Last Updated : 07 Feb, 2016 11:56 AM

 

Published : 07 Feb 2016 11:56 AM
Last Updated : 07 Feb 2016 11:56 AM

இந்தியாவில் 2-வது பசுமை புரட்சிக்கு தேவை உள்ளது: அர்விந்த் பனகாரியா பேச்சு

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) விவசாயத்துறையின் பங்களிப்பு குறைந்து கொண்டே வருவதையொட்டி இரண்டாவது பசுமை புரட்சியை கொண்டு வரவேண்டிய தேவை இருக்கிறது என்று நிதி ஆயோக் துணைத் தலைவர் அர்விந்த் பனகாரியா தெரிவித்துள்ளார். மேலும் விவசாயத்துறையில் மிகப்பெரிய சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

காந்திநகரில் மத்திய மற்றும் மேற்கு பிராந்திய மாநிலங்கள் கலந்து கொண்ட `விவசாய மேம்பாட்டு சிறப்புக் குழு’ கூட்டத்தில் நிதி ஆயோக் துணைத்தலைவர் அர்விந்த் பனகாரியா பேசியதாவது: இந்திய மக்கள் தொகையில் 49 சதவீத மக்கள் விவசாயத்துடன் இணைந்துள்ளனர். ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்துறை 15 சதவீத பங்களிப்பை மட்டுமே அளித்து வருகிறது. இந்த தருணத்தில்தான் நாம் விவசாயத்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

இரண்டாவது பசுமை புரட்சி கொண்டு வர இதுவே சரியான தருணம். மேலும் நிலம், விதைகள், விவசாயம் செய்யும் முறை ஆகியவை உட்பட இந்த துறையில் உள்ள பல்வேறு பகுதிகளில் நாம் சீர்திருத்தத்தை கொண்டு வர வேண்டும். நிதி ஆயோக் அமைப்பிற்கும் மாநிலங்களுக்கும் இடையே நல்ல புரிதல் இருந்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

குஜராத் மாநிலத்தின் சுகாதார துறை அமைச்சர் நிதின் பட்டேல், விவசாயிகளுக்கு தனி அந்தஸ்தைக் கொடுக்க வேண்டும் அதுமட்டுமல்லாமல் விவசாயத்துடன் தொடர்பு கொண்ட மற்ற நிறுவனங்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்று கூறினார்.

மாதிரி நில குத்தகை சட்டத்திற்கும் மற்றும் விவசாய பொருட்களை மார்க்கெட்டிங் செய்வதில் சீர்திருத்தம் கொண்டு வருவதற்கும் மாநிலங்கள் சாதகமாக தெரிவித்ததாக நிதி ஆயோக் வெளியிட்ட குறிப்பில் தெரிவித்துள்ளது.

மேலும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மாநிலங்கள் நீர் வளத்தை பங்கீட்டு கொள்வதில் சிறந்த வழிமுறைகளை கையாள வேண்டும் என்றும் விவசாயத் துறையில் வேலை வாய்ப்பினை அதிகரிக்க வேண்டும் என்றும் விவசாய உற்பத்தி பொருட்களுக்கு லாபகரமான விலை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இந்தக் கூட்டத்தில் நதி நீர் இணைப்பு, அறுவடை மற்றும் வேளாண்மை கூட்டுறவுகளை வலுப்படுத்துவது குறித்து மாநிலங்கள் விவாதித்தன.

இந்த கூட்டத்தில் யூனியன் பிரதேசங்களான டையூ மற்றும் டாமன், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, குஜராத், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், கோவா போன்ற மாநிலங்களில் உள்ள சிறப்புக் குழுவின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x