Published : 25 Dec 2015 11:17 AM
Last Updated : 25 Dec 2015 11:17 AM

சிமென்ட் தொழிலில் இருந்து வெளியேறுகிறது ரிலையன்ஸ் இன்பிரா: பாதுகாப்பு துறையில் ரஷ்ய நிறுவனத்துடன் ஒப்பந்தம்

அனில் அம்பானி குழுமம் நடத்தி வரும் சிமென்ட் மற்றும் சாலை கட்டுமான தொழிலில் இருந்து வெளியேற முடிவெடுத்திருக்கிறது. இது குறித்த பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த வாரத்தில் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தொழிலில் நிறுவனம் 15,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்திருக்கிறது. கடன் அதிகரித்த சூழ்நிலையில் இந்த தொழில் இருந்து வெளியேற முடிவு செய்திருக்கிறது. கிடைக் கும் தொகையில் இருந்து பாது காப்பு உபகரணங்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட முடிவு செய்இன்துள்ளது.

இந்த நிறுவனங்களை வாங்க ஆரம்பத்தில் 15 நிறுவனங்கள் முன்வந்தன. இப்போது ஏழு நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

எந்த நேரமும் விற்பனை குறித்த அறிவிப்பு வெளியாகும். பிளாக்ஸ்டோன், கார்லைல் மற்றும் கேகேஆர் ஆகிய பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்கள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன.

பிரதமர் மோடியின் ரஷிய சுற்றுப்பயணத்தில் அனில் அம்பானியும் சென்றிருக்கிறார். இன்று இரவு இந்தியா திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால் அடுத்த வார தொடக்கத்தில் இந்த அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிமென்ட் நிறுவனத்தின் விற்பனை மூலம் ரூ. 5,000 கோடி முதல் ரூ. 6,000 கோடி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரிலையன்ஸ் சிமென்ட் நிறுவனம் 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் ஆண்டு உற்பத்தி திறன் 55 லட்சம் டன் ஆகும். மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரம் மற்றும் உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆலைகள் உள்ளன.

அதேபோல சாலை அமைக்கும் திட்டங்களையும் விற்க முடிவு செய்துள்ளது. இந்த தொழிலில் 8,800 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. 7 மாநிலங்களில் 11 திட்டங்கள் மூலம் 1,000 கிலோமீட்டர் சாலை அமைக்க இந்த நிறுவனம் திட்டமிட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.

டிபென்ஸ் ஒப்பந்தம்

ரிலையன்ஸ் இன்பிரா நிறுவ னத்தின் துணை நிறுவனம் ரிலையன்ஸ் டிபென்ஸ் ஆகும். இந்தியாவில் பாதுகாப்பு துறை யில் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனம் இது. பல முக்கிய ஆயுதங்கள் தயாரிப்பதற்கான உரிமம் இந்த நிறுவனத்தின் வசம் உள்ளன.

தற்போது ரஷிய நிறுவனமான அல்மாஸ் அன்ட்டேயுடன் ரிலையன்ஸ் டிபென்ஸ் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

இந்திய பாதுகாப்புத் துறைக்கு தேவையான வான் பாதுகாப்பு ஏவுகணை மற்றும் ராடர் தயாரிக்க இரு நிறுவனங்களும் ஒப்பந்தமிட்டுள்ளன. இதன் மூலம் 40,000 கோடி ரூபாய்க்கான தொழில் வாய்ப்பு உருவாகும் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல இரு நிறுவனங்களும் புதிய பாதுகாப்பு சாதனங்கள் உருவாக்க ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்துள்ளன.

இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவில் முக்கியமான மைல்கல் என்று ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி தெரிவித்தார். கடந்த மார்ச் 31-ம் தேதி வரை ரிலையன்ஸ் இன்பிரா நிறுவனத்துக்கு 25,100 கோடி ரூபாய் அளவுக்கு கடன் இருந்தது நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் ரிலையன்ஸ் இன்பிரா பங்கு 7.7 சதவீதம் உயர்ந்து 493 ரூபாயில் முடிவடைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x