Published : 07 Oct 2019 11:42 AM
Last Updated : 07 Oct 2019 11:42 AM

6-வது நாளாகக் குறைந்த பெட்ரோல், டீசல் விலை: என்ன காரணம்?

சென்னை

சென்னையில் தொடர்ந்து ஆறாவது நாளாக இன்று (அக். 7), பெட்ரோல், டீசலின் விலை குறைந்துள்ளது. பெட்ரோல் விலை இன்று 12 காசுகள் குறைந்து, லிட்டர் ரூ.76.62-க்கும், டீசல் விலை 12 காசுகள் குறைந்து, லிட்டர் ரூ.70.69-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் விலை உயர்வால், இந்தியாவில் கடந்த மூன்று வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. சவுதி அரேபியாவில் உள்ள அரோம்கோ நிறுவனத்தின் அப்கய்க் மற்றும் குராயிஸ் பகுதிகளில் உள்ள இரு எண்ணெய் ஆலைகள் மீது கடந்த செப். 14-ம் தேதியன்று ஆளில்லா விமானங்கள் மூலம் ஏமன் கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலால் அங்கு பெரும் சேதம் ஏற்பட்டு, 50 சதவீத உற்பத்தி நிறுத்தப்பட்டது.

நாள் ஒன்றுக்கு 57 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 10 சதவீதம் அதிகரித்தது. இனிவரும் காலங்களிலும் இந்த விலை அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

சர்வதேச அளவில் ஏற்பட்ட விலை ஏற்றம் இந்திய சந்தையிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. தினந்தோறும் தொடர்ந்து விலை உயர்ந்து வந்த நிலையில், கடந்த 6 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை குறைந்து வருகிறது.

என்ன காரணம்?

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக் குறைவே இந்திய சந்தையிலும் எதிரொலித்துள்ளது. சவுதி, அராம்கோ நிறுவனத்தில் தற்போது நிலைமை சீரடைந்துள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளதால், பெட்ரோல், டீசல் உற்பத்திக்கான தேவை குறைந்துள்ளது. இதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை குறைந்தது.

இந்நிலையில் இன்று (அக். 7) 1 லிட்டர் பெட்ரோலின் விலை 12 காசுகள் குறைந்து 76.62 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. அதேபோல டீசலின் விலையும் குறைந்துள்ளது. ஒரு லிட்டர் டீசலின் விலை 12 காசுகள் குறைந்து, ரூ.70.69-க்கு விற்பனை ஆகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x