Published : 29 Aug 2015 10:26 AM
Last Updated : 29 Aug 2015 10:26 AM

சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு மத்திய அரசின் உதவி அவசியம்: எஸ்பிஐ தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா வலியுறுத்தல்

சமூக பாதுகாப்பு திட்டங்கள் வெற்றியடையே வேண்டும் என்றால் அந்த திட்டங்கள் செயல் படுத்துவதற்கு ஏற்ப லாபகரமாக இருக்க வேண்டும். இதற்கு மத்திய அரசின் உதவி தேவை என்று பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது

பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா போன்றவை நீண்ட காலத்துக்கு செயல்பட வேண்டும் என்றால் அரசின் உதவி வங்கிகளுக்கு தேவை. இந்த திட்டம் லாபகரமாக இல்லை என்றால் அதனை தொடர முடியாது. அதற்கான வழியை மத்திய அரசு கண்டுபிடிக்க வேண் டும். வங்கி கணக்கு தொடங்கு வதை விட அந்த வங்கி கணக்கு களை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது, வங்கிகளுக்கு அந்த கணக்கு எப்படி வருமானத்தை கொடுக்கும் என்பதற்கான வழிமுறையை மத்திய அரசு கண்டுபிடிக்க வேண்டும்.

இது குறித்து அரசாங்கத்துடன் பேசி வருகிறோம். அரசாங்கம் எந்த உதவியும் செய்யும் என்று நான் நினைக்கவில்லை. ஆனாலும் எப்படியெல்லாம் இந்த திட்டத்தை செயல்படுத்தலாம் என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம்.

ஒவ்வொரு கணக்கு தொடங்கும் போதும் அதற்கு கணிசமாக செலவாகிறது. இந்த வங்கி கணக்கு லாபகரமாக இல்லை என்றால் இந்த செலவு எங்களுக்கு திரும்ப கிடைக்காது. இதுபோன்ற கணக்குகளுக்கு நேரடி மானியத் தொகையை பரிமாற்றம் செய்யும் போது சிறிதளவு கமிஷனை வங்கி எதிர்பார்க்கிறது.

நேரடி மானியத்துக்கு கமிஷன் கிடைக்கும் போது அந்த கணக்கு தொடங்கியதற்கான செலவு திரும்ப கிடைக்கும். அத்தகைய வங்கிக் கணக்குகளைப் பராமரிக் கலாம். இது போல பல திட்டங் கள் தொடங்கப்படும் போது, ஏழைகளுக்கும் பணம் நேரடியாக கிடைக்கும், அந்த வங்கி கணக்கு தொடர்ந்து செயல்பாட்டில் இருக் கும். இதற்கு நிதி சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குறிப்பிட்ட மக்களுக்கு தகுந்தது போல நிதிதிட்டங்களை உருவாக்க வேண்டும். அப்போது இந்த வங்கி கணக்குகளை வங்கி கள் எளிதாக நிர்வகிக்க முடியும்.

இது உடனே நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் இப்போதே அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நாங்கள் காத்திருக்க தயாராக இருக்கிறோம். எஸ்பிஐ வங்கிகள் தொடங்கப்பட்டிருக்கும் ஜன்தன் யோஜானாவில் 45 சதவீத கணக்குகள் செயல்பாட்டில் உள் ளன. எங்களுக்கு பல வங்கி கணக்குகள் மிகவும் பிற்படுத் தப்பட்ட மாவட்டங்களில் இருந்து வந்திருப்பதால் இந்த சதவீதம் குறைவாக இருக்கிறது என்றார்.

தனியார் வங்கிகளுடன் போட்டி போட வேண்டும் என்றால் பொதுத்துறை வங்கிகளுக்கு அரசின் உதவி தேவை என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா திட்டம் தொடங்கி நேற்றுடன் ஒரு வருடம் முடிவடைகிறது. இதுவரை 17.5 கோடி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இந்த கணக்குகளில் இதுவரை 22,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருப்பதாக நிதி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. ஒரு குடும்பத்துக்கு ஒரு வங்கி கணக்கு என்பதை ஜம்மு காஷ்மீர் மாநிலம் தவிர பெரும்பாலான மாநிலங்களில் எட்டிவிட்டோம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x