Last Updated : 19 Feb, 2016 09:00 AM

 

Published : 19 Feb 2016 09:00 AM
Last Updated : 19 Feb 2016 09:00 AM

`மேக் இன் இந்தியா’ வாரத்தில் ரூ.15.20 லட்சம் கோடிக்கு ஒப்பந்தம்

மும்பையில் ஒரு நடைபெற்ற `மேக் இன் இந்தியா’ வாரம் மூலம் 15.2 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளுக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிப்-13 முதல் பிப்-18 வரை ஒரு வாரமாக மும்பையில் நடைபெற்று வந்த `மேக் இன் இந்தியா வாரம்’ - முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் ரூ.15.2 லட்சம் கோடிக்கு ஒப்பந்தங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. `மேக் இன் இந்தியா’ வாரத்தை ஒருங்கிணைத்த மஹாராஷ்டிர மாநிலம் 8 லட்சம் கோடி ரூபாய்க்கான முதலீடுகளை ஈர்த்துள்ளது.

மேலும் 1.5 லட்சம் கோடி முதலீடுகளுக்கான விசாரணைகளும் வந்துள்ளன என்று நேற்று மும்பையில் நடந்த மேக் இன் இந்தியா வார நிறைவு நாள் நிகழ்ச்சியில் தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை செயலர் அமிதாப் காந்த் கூறினார். நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியதாவது...

இந்த மாநாடு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்த மாநாடு, சர்வதேச அளவிலான முதலீட்டாளர்களுக்கு இந்தியாவில் முதலீடு மேற்கொள்ள சாதகமான சூழலை உருவாக்கி கொடுத்துள் ளது. மொத்த முதலீட்டு ஒப்பந்தங் கள் தவிர, மஹாராஷ்டிரா மாநிலம் மட்டும் 8 லட்சம் கோடி ரூபாய்க்கான முதலீட்டு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.

இந்த மாநாடு உற்பத்தித் துறைக்கானது மட்டுமல்ல, புத்தாக்கம் மற்றும் வளர்ந்து வரும் ஆராய்ச்சிகளுக்கும் இந்த மாநாட்டின் மூலம் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

பிற தொழில்துறை அமைப்புகளின் ஒருங்கிணைப்பு குறிப்பிடும்படியாக இல்லை என்றாலும் இந்திய நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களும் இந்த மாநாட்டில் சிறந்த பங்களிப்பை செலுத்தியுள்ளன.

இந்த நோக்கத்தில் வட கிழக்கு மாநிலங்கள் குறைவான பங்கு வகிக்கின்றன. ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு விதமாக தேர்ச்சி பெற்றுள்ளன. கேரளா மாநிலம் சுற்றுலா துறையில் சிறந்து விளங்குகிறது. ஆனால் தொழில்துறை வளர்ச்சியில் சிறந்து விளங்கும் மாநிலமல்ல. என்னுடைய தனிப்பட்ட பார்வையில் வட கிழக்கு மாநிலங்களில் புதிய முயற்சிகள் தேவையாக இருக்கிறது. தொழில்துறையினர் இந்த பகுதிகளில் கூடுதலாக தொழில் தொடங்க முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

பிரதமர் நரேந்திர மோடி `மேக் இன் இந்தியா’ வாரத்தை பிப்-13 ஆம் தேதி மும்பையில் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தை ஊக்கப்படுத்த மோடி அரசு ரூ. 100 கோடி செலவிட்டுள்ளதாக அறிக்கைகள் கூறுகிறது. இதன் மூலம் வேலை வாய்ப்பு அதிகரிக்கச் செய்வது, அடுத்த பத்தாண்டுகளில் இந்திய பொருளாதார வளர்ச்சியில் உற்பத்தி துறையின் பங்களிப்பை 25 சதவீதமாக அதிகப்படுத்துவது என மத்திய அரசு இலக்கு வைத்துள்ளது. தற்போது ஜிடிபியில் உற்பத்தி துறையின் பங்களிப்பு 16 சதவீதம் முதல் 17 சதவீதமாக உள்ளது. உள்நாட்டு பொருளாதாரத்தில் நீண்ட காலமாகவே சேவைத் துறை பக்கபலமாக இருந்து வருகிறது. ஜிடிபியில் சேவைத் துறையின் பங்களிப்பு மட்டும் 60 சதவீதமாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x