Published : 06 Nov 2019 10:57 AM
Last Updated : 06 Nov 2019 10:57 AM

ரூ.450 கோடி முதலீட்டில் தமிழகத்தில் கோனே நிறுவனம் லிப்ட் தயாரிப்பு ஆலை திறப்பு

பெரும்புதூரில் கோனே நிறுவனத்தின் புதிய ஆலை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்றோர் (இடமிருந்து) கோனே நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவர் ஆக்செல் பெர்க்லிங், தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், பின்லாந்து நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹெச்.இ.பெக்கா ஹாவிஸ்டா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், கோனே நிறுவனத்தின் தலைவர் ஆன்ட்டி ஹெர்லின், கோனே நிறுவனத்தின் சிஇஓ ஹென்ரிக் எர்னூர்த், கோனே நிறுவனத்தின் இந்தியப் பிரிவு நிர்வாக இயக்குநர் அமித் கோஸ்ஸெயின்.

சென்னை

லிப்ட் தயாரிப்பு நிறுவனமான கோனே, தமிழகத்தில் அதன் புதிய உற்பத்தி ஆலையை நேற்று திறந்துள்ளது. ரூ.450 கோடி முதலீட்டில் 50 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் ஆசியப் பகுதியிலேயே மிகப் பெரிய ஆலையாக இது நிறுவப்பட்டுள்ளது. பின்லாந்தை தலைமையிடமாகக் கொண்ட கோனே நிறுவனம், 1984-ம் ஆண்டு முதல்இந்தியாவில் செயல்பட்டு வருகிறது. இந்திய அளவில் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனம், வங்கதேசம், இலங்கை,பூடான், நேபாளம் ஆகிய அண்டை நாடுகளுக்கு லிப்டுகளை ஏற்றுமதி செய்து வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்பதூரில் அதன் புதிய உற்பத்தி ஆலையை திறந்துள்ளது.

நேற்று நடந்த இதன் திறப்பு விழாவில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பின்லாந்து நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹெச்.இ. பெக்கா ஹாவிஸ்டா, தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழகம் பயன் பெறும்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசுகையில்,‘இந்தியா 2025-ம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய இலக்கு நிர்ணயித்துள்ளது. ``மேக்இன் இந்தியா'', ``திறன் இந்தியா'',``டிஜிட்டல் இந்தியா'' ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுஅந்த இலக்கை அடைய உள்ளது. இந்தியாவின் வளர்ச்சிக்கு நிறுவனங்களின் முதலீடுகள் மிக அவசியம். அந்த வகையில் கோனே நிறுவனத்தின் இந்தப் புதிய முதலீடு நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும். இந்நிறுவனம் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

தமிழகம் பெருமளவில் பயன்பெறும்’ என்று தெரிவித்தார். பின்லாந்து நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹெச். இ.பெக்கா ஹாவிஸ்டா பேசுகையில், இந்தியா பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக உள்ளது. இந்தியாவும் பின்லாந்தும் வலுவான வர்த்தக உறவை கொண்டிருக்கின்றன. இந்தப் புதிய முதலீடு மூலம் அந்த உறவு மேலும் வலுப்பெறும் என்று தெரிவித்தார்.

தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேசுகையில், தொழில் கட்டமைப்பில் இந்திய அளவில் தமிழகம் முன்னிலையில் இருக்கிறது. கடந்தசில ஆண்டுகளில் பல்வேறு புதிய முதலீடுகள் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. அந்த வகையில் கோனே நிறுவனத்தின் இந்தப் புதிய ஆலை தமிழக வளர்ச்சிக்கு பங்களிக்கக் கூடியதாக அமையும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x