Feb 2016 10:40 AM
Last Updated : 23 Feb 2016 10:40 AM

ஜாட் போராட்டத்தால் ஹரியாணா மாநிலத்தில் ரூ.20 ஆயிரம் கோடி நஷ்டம்: அசோசேம் கணிப்பு

ஜாட் இனத்தவர் நடத்தும் போராட்டம் காரணமாக ஹரியாணா மாநிலத்தில் ஏற்பட்ட பொருள்களின் சேதம் ரூ.20 ஆயிரம் கோடி இருக்கும் என்று தொழில் வர்த்தக அமைப்பான அசோசேம் கணித்துள்ளது.

போராட்டத்தை ஒட்டி நடை பெற்ற வன்முறையில் ஏராளமான பொதுச்சொத்துகள் சேதமடைந் தன. போராட்டம் காரணமாக வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டதில் பெருமளவு நஷ்டம் ஏற் பட்டது. போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு சிறு, குறு வர்த்தக நிறுவனங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டன. இழப்பின் மதிப்பீட்டை எவ்வாறு கணித்தார்கள் என்ற விவரத்தை அசோசேம் வெளியிடவில்லை.

ஹரியாணா மாநிலத்துக்கு மட்டும் இந்த போராட்டத்தால் இழப்பு ஏற்படவில்லை. அண்டை மாநிலங்களான பஞ்சாப், இமாசலப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளன. இம்மாநிலங் களிலிருந்து பிற மாநிலங்களுக்கு ஹரியாணா வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை முற்றிலுமாக முடக்கப்பட்டதால் இழப்பு அதிகமாகும். ரயில் போக்குவரத்தும் முடங்கியதால் பாதிப்பு அதிகம் என அசோசேம் குறிப்பிட்டுள்ளது.

ஹரியாணா மாநிலத்தில் ரோஹ்தக், ஜாஜ்ஜார், பகதூர்கர், ஹிஸார், பிவானி, ஜிண்ட், கோஹானா, சோனிபட், கைதள், கர்னால், பானிபட் ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

போராட்டத்தால் மாநிலத்துக்கு ரூ.18 ஆயிரம் கோடி முதல் ரூ.20 ஆயிரம் கோடி வரை இழப்பு இருக்கும் என்று மாநில அரசு மதிப்பிட்டுள்ளது. பஸ்களை கொளுத்தியது, தனியார் வாகனங்களுக்கு சேதம் விளைவித்தது, ரயில் நிலையங்களை சேதப்படுத்தியது, காவல் நிலையங்கள், வணிக வளாகங்கள், ஹோட்டல்களை தாக்கி சேதப்படுத்தியதால் வர்த்தக நடவடிக்கைகள் முற்றிலுமாக முடங்கின.

ஹரியாணா மாநிலத்தில் தற்போதுதான் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆலைகளை அமைக்க முன்வந்துள்ளன. சுஸுகி நிறுவனத்தின் ஆலை ரோஹ்தக்-டெல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் ஹரியாணா மாநிலம் மானேசரில் உள்ள ஆலையில் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்தியது.

பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் சேவை அலுவலகங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அலுவலகங்கள் குர்காவ்னில் உள்ளன. இவற்றின் செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டன.

ஹரியாணா மாநிலத்தில் தற்போது நடைபெற்றுவரும் வன்முறைகள் மாநிலத்தில் தொழில்புரிவதற்கான நம்பகத் தன்மையை சீர்குலைப்பதாக உள்ளது.

இதனால் அந்நிய நிறுவனங்கள் இங்கு தொழில் தொடங்க முன்வருவது கேள்விக்குறியாகிவிடும் என்று அசேசேம் குறிப்பிட்டுள்ளது. சமூக விரோத சக்திகளை ஒடுக்கி நிலையை மேம்படுத்த உரிய நடவடிக்கைய அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

ஹரியாணா மாநிலத்தில் மார்ச் 7 மற்றும் 8-ம் தேதிகளில் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில் அங்கு வலுத்துவரும் போராட்டத்தால் குறிப்பிட்ட தேதியில் மாநாட்டை நடத்த முடியுமா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x