Published : 02 Sep 2015 10:04 AM
Last Updated : 02 Sep 2015 10:04 AM

கார், மோட்டார் சைக்கிள் விற்பனை அதிகரிப்பு

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

மாருதி

கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஆகஸ்ட் மாத விற்பனை 6.4 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்தம் 1,17,864 கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனத் தயாரிப்புகளின் உள்நாட்டு விற்பனை 8.6 சதவீதம் அதிகரித்ததில் மொத்தம் 1,06,781 கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு இதே காலத்தில் 98,304 கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

நடுத்தர பிரிவு வாகனங்களான ஸ்விப்ட், எஸ்டிலோ, ரிட்ஸ், டிசையர் ஆகிய கார்களின் விற்பனை 11 சதவீதம் சரிந்ததில் மொத்தம் 41,461 கார்களே விற்பனையாகியிருந்தது.

செடான் டிசையர் டூர் மாடல் கார் விற்பனை இரு மடங்கு அதிகரித்துள்ளது. மொத்தம் 3,172 கார்கள் கடந்த மாதம் விற்பனையாகின. முந்தைய ஆண்டு இதே காலத்தில் 1,328 கார்களே விற்பனையாகியிருந்தது. சொகுசு கார் பிரிவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட எஸ்-கிராஸ் 4,500 கார்கள் விற்பனையானதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் ஏற்றுமதி 11 சதவீதம் சரிந்ததில் மொத்தம் 11,083 கார்களே ஏற்றுமதியாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 12,472 கார்கள் ஏற்றுமதியாகியிருந்தன. குஜராத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக முந்த்ரா துறைமுகத்திலிருந்து அனுப்ப வேண்டிய 500 கார்கள் ஏற்றுமதியாகாமல் போனதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹூண்டாய்

கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் நிறுவனத்தின் கார் விற்பனை ஆகஸ்ட் மாதத்தில் 13.5 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்தம் 54,608 கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் 48,111 கார்களை விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டில் இந்நிறுவனம் 40,505 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் விற்பனையான கார்களின் எண்ணிக்கை 33,750 ஆகும்.

நிறுவனத்தின் ஏற்றுமதி 1.79 சதவீதம் சரிந்துள்ளது. மொத்தம் 14,103 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவனம் 14,361 கார்களை ஏற்றுமதி செய்தது குறிப்பிடத்தக்கது.

டொயோடா

டொயோடா கிர்லோஸ்கர் நிறுவன வாகன விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்தம் 12,547 கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் 12,386 வாகனங்களை இந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

நிறுவனம் மொத்தம் 1,386 எடியோஸ் மாடல் கார்களை ஏற்றுமதி செய்திருந்தது.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட கேம்ரி மாடல் கார் விற்பனை அதிகரிப்புக்கு வழி வகுத்துள்ளதாக நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் மற்றும் இயக்குநர் என். ராஜா தெரிவித்தார்.

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா

இந்நிறுவனத்தின் வாகன விற்பனை 1.29 சதவீதம் அதிகரித்துள்ள மொத்தம் 35,634 வாகனங்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவனத்தின் வாகன விற்பனை 35,150 ஆக இருந்தது. ஏற்றுமதி 73 சதவீதம் அதிகரித்ததில் மொத்தம் 3,512 வாகனங்களை இந்நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவன வாகன ஏற்றுமதி 2,030 ஆகும். இந்நிறுவனத்தின் வர்த்தக வாகன விற்பனை 5.5 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்தம் 13,023 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் மொத்தம் 12,396 வாகனங்களை இந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

ராயல் என்பீல்டு

ஐஷர் குழுமத்தைச் சேர்ந்த ராயல் என்பீல்டு நிறுவனத்தின் விற்பனை 59% அதிகரித்துள்ளது. மொத்தம் 42,360 மோட்டார் சைக்கிளை இந்நிறுவனம் கடந்த மாதம் விற்பனை செய்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலத்தில் 26,643 மோட்டார் சைக்கிளை இந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது. உள்நாட்டில் இந்நிறுவனத் தயாரிப்பு விற்பனை 59.25 சதவீதம் அதிகரித்ததில் மொத்தம் 41,600 வாகனங்கள் விற்பனையாகி யிருந்தன. கடந்த ஆண்டு இதே காலத்தில் மொத்தம் 26,121 மோட்டார் சைக்கிளையே இந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

ஏற்றுமதி 45.59 சதவீதம் அதிகரித்தில் மொத்தம் 760 மோட்டார் சைக்கிளை ஏற்றுமதி செய்திருந்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவன ஏற்றுமதி 522 ஆக இருந்தது.

சுஸுகி மோட்டார் சைக்கிள்

இந்நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள் விற்பனை ஆகஸ்ட் மாதத்தில் 68 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்தம் 36,636 மோட்டார் சைக்கிளை விற்பனை செய்திருந்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவனத்தின் வாகன விற்பனை 21,862 ஆக இருந்தது.

கடந்த சில ஆண்டுகளாக நிறுவனத் தயாரிப்புகளுக்கு கிடைத்து வரும் வரவேற்பு காரணமாக விற்பனை அதிகரித்துவருவதாக நிறுவனத்தின் செயல் துணைத் தலைவர் அதுல் குப்தா தெரிவித்தார். இரட்டை வண்ணத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜிக்ஸர் மோட்டார் சைக்கிளுக்கு அதிக வரவேற்பு கிடைத் துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

டிவிஎஸ் மோட்டார்ஸ்

இந்நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள் விற்பனை கடந்த மாதம் ஒரு சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்தம் 2,27,653 வாகனங்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவன வாகன விற்பனை 2,25,064 ஆக இருந்தது. இந்நிறுவனம் 2,16,781 மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டரெட்டுகளை விற்பனை செய்துள்ளது. 10,872 ஆட்டோக்களை விற்பனை செய்துள்ளது.

ஹோண்டா மோட்டார் சைக்கிள்

இந்நிறுவனத்தின் விற்பனை 1.86 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 3,95,262 வாகனங்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தி்ல் இந்நிறுவன வாகன விற்பனை 3,88,016 ஆக இருந்தது. மோட்டார் சைக்கிள் விற்பனை 17 சதவீதம் சரிந்து 1,26,452 ஆக இருந்தது. ஸ்கூட்டரெட் விற்பனை 13 சதவீதம் அதிகரித்து 2,46,750-ஐத் தொட்டுள்ளது.

இதேபோல ஏற்றுமதி 28.62 சதவீதம் அதிகரித்ததில் 22,060 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே காலத்தில் 17,150 வாகனங்களை இந்நிறுவனம் ஏற்றுமதி செய்திருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x