Published : 18 Feb 2016 11:11 AM
Last Updated : 18 Feb 2016 11:11 AM

பொதுத்துறை வங்கிகளில் மத்திய அரசு கூடுதல் முதலீடு?

வாராக்கடனுக்காக அதிக நிதியை ஒதுக்கீடு செய்ததால் பொதுத்துறை வங்கிகள் நஷ்டத்தை சந்தித்தன. அதனால் ஏற்கெனவே நிர்ணயம் செய்ததை விட கூடுதல் முதலீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

பேசல் 3 விதிமுறையை பூர்த்தி செய்ய பொதுத்துறை வங்கிகளுக்கு கூடுதல் நிதி தேவைப்படுகிறது. அதனால் மார்ச் 2019-ம் ஆண்டுக்குள் பொதுத்துறை வங்கிகளில் 70,000 கோடி ரூபாயை மத்திய அரசு முதலீடு செய்வதாக தெரிவித்தது. மீதம் தேவைப்படும் தொகையை சந்தையில் திரட்டிக்கொள்ளுமாறு மத்திய அரசு தெரிவித்திருந்தது.

ஆனால் வாராக்கடன் மிக அதிகமாக அதிகரித்ததால் பல வங்கிகள் நஷ்டத்தை சந்தித்தன. இதனால் இந்த வங்கிப் பங்குகள் பலமாக சரிந்தன. அதனால் சந்தையில் நிதி திரட்ட முடியாத சூழலில் பொதுத்துறை வங்கிகள் உள்ளன.

ஸ்டாண்டர்டு அண்ட் பூர் நிறுவனத்தின் வல்லுநர் தீபாலி சேத் கூறும்போது, பொதுத்துறை வங்கிகளின் தரக்குறியீடு மேலும் குறையலாம். இந்த சூழ்நிலையில் சந்தையில் நிதி திரட்டுவது கடினம், அதனால் அரசாங்கத்தின் உதவி இந்த வங்கிகளுக்கு தேவை என்று கூறினார்.

இரு மத்திய அரசு அதிகாரிகள் கூறும் போது, பொதுத்துறை வங்கிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படலாம். பட்ஜெட் சமயத்திலோ அல்லது அதற்கு முன்பாகவோ அறிவிப்பு வெளியாகலாம். ஆனால் எவ்வளவு தொகை என்பது தெரியவில்லை என்று கூறினர்.

கடந்த வாரம் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தன்னுடைய ட்விட்டரில் கூறும்போது பொதுத்துறை வங்கிகளை பாதுகாக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

அந்நிய முதலீடு உயர்வு?

பொதுத்துறை வங்கிகளை நிதியை மேம்படுத்தும் வகையில் அந்நிய முதலீட்டு வரம்பினை உயர்த்தும் திட்டத்திலும் மத்திய அரசு இருப்பதாக தெரிகிறது. தற்போது பொதுத்துறை வங்கிகளில் 20 சதவீதம் வரை அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுகிறது. இந்த அளவை 49 சதவீதமாக்க மத்திய அரசு பரிசீலனை செய்வதாகத் தெரிகிறது. ஒரு வேளை 49 சதவீதமாக உயர்த்தும் பட்சத்தில் பல்வேறு சட்ட சீர்த்திருத்தங்கள் செய்ய வேண்டி இருக்கும். இது குறித்த அறிவிப்பும் பட்ஜெட்டில் வெளியாகலாம் என்று தெரி கிறது.

புதிய வங்கி

பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் பிரச்சினையைத் தீர்க்க புதிய வங்கி அல்லது நிறுவனம் தொடங்கப்படலாம் என்று தெரிகிறது. இது குறித்து நாங்கள் பரிசீலனை செய்து வருகிறோம். ஆனால் இந்த விஷயத்தில் எதிர்கருத்துகளும் இருக்கின்றன என்று மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தற்போதைய நிலையில் இந்த புதிய வங்கி அல்லது நிறுவனம் தொடங்கும் முடிவு சிறப்பான யோசனை என்று பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைவர் உஷா அனந்தசுப்ரமணியன் தெரிவித்தார். அதே சமயத்தில் சில வங்கியாளர்கள் இந்த புதிய நிறுவனம் குறித்த தங்களது எதிர்கருத்தையும் தெரிவித்திருக்கிறார்கள்.

பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் பிரச்சினையைத் தீர்க்க புதிய வங்கி தேவை இல்லை. வங்கிகள் இந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளனர் என்று சமீபத்தில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x