Last Updated : 18 Feb, 2016 11:14 AM

 

Published : 18 Feb 2016 11:14 AM
Last Updated : 18 Feb 2016 11:14 AM

இந்தியாவில் சம்பள உயர்வு 10% ஆக இருக்கும்: ஆய்வில் தகவல்

இந்திய நிறுவனங்களில் இந்த ஆண்டு சம்பள உயர்வு கடந்த ஆண்டைவிட குறைவாக இருக்கும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு சம்பள உயர்வு சராசரி 10.6 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டில் சராசரி சம்பள உயர்வு 10.3 சதவீதமாக இருக்கும் என்று ஆய்வு கூறியுள்ளது. நிறுவனங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இந்த விஷயத்தை திட்டமிட்டு வருகின்றன என்று மனித வள ஆலோசனை நிறுவனமான எயோன் ஹிவிட் (Aon Hewitt) குறிப்பிட்டுள்ளது.

சம்பள உயர்வு விகிதம் அதிகரிப்பதில், ஆசிய பசிபிக் நாடுகள் அளவில் இந்தியா தொடர்ச்சியாக முன்னிலை வகித்து வருகிறது. ஆனால் இதில் தற்போதைய நிலையில் இந்தியா, சீனா இரண்டு நாடுகளிலும் ஊதிய உயர்வு குறைவாக இருக்கும் என்று அந்த ஆய்வு கூறியுள்ளது.

2012 ஆம் ஆண்டிலிருந்து உள்ள நிலைமை என்னவென்றால் பொதுவான ஊதிய உயர்வு 10 சதவீதம் என்கிற அளவில் இருந்தது. ஆசிய பசிபிக் நாடுகளோடு தொடர்ச்சியாக போட்டிபோடும் அளவுக்கு, சந்தையின் முதிர்ச்சிக்கு ஏற்ப இரட்டை இலக்க சம்பள உயர்வு என்கிற உயர்வான இடத்தில் இந்தியா இருந்து வருகிறது. இது புது வழக்கம் என்று கூறியுள்ள ஹிவிட் நிறுவனம், இந்த ஆய்வு 700 நிறுவனங்களின் புள்ளிவிவரங்கள் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது.

இந்த புள்ளிவிவரங்கள் நிறுவனங்களின் நிலைமையை தெளிவாக பிரதிபலிப்பதாக உள்ளன. அதிகரித்துவரும் ஊதியத்துக்கான பட்ஜெட்டை குறைப்பதன் மூலம் தங்களது எதிர்கால வளர்ச்சிக்கு தெளிவாக திட்டமிடுகின்றன என்று ஹிவிட் நிறுவனத்தின் இந்திய கூட்டாளியான ஆனந்தோரூப் கோஸ் கூறியுள்ளார்.

கடந்த காலங்களில் 15.6 சதவீதம், 12.6 சதவீத ஊதிய உயர்வுகளையும் பார்த்துள்ளோம். அது நிலையான ஊதிய உயர்வாக இல்லை. ஆனால் இதுவரை இல்லாத அளவுக்கு தற்போதைய ஊதிய உயர்வு அளவான 10.3 சதவீதம் என்பது நிலையானதாக இருக்கும் என்பதை பார்க்கிறோம் என்றும் கோஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையான சம்பள விகிதமும் சற்று குறைய வாய்ப் புள்ளது. பெருவாரியான நிறு வனங்கள் தங்களது சம்பள உயர்வை அதிகமாக வேலை பார்த்தவர்கள் மற்றும் முக்கிய திறமை கொண்டவர்களுக்கு என்று ஒதுக்குகின்றன.

சராசரியாக வேலைபார்க்கும் பணியாளருக்கும் முக்கிய திறமைக்குமான சம்பள விகித இடைவெளி ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கவனித்த வகையில் இது 63 சதவீதம்வரை உள்ளது. இந்த சம்பள உயர்வில் கவனிக்கத்தக்க விஷயமாக புதிய நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பட்ஜெட் திட்டமிடல் நிலையில் முதல் மூன்றாண்டுகளில் அதிக சம்பளத்தை வழங்குகின்றன. ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் 2016 புராஜெக்ட்டுகள் அடிப்படையில் சம்பள உயர்வு விகிதம் 15.6 சதவீதமாக உள்ளது. சம்பள உயர்வு அளிப்பதில் இந்த நிறுவனங்கள் முதலிடத்தில் உள்ளன. இதற்கடுத்து லைப் சயின்ஸ் துறையில் 11.6 சதவீதமாக உள்ளது.

இந்திய நிறுவனங்களின் சம்பள உயர்வு விகிதம் சரிந்து வருகிறது. 16.3 சதவீதம் சம்பள உயர்வு விகிதத்திலிருந்து இந்திய நிறுவனங்கள் 10.3 சதவீத உயர்வுக்கு வந்துள்ளன. 2009 பொருளாதார தேக்க நிலையிலிருந்து இந்திய நிறு வனங்கள் கற்றுக் கொண்டுள்ளன என்றும் அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x