

புதுடெல்லி
நாடுமுழுவதும் கட்டிமுடிக்கப்படாமல் உள்ள வீடுகள் கட்டும் திட்டத்துக்கு உதவி செய்வதற்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திட்டமத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டில் நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி 5 சதவீதமாகக் குறைந்தது. முதல் காலாண்டில் உற்பத்தித் துறை கடந்த ஆண்டு முதல் காலாண்டில் 12.1 சதவீதம் இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 0.6 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது.
பொருளாதார வளர்ச்சியைத் தீர்மானிக்கும் முக்கிய 8 துறைகளின் வளர்ச்சியும் ஜூலை மாதத்தில் 2.1 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது. இந்த சரிவை சரி செய்வதற்காக பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
மேலும், ஆட்டோமொபைல் துறையின் ஆகஸ்ட் மாத விற்பனையில் அனைத்து நிறுவனங்களின் விற்பனையும் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதையடுத்து பல்வேறு துறைகளிலும் பொருளாதார சீர்த்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ரியல் எஸ்டேட் துறையின் நெருக்கடியை தீர்க்க சலுகைகளை அளித்து வருகிறது. அந்த வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் கூறியதாவது:
நாடுமுழுவதும் பல்வேறு காரணங்களால் முடிக்கப்படாமல் கட்டுமான நிலையில் உள்ள வீடுகளுக்கு கடன் உதவி அளிக்கும் நோக்கத்துடன் 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட உள்ளது. நடுத்தர வருவாய் பிரிவு வீடுகள் கட்டுவதற்கான நிதியுதவியை சிறப்பு திட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
பிரதமர் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு வாங்குபவர்களுக்கான விதிமுறைகளில் மாற்றங்கள் செய்ய முடிவு செய்துள்ளோம். இதுதொடர்பாக ரிசர்வ் வங்கியுடன் பேசி வருகிறோம்.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.