Published : 07 Nov 2019 07:29 PM
Last Updated : 07 Nov 2019 07:29 PM

மத்திய மறைமுக வரிகள் வாரியத்தின் ஆவண அடையாள எண் வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது

புதுடெல்லி

மத்திய மறைமுக வரிகள் வாரியத்தின் ஆவண அடையாள எண் (DIN) நாளை, 8 நவம்பர், 2019 வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது.

மறைமுக வரிகள் நிர்வாகத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக கருதப்படும் DIN நடைமுறை, மத்திய நிதி மற்றும் கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் வழிகாட்டுதலில் உருவாக்கப்பட்டுள்ளது.

மத்திய மறைமுக வரிகள் வாரியத்தால், இனி அனுப்பப்படும் அனைத்துத் தகவல்களும், ஆவண அடையாள எண் கொண்டதாக இருக்கும். நேரடி வரிகள் நிர்வாகத்தில் இந்த ஆவண அடையாள எண் நடைமுறை ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது. மறைமுக வரிகள் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பத்தை பரவலாக பயன்படுத்தி இந்த அடையாள எண் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

புதிய நடைமுறை அமலுக்கு வந்திருப்பதையடுத்து, மறைமுக வரிகள் வாரியத்தால் இனி மேற்கொள்ளப்படும் சோதனைகள், சம்மன், கைது உத்தரவுகள், ஆய்வு நோட்டீஸ் மற்றும் கடிதங்கள் தொடர்பான விசாரணைக்கு ஆவண அடையாள எண் பயன்படுத்தப்பட உள்ளதாக மத்திய வருவாய்த் துறை செயலாளர் டாக்டர் அஜய் பூஷன் பாண்டே தெரிவித்துள்ளார்.

ஜி.எஸ்.டி அல்லது சுங்கத்துறை அல்லது மத்திய கலால் துறையால் அனுப்பப்படும் அனைத்து கடிதப் போக்குவரத்துகளிலும், கணினி மூலம் உருவாக்கப்பட்ட ஆவண அடையாள எண் இல்லாத கடிதங்கள் செல்லாதவையாக கருதப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தப் புதிய நடைமுறை, முறையான தணிக்கை மேற்கொள்வதற்கான டிஜிட்டல் புள்ளிவிவரப் பட்டியல் ஒன்றை தயாரிக்க உதவும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் திரு பிரணாப் கே தாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x